காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் மீண்டும் ஜொலிக்கும் ‘தமிழ் வாழ்க’ போர்டு-அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்டிருந்தது

காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக செயல்படாமல் முடக்கப்பட்ட ‘தமிழ் வாழ்க’ போர்டு மீண்டும் எரிய துவங்கி உள்ளது.
காரைக்குடி நகராட்சி அலுவலகத்தின் மேல் தளத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சி காலத்தில் ‘தமிழ் வாழ்க’ போர்டு வைக்கப்பட்டது. பின்னர் அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பும் செய்யாமல் வேண்டும் என்றே முடக்கி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் ‘தமிழ் வாழ்க’ போர்டு மீண்டும் செயல்பட துவங்கி உள்ளது. காரைக்குடி நகராட்சியில் முடங்கி கிடந்த ‘தமிழ் வாழ்க’ போர்டை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என திமுக இளைஞரணி முன்னாள் நகர அமைப்பாளர் காரைசுரேசு தமிழக முதல்வர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன், நகராட்சி நிர்வாக ஆணையர், நகராட்சி ஆணையர் சுதா ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக நகராட்சி ஆணையர் சுதா உடனடியாக நடவடிக்கை எடுத்ததால், நகராட்சி அலுவலக மேல்தளத்தில் ‘தமிழ் வாழ்க’ போர்டு நேற்று முன்தினம் முதல் மீண்டும் எரிய துவங்கி உள்ளது. இதனை தமிழ் ஆர்வாலர்கள், பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

நன்றி :தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: