தர்மபுரி அருகே 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!

தர்மபுரி அருகே 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!

பொம்மிடி அருகே பன்றி குத்திப்பட்டான் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், பொம்மிடி துறிஞ்சிப்பட்டி அருகே, 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பன்றி குத்திப்பட்டான் என்ற நடுகல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நடுகல் குறித்து தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வரலாற்று பேராசிரியர் சந்திரசேகர் கூறியதாவது:பொம்மிடி துறிஞ்சிப்பட்டி அருகே, பொது சந்தை கூடும் இடத்தில் உள்ள மரத்தடியில், 13ம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான பன்றி குத்திப்பட்டான் நடுகல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நடுகல்லில் வீரன் ஒருவன் பாய்ந்து, பன்றியின் மார்பில் நீண்ட வேலால் குத்துவது போல உள்ளது. இவ்வீரனின் தலை மீது கொண்டையும், காதில் குண்டலங்களும், இடுப்பிற்கு கீழ் கீழாடை அணிந்தும் உள்ளான். இவ்வீரனின் வலதுபுறம் பெண் உருவம் ஒன்று அரைநிர்வாணமாக காட்டப்பட்டுள்ளது. பெண்ணின் இடது கை அவ்வீரனின் இடுப்பு வரை நீண்டவாறும், அக்கையில் குங்குமச்சிமிழ் வைத்திருப்பது போலவும் அமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு கையில் சிறு குடுவை காட்டப்பட்டுள்ளது.

இவ்வீரனின் இடதுபுறம் காட்டுப்பன்றி ஒன்று பாய்ந்து வரும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் ஊருக்கு துன்பம் விளைவித்து வந்த காட்டுப்பன்றியை அழிக்கும் நோக்குடன், வீரன் போராடும் போது அப்பன்றியும், வீரனும் இறந்திருக்கக்கூடும். பன்றி தாக்கி இறந்ததால், பன்றி குத்திப்பட்டான் கல் என்று அழைக்கப்படுகிறது. அவன் இறந்தவுடன் அவனின் மனைவி உடன்கட்டை ஏறியதாக தெரிகிறது. எனவே, அவரது மனைவியும் அருகில் இருப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இதை சதிக்கல் என்றும் குறிப்பிடலாம். பன்றி குத்திப்பட்டான் கல் தர்மபுரி மாவட்டத்தில் கண்டறியப்பட்டு இருந்தாலும், இக்கல்லில் வீரனுக்கு மேல்புறமாக அரசருக்குரிய குடை வடிவம் போல அமைக்கப்பட்டிருப்பதால், இத்தகைய நடுகல் கண்டறிவது இதுவே முதல்முறையாகும். அவ்வீரன் இவ்வூர் தலைவராகவோ அல்லது ஜமீன் என்ற நிலையிலோ இருந்திருக்கக்கூடும். பொதுவாக அம்மை நோய் வரும் போது, இக்கல்லுக்கு வழிபாடு நடத்திச் செல்வதாக இப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். இத்தகைய கற்கள் பாதுகாக்கப்பட்டால், தர்மபுரி மாவட்டத்தின் சமூக வரலாற்றை அறிந்து கொள்ள இயலும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags: 
Subscribe to Comments RSS Feed in this post

2 Responses

  1. Pingback: Dharanikavi Palani

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: