பழந்தமிழரின் உயர்ந்த வாழ்க்கை!

பழந்தமிழரின் உயர்ந்த வாழ்க்கை!

பழந்தமிழரின் உயர்ந்த வாழ்க்கை!

பத்துப்பாட்டு பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கையைச் சித்தரித்துக் காட்டும் காலப் பெட்டகமாகத் திகழ்கிறது. இதில் பல்வேறு தொழில்களைச் செய்த மக்களின் வாழ்க்கையானது அவர்கள் செய்த தொழில்களின் வாயிலாக எடுத்துரைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

நெசவுத் தொழில், சிற்பத்தொழில், ஓவியத் தொழில், அணிகலன்கள் செய்யும் தொழில் உள்ளிட்ட பல தொழில்கள் பண்டைத் தமிழர் மத்தியில் சிறந்து விளங்கின. இவற்றைப் பற்றிய செய்திகள் பத்துப் பாட்டில் புலவர் பெருமக்களால் வாழ்க்கைப் பதிவுகளாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


சங்க காலத் தமிழர்கள் பருத்தி நூல் நெசவிலும் பட்டு நூல் நெசவிலும் சிறந்து விளங்கினர். இதனை ஆற்றுப்படை நூல்கள் தெளிவுறுத்துவது குறிப்பிடத்தக்கது. பொருநராற்றுப்படையில்,

‘நோக்குநுழை கல்லா நுண்மைய பூக்கனிந்து அரவுரியன்ன அறுவை” – (பொருந, 82-83 வது வரிகள்)

என இடம்பெற்றுள்ளது. கண்ணால் காண முடியாத மெல்லிய நூலால் நெய்யப்பட்டது. அழகான பூவேலைகள் செய்யப்பட்டது. பாம்பின் தோலைப் போல அவ்வளவு மென்மையும், வழவழப்பும், பளபளப்பும் அமைந்தது எனப் பண்டைத் தமிழரால் நெய்யப்பட்ட துணியின் சிறப்பை பொருநராற்றுப்படை கூறுகின்றது.

பண்டைக்காலத் தமிழர்கள் அழகிய பட்டாடைகளை நெய்தனர். பணம் படைத்தவர்கள், அழகான கரைபோடப்பட்ட பட்டாடைகளை அணிந்தனர். இத்தகைய கரைபோட்ட பட்டாடைகளை திறமையுடன் தமிழர்கள் நெய்தனர் என்ற கருத்து.

“கொட்டைக் கரைய பட்டுடை நல்கி’ – (பொருநர் 155வது வரி) என பொருநராற்றுப்படையில் இடம்பெற்றுள்ளது.

உலகில் உயர்ந்தது உழவுத் தொழிலாகும். அத்தொழில் பண்டைக் காலம் முதல் சிறப்பாக தமிழர் மத்தியில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. சோழ நாட்டில் நெல் அதிகம் விளைந்தது. அந்நாட்டில் ஒரு வேலி நிலத்தில் ஆயிரம் கலம் நெல் விளைந்ததாகப் பொருநராற்றுப்படை,

“சாலி நெல்லின் சிறைகொள், வேலி ஆயிரம் விளையுட்டாகக் காவிரி புரக்கும் நாடு” (246-248 வது வரிகள்)

என்று கூறுகிறது. ஒரு வேலி என்பது ஆறு ஏக்கரும் மூன்றில் இரண்டு பாக ஏக்கரும் கொண்டதாகும். ஒரு கலம் என்பது இருபத்து நான்கு படிகொண்டது. உழவர் பெருமக்கள் கடுமையாக உழைத்து நெல் உற்பத்தியை அதிகப்படுத்தினர் என்பதை பொருநராற்றுப்படையின் வாயிலாக நன்கு உணரலாம்.

தச்சர், கொல்லர், பூ விற்போர், நெசவாளர், உழவர் உள்ளிட்ட பல தொழிலாளர்கள் வாழ்ந்தனர். மதுரை நகரில் பலவகைத் தொழிலாளர்கள் வாழ்ந்தனர் மதுரை மாநகரில் அறுத்தசங்கை வளையல் முதலிய அணிகலன்களாகக் கடைபவர்கள் இருந்தனர். இரத்தினங்களிலே துளையிட்டு அவைகளை மாலையாகக் கோர்த்துக் கொடுப்போர் இருந்தனர். புடம்போட்டு எடுத்த பொன்னால் நல்ல அணிகலன்களைச் செய்யும் நகை செய்யும் தொழிலாளர்கள் இருந்தனர்.

