கீழடியில் தொல்லியல் துறையின் ‘கொரோனா’ முன்னெச்சரிக்கை!

உலகளவில் தற்போது மிகப்பெரும் பேசுபொருளாகியுள்ள கோவிட் – 19 கொரோனா வைரஸ், உலகளவில் ஏற்படுத்திவரும் பாதிப்புகள் குறித்து, உலக சுகாதார நிறுவனத்தினர் ஊடகங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர். தற்போது பிற நாடுகளைப் போல இந்தியாவும் கொரோனோ வலையில் சிக்கியுள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் தளங்களிலும் பகிரப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரி மட்டுமல்லாமல் தியேட்டர், மால்கள் உள்ளிட்ட கேளிக்கை இடங்கள் மற்றும் மக்கள் ஒன்று கூடும் இடங்கள் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கீழடியிலும் பார்வையாளர்கள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட மதுரை அருகே உள்ள கீழடியில் 19.2.2020 அன்று ஆறாம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கியது. கீழடி மட்டுமன்றி கீழடியைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வு செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டது. 6-ம் கட்ட அகழாய்வுப் பணியில் கொந்தகை ஈமக்காட்டில் ஆய்வுகள் செய்யப்படுகின்றன. இந்நிலையில், அகழாய்வு நடைபெறும் பகுதியில் பொதுமக்கள் வரத்து அதிகரித்ததால் பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்கள் கீழடி அகழாய்வுப் பணி நடைபெறும் பகுதிக்கு வர வேண்டாம் எனத் தொல்லியல்துறை சார்பாகப் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தமிழக தொல்லியல் துறை சார்பாக நடைபெற்று வரக்கூடிய இந்த 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகளைப் பார்ப்பதற்காக நாள்தோறும் பல மாவட்டங்களிலிருந்து வரும் பொது மக்கள் அதிகளவு வருவதால் யாரும் நேரடியாக வந்து ஏமாற வேண்டாம் என்ற நோக்கத்தில் தமிழக தொல்லியல்துறை சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், விளம்பரப் பதாகையைத் தொல்லியல் அகழாய்வு நடைபெறக்கூடிய ஒவ்வோர் இடத்திலும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் கீழடியைப் பார்வையிட வரும் தொல்லியல் ஆர்வலர்கள் அகழாய்வுகளைப் பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தாலும் நோயைக் கட்டுப்படுத்த இதுதான் வழி என்பதை உணர்ந்து பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: