துாத்துக்குடி மாவட்டம் சங்கம்பட்டி கிராமத்தில், நாயக்கர் கால சதி கல் ஒன்று தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகில் உள்ளது சங்கம்பட்டி கிராமம். இங்கு நாயக்கர் காலத்தைச் சேர்ந்த சதிகல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முந்தைய காலங்களில் போரில், வீர மரணம் அடைந்த வீரர்களின் நினைவாக, கல் நட்டு வைக்கும் வழக்கம் இருந்துள்ளது. இதை ’நடுக்கல்’ என்று சொல்வார்கள். இது பெரும்பாலும் ஆண்களுக்கு மட்டுமே செய்யப்பட்டு வந்தது. அதேபோல், ஆண்கள் இறந்ததும் அவர்களின் மனைவிகள் உடன்கட்டை ஏறும் வழக்கமும் இருந்து இருக்கிறது. இதை சதி என்று அழைத்தனர். வீரமரணம் எய்திய பெண்களுக்காக வைக்கப்பட்ட நடுக்கல்லை சதிகல் என்று சொல்வர். 17-ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சதி கல் ஒன்று, தூத்துக்குடி மாவட்டம் சங்கம்பட்டியில் தென்னக தொல்லியல் வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் மற்றும் பேராசிரியை முனைவர்.பிரியா கிருஷ்ணன் மற்றும் தொல்லியல் ஆர்வலர் வினோத் ஆகியோரால் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சதி கல் குறித்து, தென்னகத் தொல்லியல் வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் முனைவர்.பிரியாகிருஷ்ணனிடம் பேசினோம், ‘சதிகல் என்பது போரில்priya கணவர் வீரமரணம் எய்தியதும் மனைவி தீப்பாய்ந்து உடன்கட்டை ஏறுவது. இந்தமுறை வடமாநிலங்களிருந்து இங்கு பரவியிருக்கலாம். மன்னர்களின் கீர்த்திகளை, கல்வெட்டுகள், சொல்வதைப் போல, சாதாரண வீரர்களைப் பற்றி நடுக்கற்களே எடுத்துச் சொல்கின்றன. இதில், சதிகல் என்பது பெண்களின் வீரம், கற்பு நிலையை எடுத்துகாட்டுகின்றன. சங்கம்பட்டியில் கண்டறியப்பட்டுள்ள இந்த சதிகல், கி.பி 17 அல்லது 18-ம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். சிறிய கோயில் அமைப்பில் இருக்கும் இந்த நடுக்கல்லில் வீரன் ஒருவன், வாள் ஏந்தி ஒரு காலை மடக்கி, மற்றொரு காலைக் கீழே வைத்த நிலையில் அமர்ந்திருக்கிறார். அவன் அருகில் அவரது மனைவி அழகிய வேலைப்பாடுடைய அணிகலன்கள் அணிந்து அல்லி மலருடன் இருப்பதாக அமைந்திருக்கிறது. இவர்களுக்கு அருகில் குதிரை இருப்பதால், சிலையில் இருப்பது போர்வீரராக இருக்கலாம்.
சங்கம்போத்தி என்ற பெயரைக் கொண்ட இந்த வீரர், அன்று ஊருக்கு பல நன்மைகளைச் செய்து போரில் வீரமரணம் அடைந்ததாக, உள்ளூர் மக்கள் நினைவு கூருகின்றனர். இதன் அருகில் சங்கம் போத்தியின் குலதெய்வத்துக்கும் சிலை உள்ளது. பொதுவாக ”போத்தி” என்ற சொல் திருநெல்வேலி பகுதியில் பாட்டனைக்குறிக்கும். அதற்கு மற்றொரு பொருள், ”இறந்து போனவன்” எனவும் இருக்கிற இந்த சங்கம் போத்தியை மக்கள் அவ்வப்போது வந்து வணங்கிச் செல்கின்றனர் எனக் கூறினார்.