புடவைகளை விலை கூறி விற்கும் வியாபாரிகள், செம்பை நிறுத்து விலைக்கு வாங்கும் செம்பு வணிகர்கள், மலர்கள், அகில், சந்தனம் ஆகியவற்றை விற்பனை செய்வோரும் எதனையும் உள்ளது போன்று வரையும் நுண்ணறிவு படைத்த ஓவியம் எழுத வல்லோரும் இருந்தனர். இதனை

“கோடுபோழ் கடைநரும் திருமணி குயினரும் சூடுறு நன்பொன் சுடர் இழை புனைநரும் பொன்உரை காண்மரும், கலிங்கம் பகர்நரும் செம்புநிறை கொண்மரும் கலிங்கம் பகர்நரும் செம்புநிறை கொண்மரும், வம்புநிறை முடிநரும் பூவம்புகையும் ஆயும் மாக்களும், எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின் கண்ணுள் விளைஞரும்” – (மதுரைக்காஞ்சி, 611- 618 வது வரிகள்) என்ற மதுரைக்காஞ்சி வரிகள் தெளிவுற எடுத்துரைக்கின்றன.

தமிழகத்தில் கட்டிடக்கலைத் திறம் வாய்ந்த வல்லுநர்கள் பலர் வாழ்ந்தனர். அவர்கள் பெரிய கட்டிடங்களைக் கட்டுவதற்கான திட்டங்களை வீடு கட்டுவோர்க்கு வகுத்துக் கொடுப்பார்கள். அவர்கள் மனையைச் சதுரிக்கும் போது திசைகளை வணங்கி தெய்வத்திற்குப் பலிகொடுப்பர்.

அவ்வல்லுநர்கள், சூரியன் ஒரு பக்கத்திலும் சாயாது நிற்கும் நடுப்பகலில் தான் மனையைச் சதுரிப்பர். மனையடி சாஸ்திரங்களைக் கற்ற அவர்கள் கயிறினைக் கொண்டு தற்காலத்தில் செய்வது போன்று மனையைச் சதுரிப்பார்கள்.

மன்னர்களுக்கு அரண்மனைகளைக் கட்டத் தொடங்கும் போது கட்டடக்கலை நிபுணர்கள், திசைகளையும், தெய்வத்தையும் வணங்கி வேண்டிக் கொண்டு மன்னர்கள் வாழ்வதற்கு ஏற்றவாறு அரண்மனையில் பல்வேறு பகுதிகளை அமைப்பார்கள் என்பதனை,

“ஒரு திறம் சாரா அரைநாள் அமயத்து நூலறிபுலவர் நுண்ணிதின் கயிறிட்டுத் தேஎங்கொண்டு தெய்வம் நோக்கிப் பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்பமனை வகுத்து” – (நெநல்வாடை, 75- 78வது வரிகள்) என நக்கீரர் விளக்குகிறார்.

மேலும் அரசனுக்குரிய அரண்மனையைச் சுற்றிய கோட்டை வாயிலை கட்டிட வல்லுநர்கள் அமைத்த விதத்தையும் நக்கீரர் நெடுநல்வாடையில் தெளிவுறுத்துகிறார்.

“இரட்டைக் கதவுகள் நல்ல வேலைப்பாடமைந்தவை. உட்புறம் தாழ் போடுமாறு செய்யப்பட்டவை. இதனை திறம் வாய்ந்த தச்சர்கள் இணைந்து சிறு இடுக்கின்றி செய்தனர். இக்கோட்டை வாயிலின் வாசல்கால் உயரமாக இருக்கும். அது வெண்சிறு கடுகும், எண்ணெயும் பூசி வணங்குகின்ற தெய்வ உருவத்தைக் கொண்டதாக இருக்கும். இவ்வாசல் வழியாக கொடியுடன் யானைகள், நுழைந்து செல்ல இயலும். இவ்வாசல் குன்றைக் குடைந்து துளையிட்டதைப் போன்று காணப்பட்டது. இத்தகைய கோட்டை வாசலை,

“தாளொடு குயின்ற போரமை புணர்ப்பின் கைவல் கம்மியன் முடுக்கலின் புரைதீர்ந்து ஐயவி அப்பிய நெய்யணி நெடுநிலை வென்றெழு கொடியொடு வேழம் சென்றுபுகக் குன்று குயின்றன்ன ஓங்குநிலை வாசல்’ – (நெடுநல் 84- 88 வது வரிகள்) என நெடுநல்வாடை எடுத்துக் காட்டுகிறது.

அரசனது அந்தப்புரம் சிறப்புற நிர்மாணிக்கப்பட்டது. கற்றூண்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்தன. இவை செம்பினால் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. வெள்ளியைப் போன்று பல இடங்களில் சுண்ணாம்பு பூசப்பட்டிருந்தது. சுவர்களில் ஓவியக் கலைஞர்களைக் கொண்டு பல்வேறு ஓவியங்களை கட்டிடக் கலை வல்லுநர்கள் வரையச் செய்தனர். இத்தகைய சிறப்புடைய அந்தப்புரத்தை கருவில் என்று குறிப்பிட்டனர். இவ்வாறு தமிழ் ஓவியக் கலைஞர்களும் கட்டிடக்கலை வல்லுநர்களும் வாழ்ந்ததை,

“வரைகண் டன்ன தோன்றல் வரைசேர்பு வில்கிடந்தன்ன கொடிய பல்வயின் வெள்யியன்ன விளங்கும் சுதையுரீஇ மணிகண்டன்ன மாத்திரள் திண்காழ்ச் செம்பு இயன்றன்ன செய்வுரு நெடும்சுவர் உரவப் பல்பூ ஒருகொடி வளைஇக் கருவொடு பெயரிய காண்பின் நல் இல்” – (நெடுநல், 108-114 வது வரிகள்) என நக்கீரர் சுட்டுகிறார் ஓவியக் கலைஞர்கள் ஓவியங்களைத் திறம்பட வரைந்த ஓவியக் கலைஞர்களைக் “கண்ணுள் விளைஞர்” என்று பண்டைத் தமிழர்கள் அழைத்தனர். இதனை;

“எவ்வகைச் செய்தியும் உவம் காட்டி நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கிற் கண்ணுள் வினைஞரும் பிறரும் கூடி” – (மதுரைக்காஞ்சி 516, 518 வது வரிகள்) என மாங்குடி மருதனார் குறிப்பிடுகின்றார். உவமை அடிப்படையில் உலகில் உள்ள அனைத்துச் செய்திகளையும் கண்ணைக் கவரும் வகையில ஓவியர்கள் ஓவியமாகத் தீட்டினர் என்பதை மேற்குறித்த வரிகள் சுட்டுகின்றன.

மேலும் மதுரையில் சமணர்கள் வாழ்ந்த சமணப் பள்ளியின் சுவர்களில் அழகிய ஓவியங்கள் தீட்டப் பெற்றிருந்தமையை,

‘கயம்கண் டன்ன வயங்குடை நகரத்துச் செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து நோக்குவிசை தவிர்ப்ப மேக்குயர்ந் தோங்க இறும்பூது சான்ற நறும்பூண் சேக்கையும்” – (மதுரைக்காஞ்சி 484- 487 வது வரிகள்) என மாங்குடி மருதனார் எடுத்துரைக்கின்றார்.

இவ்வாறு பண்டைத் தமிழர்களுள் நல்லாடை நெய்யும் நெசவாளர்களும், தச்சர், நகை செய்வோர், கட்டிடக் கலைஞர்கள் உள்ளிட்ட திறமை சான்ற தொழிலாளர்கள் வாழ்ந்ததைப் பற்றி பத்துப்பாட்டு நன்கு தெளிவுறுத்துகின்றது. இப்பத்துப்பாட்டில் பழந்தமிழரின் உயர்ந்த வாழ்க்கை புலப்படுத்துவதுடன், தமிழர்களின் மேம்பட்ட பண்பாடும் புலனாகின்றது.

  • முனைவர் சி. சேதுராமன்
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: