“தமிழால் இணைவோம்” என்ற அடிப்படையில் நாம் ஒன்று சேர்ந்துள்ளோம்: அயலகத் தமிழர் நாள் விழாவில் முதல்வர் உரை

அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற அயலகத் தமிழர் நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையின் சார்பில் நடைபெறும் அயலகத் தமிழர் நாள் விழாவில் பங்கெடுத்து உரையாற்றுவதில் பெருமை அடைகிறேன். “தமிழால் இணைவோம்” என்ற அடிப்படையில் நாம் ஒன்று சேர்ந்துள்ளோம். தமிழுக்குத்தான் அந்த வலிமை இருக்கிறது.

மத மாயங்களையும் சாதிச் சழக்குகளையும் வீழ்த்தும் வல்லமை மொழிக்குத்தான் உள்ளது. அதனால்தான் தமிழால் இணைவோம் என்பதை நமது முழக்கமாகக் கொண்டுள்ளோம். ஒரு தமிழன் – இன்னொரு தமிழனைச் சந்திக்கும் போது தமிழைச் சொல்லி வாழ்த்து தெரிவிக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் மற்ற வேறுபாடுகள் எதற்கும் முக்கியத்துவம் தரக் கூடாது என்ற எண்ணம் தோன்றும் என்றார் இலக்கிய மேதை மு.வரதராசனார். அத்தகைய தமிழ் வாழ்த்தை உங்களுக்கு முதலில் நான் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழால் இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் அதேவேளையில் – அயலகத் தமிழர் நாள் வாழ்த்துகளையும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் – பல்லாயிரம் மைல் கடந்தும் இன்று நாம் ஒன்றாகக் கூடி இருக்கிறோம் என்றால் – தமிழன் என்ற உணர்வோடு நாம் கூடி இருக்கிறோம். நம்மை நாடுகள் பிரிக்கிறது. நிலங்கள் பிரிக்கிறது. ஆனாலும் மொழி இணைக்கிறது. அந்த வல்லமை தமிழ்மொழிக்கு உண்டு. ‘வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்பதை தமிழ் மண்ணில் விதைத்து மொழிப்பற்றும் – ‘தமிழா! இன உணர்வு கொள்’ என்று முழங்கி இனமான உணர்வும் ஊட்டிய இயக்கம்தான் திராவிட இயக்கம்! மொழிக்காக போராடிய – வாதாடிய இயக்கம் மட்டுமல்ல, மொழிகாக்க தனது தேகத்தை தீக்குத் தின்னத் தந்த தீரர்களின் இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

கழக ஆட்சி அமையும் போதெல்லாம் அது – இங்குள்ள தமிழர்களின் ஆட்சியாக மட்டுமில்லாமல் – உலகம் முழுவதும் பரந்து விரிந்து வாழும் அனைத்து மக்களின் அரசாக கழக அரசு செயல்பட்டு வருகிறது. உங்களில் பலருக்கும் தமிழ்நாட்டில் வாக்களிக்கும் உரிமை இல்லாமல் இருக்கலாம் – ஆனால், தமிழ்நாடு அரசும் நமது அரசு என்று சொல்லிக் கொள்ளும் உரிமை உங்களுக்கு எப்போதும் உண்டு. அதனால்தான் கழக அரசு அமைந்ததும் கடந்த செப்டம்பர் மாதம் அயலகம் வாழ் தமிழர்கள் நலன் காக்கக்கூடிய ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டேன். நம்முடைய இனம் ஒரு நிலத்தில் – ஒரு நாட்டில் மட்டுமே வாழ்ந்த இனம் அல்ல. உலகளாவிய இனம் ஒன்று உண்டென்றால் அது தமிழினம் தான். 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும், 60க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள்.

வணிகம் செய்வதற்காகச் சென்றார்கள். வாழ்வதற்காகச் சென்றார்கள். வேலைகளைத் தேடிச் சென்றார்கள். கடற்கோள்களில் இருந்து தப்புவதற்காகச் சென்றார்கள். புதிய இடங்களை அறிவதற்காகச் சென்றார்கள். இப்படிப் பலருக்கும் பல நோக்கங்கள் இருந்திருக்கும். இத்தகைய இடப்பெயர்வுகள் காலம்காலமாக நடந்து வருகின்றன. எங்கே தமிழர்கள் வாழ்ந்தாலும், அவர்களுக்கு தமிழ்நாடுதான் தாய் வீடு. இன்றைக்கு நவீனத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து நான் பேசுவதைக் கேட்கிறீர்கள். நீங்கள் பேசுவதை பார்த்தபடி நானும் கேட்கிறேன். இவை எதுவும் இல்லாத காலத்தில் தன்னம்பிக்கையும் தணியாத தாகமும் கொண்ட தமிழர்கள் எல்லா நாடுகளுக்கும் சென்றார்கள். பழம்பெருமை மட்டுமே பேசிக் கொண்டு உள்ளூரிலேயே இருந்துவிடாமல் – தனது திறமையை உலகம் மதிக்கும் என்ற நம்பிக்கையோடு சென்றார்கள். அத்தகைய தமிழர்கள் அனைவருக்கும் – அவர்களது பிள்ளைகளுக்கும் – குழந்தைகளுக்கும் எனது இதயபூர்வமான பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களை அயலகத்துக்கு வாழப் போனவர்களாக நான் நினைக்கவில்லை. தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தூதர்களாக அயல்நாடுகளில் இருப்பவர்களாக நினைத்து போற்றக் கடமைப்பட்டுள்ளேன். இத்தகைய அயலகத் தமிழர் மேன்மைக்காக தன்னுடைய வாழ்வை ஒப்படைத்தவர்தான் தமிழினத் தலைவர் கலைஞர்! புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வெளிநாடு வாழ் தமிழர் நலச்சட்டம் 2011-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் நாள் கழக அரசால் இயற்றப்பட்டுள்ளது. “வெளிநாடு வாழ் தமிழர் நலவாரியம்” ஒன்றை உருவாக்கி அவர்களுக்கு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவோம் என்று அறிவித்தோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக நம்மால் அமைக்க முடியவில்லை. அடுத்து வந்த ஆட்சியாளர்களும் இதனை அமைக்கவில்லை. மீண்டும் ஆட்சிக்கு வந்த நமது அரசு ‘வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம்’ அமைக்கப்படும் என்பதை ஐந்தே மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவித்தேன். அரசு மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் பதிமூன்று பேரைக் கொண்டு இந்த வாரியம் அமைக்கப்படும்.

