நீர் மேலாண்மை; வடிகால் அமைப்பு; சுடுமண் குழாய்! கீழடி 5-ம் கட்ட அகழாய்வு!

நீர் மேலாண்மை; வடிகால் அமைப்பு; சுடுமண் குழாய்! கீழடி 5-ம் கட்ட அகழாய்வு!

கீழடி அகழாய்வு மூலம் சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே வைகைக் கரை நாகரிகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. கீழடி அகழாய்வில் கிடைக்கும் பொருள்கள், தமிழர் நாகரிகத்தின் தொன்மையை எடுத்துரைப்பதாக இருக்கின்றன. தமிழகத்தில் தொல்லியல்துறை சார்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டாலும், கீழடி ஆய்வு மிகப்பெரியது எனக் கூறப்படுகிறது. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தமிழி எழுத்துகள் 2,600 ஆண்டுக்கு முற்பட்டவை என ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள தொல்லியல் துறையின் பீட்டா பகுப்பாய்வு மையம் உறுதி செய்தது.

பானை ஓடுகள், தந்தங்களால் செய்யப்பட்ட அணிகலன்கள், நீர் செல்வதற்கான குழாய்கள், முழுமையான பானைகள், நீண்ட சுவர்கள் போன்றவை ஆய்வில் கிடைத்துள்ளன. இந்நிலையில், கீழடியில் நடந்த ஐந்தாம் கட்ட அகழாய்வில், நகர நாகரிகத்தின் கூறுகளில் ஒன்றான வடிகால் அமைப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.

கீழடியில், ஓர் அகழாய்வுக் குழியில் 47 செ.மீ ஆழத்தில் பானையின் வாய் விளிம்பு போன்ற அமைப்பு தென்பட்டுள்ளது. சிவப்பு வண்ணத்தில் செம்மையாக வடிவமைக்கப்பட்டுள்ள இரண்டு சுடுமண் குழாய்கள் ஒன்றுடன் ஒன்று இணைத்து, நன்கு பொருத்திய நிலையில் இருந்துள்ளது. ஒவ்வொரு குழாயும் 60 செ.மீ நீளமும் 20 செ.மீ விட்டமும் கொண்டுள்ளது. ஒவ்வொன்றின் மேல்பாகத்தில், ஐந்து விளிம்புகள் காணப்படுகின்றன. இவ்விரண்டு குழாய்களிலும் உள்ள 10 விளிம்புகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து, சுருள் வடிவக் குழாய் போன்று காணப்படுகிறது. இவை நன்கு பொருத்தப்பட்டிருப்பதால், பாதுகாப்பாக நீர் செல்வதற்கான வடிகால் குழாய் அமைப்பாகப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

அதேபோல், அகழாய்வுப் பணியின்போது 52 செ.மீ ஆழத்தில் சில கூரை ஓடுகள் செங்குத்தாக அடுக்கப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், செங்கல் கட்டுமானம் ஒன்றும் வெளிப்பட்டுள்ளது. அகழாய்வுப் பணியின் இறுதிக் கட்டத்தில், சுருள் வடிவிலான சுடுமண் குழாயின் கீழே பீப்பாய் வடிவிலான மூன்று சுடுமண் குழாய்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்திய நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. இவை, வடிவத்தில் வேறுபட்டுக் காணப்படுவதால், தனித்தனி தேவைகளுக்குப் பயன்பட்டிருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. கீழடுக்கில் பீப்பாய் வடிவிலான குழாயின் நுழைவுப் பகுதியில், வடிகட்டி ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வடிகட்டியின் மூன்று பாகங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இந்தக் குழாயின் இறுதிப் பகுதி, இரண்டு அடுக்கு கொண்ட பானையில் சேர்கிறது. இதில் நீர் சேமித்திருக்க வேண்டும்.

அதேபோல், திறந்த நிலையில் நீர் செல்லும் வகையில், 50 செ.மீ ஆழத்தில் வடிகால் வெளிப்பட்டுள்ளது. இச்செங்கல் கட்டுமானம் 11 அடுக்குகளுடன் 5.8 செ.மீ நீளமும் 1.6 செ.மீ அகலமும் கொண்டுள்ளது. இது, தண்ணீர் எளிதாக வெளியில் செல்லும் வகையில் அமைக்கப்பட்ட திறந்த நிலையிலான வடிகால் அமைப்பாகக் காணப்படுகிறது. இரண்டாம் கட்ட அகழாய்வின்போது, செங்கல் கட்டுமானம், நீர் வடிகால் அமைப்பு, தொட்டி ஆகியவை வெளிப்பட்ட பகுதியின் தென்பகுதியில், தற்போது இந்தக் கட்டுமானங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

ஒரு நகர நாகரிகத்தின் கூறுகளாக செங்கல் கட்டுமானங்கள், குடியிருப்புப் பகுதியின் பரப்பளவு, உள்நாட்டு வெளிநாட்டு வாணிபத் தொடர்பு, தொழிற்கூடங்கள், எழுத்தறிவு நிலை, முதிர்ச்சிபெற்ற சமூகப் பயன்பாட்டுக்கான அலங்காரப் பொருள்கள் ஆகியவை தொல்லியல் அறிஞர்களால் பட்டியலிடப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான கூறுகள், கீழடி அகழாய்வில் வெளிப்பட்டுள்ளன. கீழடியில் கிடைத்துள்ள திறந்த நிலையிலான வடிகால் அமைப்பு, வடிகட்டியுடன் இணைத்து பீப்பாய் வடிவிலான சுடுமண் குழாய் மற்றும் பாதுகாப்பான நீரை எடுத்துச்செல்லும் குழாய்கள் ஆகிய இம்மூன்று வடிகால் அமைப்புகளும் இந்த அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சங்க கால மக்கள், நீர் மேலாண்மையில் எத்தகைய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதை இது பறைசாற்றுகிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: