மத்திய மனிதவளத் துறை, ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவில் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுவருகிறது. இந்த ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளன.
கற்றலுக்கான வசதிகள், ஆராய்ச்சிக்கான வாய்ப்புகள், தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை, கல்வி நிறுவனத்தின் சமூகத் திட்டங்கள், கல்வி நிறுவனம் குறித்து பொதுமக்களின் மதிப்பிடல் என்ற ஐந்து பிரிவுகளில் மதிப்பிடப்பட்டு, பல்கலைக்கழகங்கள், பொறியியல், கலைக் கல்லூரிகள், மேலாண்மைக் கல்லூரிகள், பார்மசி, மருத்துவக் கல்வி, கட்டடக்கலை, சட்டம் மற்றும் அனைத்தும் ஒருங்கிணைந்த தரவரிசை என ஒன்பது பிரிவுகளில் மத்திய மனிதவளத் துறை தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்தத் தரவரிசைப் பட்டியலின் பல பிரிவுகளில் தமிழகத்தைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் இடம்பிடித்திருக்கின்றன. ஒட்டுமொத்தக் கல்வி நிறுவனப் பட்டியலில் முதல் 100 இடங்களை தமிழகத்தில் உள்ள 22 கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.
பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் தமிழ்நாட்டைச் சார்ந்த 26 பல்கலைக்கழகங்களும், பொறியியல் பிரிவில் 29 கல்வி நிறுவனங்களும், கலைக்கல்லூரி பிரிவில் 57 கல்வி நிறுவனங்களும், மேலாண்மைப் பிரிவில் 11 கல்வி நிறுவனங்களும், பார்மசி பிரிவில் 9 கல்லூரிகளும், மருத்துவக் கல்வியில் 5 கல்லூரிகள் எனப் பட்டியலில் அதிக இடத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரிகளே இடம்பிடித்துள்ளன.
சென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, பொறியியல் பிரிவில் முதல் இடத்தையும், ஒட்டுமொத்தப் பிரிவில் இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கிறது. பல்கலைக்கழக வரிசையில அண்ணா பல்கலைக்கழகம் 4-வது இடத்தையும், பொறியியல் பிரிவில் 8-வது இடத்தையும், ஒட்டுமொத்தப் பிரிவில் 10-வது இடத்தையும், மேலாண்மை படிப்பில் 28-வது இடத்தையும், கட்டடக் கலைப் படிப்பில் 6-வது இடத்தையும் பிடித்திருக்கிறது.
கோவையில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகமான அமிர்தா வித்யாபீடம், பல்கலைக்கழகங்கள் வரிசையில் 8-வது இடத்தையும், ஒட்டுமொத்தப் பிரிவில் 15-வது இடத்தையும் பெற்றிருக்கிறது. பாரதியார் பல்கலைக்கழகம் பல்கலைக்கழக தரவரிசையில் 13-வது இடத்தையும், ஒட்டுமொத்த வரிசையில் 20-வது இடத்தையும் பெற்றுள்ளது.
வேலூரில் உள்ள வி.ஐ.டி கல்வி நிறுவனம், பொறியியல் கல்வி நிறுவனங்களின் வரிசையில் 16-வது இடத்தையும், பல்கலைக்கழகங்கள் வரிசையிலும் 16-வது இடத்தையும், ஒட்டுமொத்தத் தரவரிசையில் 24-வது இடத்தையும் பிடித்திருக்கிறது. பல்கலைக்கழகப் பிரிவில் சென்னைப் பல்கலைக்கழகம் 18-வது இடத்தையும், ஒட்டுமொத்தக் கல்வி நிறுவனங்களின் பிரிவில் 29-வது இடத்தையும் பெற்றுள்ளது.
திருச்சியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி, பொறியியல் பிரிவில் 11-வது ரேங்கையும், ஒட்டுமொத்தக் கல்வி நிறுவனங்களின் பிரிவில் 31-வது ரேங்கையும் பிடித்துள்ளது. பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் சென்னையில் உள்ள நிகர்நிலைக் கல்வி நிறுவனமான பாரத் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹையர் எஜுகேஷன் & ரிசர்ச் கல்வி நிறுவனம் 21-வது இடத்திலும், ஒட்டுமொத்தப் பிரிவில் 35-வது இடத்திலும் உள்ளது.
பல்கலைக்கழகத் தரவரிசையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 25-வது இடத்தையும், ஒட்டுமொத்தத் தரவரிசையில் 40-வது இடத்தையும் பெற்றுள்ளது. காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகம் பல்கலைக்கழக தரவரிசையில் 27-வது இடத்தையும், ஒட்டுமொத்தத் தரவரிசையில் 43-வது இடத்தையும் பெற்றுள்ளது.
தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் பொறியியல் தரவரிசையில் 33-வது இடத்தையும், பல்கலைக்கழகப் பிரிவில் 36-வது இடத்தையும், ஒட்டுமொத்தக் கல்வி நிறுவனங்கள் வரிசையில் 54-வது இடத்தையும், மேலாண்மை படிப்பில் 67-வது இடத்தையும் பிடித்திருக்கிறது. மருத்துவக் கல்வியில் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக உள்ள ஶ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி 10-வது இடத்தையும், பார்மசி கல்லூரிகளின் வரிசையில் 21-வது இடத்தையும், பல்கலைக்கழகங்கள் வரிசையில் 40-வது இடத்தையும், ஒட்டுமொத்தப் பிரிவில் 62-வது இடத்தையும் பெற்றுள்ளது.
எஸ்.ஆர்.எம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் மருத்துவக் கல்வி நிறுவன பிரிவில் 22-வது இடத்தையும், பொறியியல் பிரிவில் 46-வது இடத்தையும், பல்கலைக்கழகப் பிரிவில் 41-வது இடத்தையும், ஒட்டுமொத்த பிரிவில் 63-வது இடத்தையும் பிடித்துள்ளது.
பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி பொறியியல் பிரிவில் 29-வது இடத்தையும், ஒட்டுமொத்த தரவரிசையில் 64-வது இடத்தையும், மேலாண்மைப் பிரிவில் 33-வது இடத்தையும் பிடித்துள்ளது. மருத்துவக் கல்லூரி தரப்பிரிவில் பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி 21-வது இடத்திலும், ஒட்டுமொத்த தரவரிசையில் 75-வது இடத்தையும் பிடித்துள்ளது. பி.எஸ்.ஜி. பார்மசி கல்லூரி பார்மசி பிரிவில் 41-வது இடத்தில் உள்ளது. கலைக்கல்லூரி பிரிவில் பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி 11-வது வரிசையிலும், பி.எஸ்.ஜி. ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி 16-வது இடத்தைப் பெற்றுள்ளது.
சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஒட்டுமொத்த பிரிவில் 68-வது இடத்தையும், பல்கலைக்கழகங்கள் பிரிவில் 45-வது இடத்தையும், பொறியியல் பிரிவில் 37-வது இடத்தையும் பிடித்துள்ளது. சவீதா மருத்துவக் கல்லூரி ஒட்டுமொத்த பிரிவில் 70-வது இடத்தையும், பல்கலைக்கழகப் பிரிவில் 46-வது இடத்தையும் பிடித்துள்ளது.
சென்னைப் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள எஸ்.எஸ்.என் கல்லூரி ஒட்டுமொத்த பிரிவில் 73-வது இடத்தையும், பொறியியல் பிரிவில் 36-வது இடத்தையும், மேலாண்மைப் பிரிவில் 69-வது இடத்தையும் பிடித்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், ஒட்டுமொத்தப் பிரிவில் 81-வது இடத்தையும் பல்கலைக்கழகப் பிரிவில் 54-வது இடத்தையும் பெற்றுள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கல்லூரி, ஒட்டுமொத்தப் பிரிவில் 92-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஒட்டுமொத்தப் பிரிவில் 94-வது இடத்தையும், பல்கலைக்கழகங்களுக்கான பிரிவில் 67-வது இடத்தையும் பெற்றுள்ளது.
மதுரையில் உள்ள தியாகராஜர் தொழில்நுட்பக் கல்லூரி, ஒட்டுமொத்தப் பிரிவில் 95-வது இடத்தையும் பொறியியல் பிரிவில் 39-வது இடத்தையும் பெற்றிருக்கிறது. ஒட்டுமொத்தப் பிரிவில் 101-150 இடத்துக்குள் தமிழகத்தைச் சேர்ந்த 10 கல்லூரிகள் இடம்பிடித்திருக்கின்றன. சென்னையில் உள்ள பி.எஸ்.ரஹ்மான் அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரி, 101-வது இடத்தையும் பொறியியல் பிரிவில் 79-வது இடத்தையும், சத்தியமங்கலத்தில் அமைந்துள்ள பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி, ஒட்டுமொத்த பிரிவில் 102-வது இடத்தையும் பொறியியல் பிரிவில் 76-வது இடத்தையும், கோவையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி, ஒட்டுமொத்தப் பிரிவில் 112 இடத்தையும் பொறியியல் பிரிவில் 93-வது இடத்தையும் பிடித்துள்ளன.
சென்னைப் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள இந்துஸ்தான் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஒட்டுமொத்தப் பிரிவில் 116-வது இடத்தையும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி 131-வது இடத்தையும், ஶ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள சவீதா பொறியியல் கல்லூரி 135-வது இடத்தையும், சேலத்தில் உள்ள சோனா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி 139-வது இடத்திலும், கோவையில் உள்ள ஶ்ரீகிருஷ்ணா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி 140-வது இடத்திலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஶ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி 142-வது இடத்திலும், சென்னை ஆவடியில் அமைந்துள்ள வேல் டெக் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் 147-வது இடத்தையும் பெற்றுள்ளன.
பல்கலைக்கழக தரவரிசையில் காந்தி கிராமம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் 79-வது இடத்தையும், சென்னையில் உள்ள மீனாட்சி நிகர்நிலைப் பல்கலைக்கழகம் 88-வது இடத்தையும், கோவையில் உள்ள காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் 89-வது இடத்தையும், சேலத்தில் அமைந்துள்ள பெரியார் பல்கலைக்கழகம் 90-வது இடத்தையும் பெற்றுள்ளன.
கோவையில் உள்ள அவினாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் 104-வது இடத்தையும், திருவாரூரில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகம் 108-வது இடத்தையும், சென்னைப் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள செட்டிநாடு நிகர்நிலை மருத்துவக் கல்லூரி 109-வது இடத்திலும், ஶ்ரீவில்லிபுத்தூரில் கலசலிங்கம் கல்வி நிறுவனம் 124-வது இடத்திலும், சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் 127-வது இடத்திலும், திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 132-வது இடத்தையும் பிடித்துள்ளது.