சித்திரங்கள் நிரம்பிய, இரண்டு நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்கள் மோகன்காந்தி, வீரராகவன், முனிசாமி, ஜானகிராமன் ஆகியோர், நத்தத்தில் நடத்திய ஆய்வில், சித்திரங்கள் நிரம்பிய இரண்டு நடுகற்கள் கண்டுபிடித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த நத்தம் கிராமத்தில், 13ம் நூற்றாண்டு, ஓய்சாளர்கள் காலத்தை சேர்ந்த, போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு எடுக்கப்பட்ட இரண்டு நடுகற்கள் உள்ளன. இரண்டு கற்களும், ஆறடி உயரத்தில், ஐந்தரை அடி அகலத்துடன் உள்ளன. இதில் வீர மரணம் அடைந்த வீரனோடு, அழகான சித்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. முதல் நடுகல்லில் மகளிர் விளையாடும் காட்சி, பணிப்பெண்கள் பல்லக்கை தூக்கிச் செல்லும் காட்சி உள்ளது. அதற்கு கீழ் உள்ள பல்லக்கில், அரசி உட்கார்ந்துள்ளார். அரசியை வணங்கிய நிலையில், பணிப்பெண் ஒருவர் உள்ளார். அதற்கு கீழ், பெண் ஒருவர் நாதஸ்வரத்தை ஊதும் காட்சி இடம் பெற்றுள்ளது. இரண்டாவது நடுகல்லில், கையில் வில்லுடன் அமர்ந்த நிலையில் உள்ள வீரன் அருகில், பெண் ஒருவர் உட்கார்ந்துள்ளார். அவருக்கு அருகில், குதிரை, இசை கலைஞர்கள் இசைக்கும் காட்சி உள்ளது. இதன் மூலம், 13ம் நூற்றாண்டில் நாதஸ்வரம் இருந்துள்ளது. வீரர்களோடு இறந்த மிருகங்களும் மரியாதை செலுத்தும் விதத்தில், சித்திரங்களும் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது தெரியவருகிறது.