5 கோடி ரூபாய் வெளிநாடு வாழ் தமிழர் நலநிதி என மாநில அரசின் முன்பணத்தைக் கொண்டு உருவாக்கப்படும். மூலதனச் செலவினமாக 1 கோடியே 40 இலட்சம் ரூபாய் மற்றும் தொடர் செலவினமாக, நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக 3 கோடி ரூபாய் ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் தமிழர் குறித்த தரவு தளம் (Database) ஏற்படுத்தப்படும். தமிழர்கள் பணியின் போது இறக்க நேரிட்டால், அவர்கள் குடும்பத்தில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித் தொகை வழங்கப்படும். தமிழர்கள் புலம்பெயரும்போது, பயண புத்தாக்கப்பயிற்சி பல்வேறு ஊர்களில் நடத்தப்படும். ஆலோசனை பெற வசதியாக கட்டணமில்லா தொலைபேசி வசதி மற்றும் வலைதளம், கைப்பேசி செயலி (Mobile application) அமைத்துத் தரப்படும். சட்ட உதவி மையம் அமைக்கப்படும்.

தமிழ்நாடு திரும்பியவர்களுக்கு குறு தொழில்கள் செய்திட, அதிகபட்சமாக இரண்டரை இலட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய கடன் வசதி செய்து தரப்படும். இதற்கென ஆறு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். வெளிநாடு வாழ் தமிழர்களின் முதலீடுகளை அரசு மற்றும் தொழில் நிறுவனங்களில் பாதுகாப்பான முதலீடு செய்ய ஏதுவான சூழல் உருவாக்கப்படும். தமிழர்கள், ‘எனது கிராமம்’ திட்டத்தின் மூலம் தங்களது சொந்த ஊருக்கு நன்மைகள் செய்து தரலாம்.
தமிழ்ப் பிள்ளைகள் தமிழ் கற்றுக்கொள்ள வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். தமிழர்கள் அந்தந்த நாடுகளில் உருவாக்கியுள்ள நலச்சங்கங்கள் ஒருங்கிணைக்கப்படும் – என்று பல்வேறு அறிவிப்புகளைச் செய்தேன். இவை அனைத்துக்கும் சேர்த்து 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வரிசையில்தான், வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12-ம் நாள் உலகத்தமிழர் புலம்பெயர்ந்தோர் நாளாகக் கொண்டாடப்படும். இலங்கையில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி வந்த தமிழர்களுக்கு 317 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு சமூக பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். கொரோனா என்ற பெருந்தொற்று காலமாக இல்லாமல் இருந்திருந்தால், இந்த விழாவை மிகப்பெரிய விழாவாக முன்னெடுத்திருப்போம். கொரோனா என்பதால் அது இயலவில்லை. ஆனால் பரந்த உள்ளம் கொண்ட நாம், காணொலியில் பெரிய அளவில் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். பல நாடுகளைச் சேர்ந்த, பல்வேறு பெருமக்கள், பல்வேறு தலைப்புகளில் பேச இருக்கிறீர்கள். உங்கள் அனைவரது உரைகளும் தமிழை – தமிழினத்தை – தமிழர்களை மேம்படுத்துவதாக அமைய வேண்டும். நம்மை பிளவுபடுத்தும் எண்ணங்களை பின்னுக்குத் தள்ளி, நம்மை இணைக்கும் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவையாக உங்களது உரைகள் அமைய வேண்டும்.

தமிழ்நாட்டில் இருக்கும் பிளவுகளுக்கு வெளிநாடுகள் சென்ற பிறகும் முக்கியத்துவம் தராதீர்கள். ஒருதாய் மக்களாக வாழுங்கள். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும், தொழில் வளர்ச்சியிலும் முன்னேற்றம் காணுங்கள். எவ்வளவு உயரமாக மரம் வளர்ந்தாலும் அது தன்னுடைய வேரை விட்டுவிடுவதில்லை என்பதைப் போல தமிழை – தமிழ்நாட்டை விட்டு விடாதீர்கள். அரவணைத்து வாழுங்கள். தமிழகத்துக்கு வாருங்கள். உங்களது பிள்ளைகளுக்கு தமிழ்நாட்டைக் காட்டுங்கள்.மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பண்பாட்டிலும் செழிப்பிலும் மேம்பட்ட இனம் நாம் என்பதை அவர்களை அழைத்து வந்து கீழடியை, ஆதிச்சநல்லூரைக் காட்டுங்கள்.

இங்குள்ள தமிழர்களுக்கு எல்லாமுமாய் இந்த அரசு இருப்பதைப் போலவே அயலகத் தமிழ் மக்களுக்கும் எல்லாமுமாக இந்த அரசு இருக்கும். தமிழர் பண்பாட்டை இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் செய்ய – தமிழ் கற்பிக்க – ஒன்றாக இணைந்து ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க அனைத்தையும் தமிழ்நாடு அரசு நிச்சயம் செய்யும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: