தஞ்சை பெரிய கோயிலில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக குடமுழுக்கு நடத்த அச்சப்படும் ஆட்சியாளர்கள்?

தஞ்சை பெரிய கோயிலில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக குடமுழுக்கு நடத்த அச்சப்படும் ஆட்சியாளர்கள்?

தஞ்சை பெரிய கோயிலில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக குடமுழுக்கு நடத்த அச்சப்படும் ஆட்சியாளர்கள்?

தஞ்சை பெரிய கோயில் தமிழனின் சிற்பக்கலை மற்றும் கட்டடக்கலை அறிவுக்கு ஒரு உன்னத எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. உலக மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி, ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றளவும் கம்பீரமாய் உறுதியுடன் நிற்கிறது தஞ்சை பெரிய கோயில். இதன் உறுதித்தன்மையில்தான் தற்போது பலருக்கும் கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


மிகப் பெரிய நிலப்பரப்பில் அமைந்திருப்பது தஞ்சை பெரிய கோயில். அக்காலங்களில் தஞ்சை மக்களின் மாலை நேர சரணாலயமாகத் திகழ்ந்தது பெரிய கோயில். சந்தியாகால பூஜையின்போது பெருவுடையாரை தரிசித்துவிட்டு, பரந்த புல்வெளியில் அமர்ந்தபடி நெடுநேரம் இறைவனை தியானித்துவிட்டு எழும்போது, அவர்களின் மனங்கள் பரவசத்தால் நிறைந்திருக்கும். பின்னர், இரவு உணவு முடித்து உறங்கச் செல்லும் அவர்களின் மறுநாள் விடியல் அத்தனை உற்சாகமாகத் தொடங்கும்.

ஆனால்… இன்று..?

பெரிய கோயிலும் இருக்கவே செய்கிறது. நாளும் பக்தர்கள் வருவதும் வாடிக்கையாகவே இருக்கிறது. ஆனால், நாளை பெரிய கோயிலின் நிலை? நாம் கோயிலுக்குச் சென்று பார்த்தபோது இந்தக் கேள்வி நமக்குள் ஏற்படவே செய்தது. காரணம் பெரிய கோயிலைச் சுற்றி நிற்கும் சர்ச்சைகள்தான்.

சோகத்தில் முடிந்த குடமுழுக்கு:

தஞ்சை கோயிலில் நடைபெறும் விழாக்களில் கலந்து கொள்ளும் ஆட்சியாளர்களின் பதவி நிலைக்காது என்று ஒரு தவறான நம்பிக்கை காலம் காலமாகவே நிலவி வருவது பலரும் அறிந்த விஷயம்தான். அதேபோல், 1997-ம் வருடம் தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றபோது, யாகசாலை பூஜையின்போது பந்தலில் பற்றிய தீ கோயில் முழுவதும் பரவி, 48 பேர் உயிரிழந்ததும், பலரும் படுகாயம் அடைந்ததும் நடைபெற்றது. இதனாலெல்லாம், தஞ்சை பெரிய கோயில் பற்றிய விஷயங்களில் ஆட்சியாளர்கள் போதிய கவனம் செலுத்துவதில்லை. அதன் காரணமாகவே, தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு நடைபெற்று 20 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் குடமுழுக்கு நடைபெறாமல் இருக்கிறது. அதற்கான முயற்சிகள்கூட மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

கேள்விக்குள்ளாகும் உறுதித்தன்மை:

பொதுவாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி 2009 -ம் ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டிய பெரிய கோயில் குடமுழுக்கானது 20 ஆண்டுகள் ஆகியும் நடத்தப்படாமல் இருக்கிறது.

தற்போது கோயிலின் ஒருசில இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெரிய கோயிலின் வழிபாட்டு முறைகள் திட்டமிட்டு மாற்றப்படுவதாகவும், கோயில் கட்டுமானங்கள் சிதைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் போடப்பட்ட ஆழ்துளைக் கிணறு பற்றி தொன்ம கட்டடக்கலை நிபுணர்கள் குற்றம் சாட்டுவதைப் பற்றிய விரிவான கட்டுரை 28-10-2017 தேதியிட்ட ஜூ.வி. இதழில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்திய தொல்லியல் துறை இயக்குநர் (பராமரிப்பு) ஆர்.எஸ்.ஜாம்வால் தலைமையில் வந்த ஆய்வுக்குழுவும் கோயிலின் உள்ளே ஒரு சில இடங்களில் விரிசல்கள் விழுந்துள்ளதை உறுதி செய்துள்ளது. இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “இந்தக் கோயில் சேதம் அடைந்துவிடும் என்று அஞ்ச வேண்டாம். கோயில் உறுதியாக இருப்பதாகவும், விரிசல் ஏற்பட்டுள்ள இடங்களை சீர்செய்யும் பணிகள் முன்னெச்சரிக்கையாக தொடங்கப்படும்” என்றும் கூறினார்.

தொல்லியல் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “1000 வருஷங்களாக புயல், மழை எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு இந்தக் கோயில் உறுதியோடு இருப்பதே பெரிய அதிசயம். இதில் சில இடங்களில் விரிசல்கள் வந்திருப்பது சாதாரணமான ஒன்றுதான். இருந்தாலும் அதையெல்லாம் சரி செய்யும் பணிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. மேலும் கும்பாபிஷேகம் நடத்துவது சம்பந்தமான முயற்சி எடுக்க வேண்டியது தொல்லியல் துறையின் பணியில்லை. அது கோயில் நிர்வாகத்தின் கடமை. அதற்கான அனுமதி கொடுப்பது மட்டும்தான் எங்கள் வேலை” என்று முடித்துக் கொண்டார்.

கோயில் நிர்வாகத்தினரிடம் இதுகுறித்து கேட்டபோது, “கும்பாபிஷேகம் நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்வது குறித்து சமீபத்தில் தொல்லியல் துறை அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. கூடிய விரைவில் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும்” என்று கூறினார்.

மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும் வகையில், தஞ்சை பெரிய கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற உரிய ஏற்பாடுகள் செய்ய முன்வருவார்களா என்பது பெருவுடையாருக்குத்தான் வெளிச்சம்!

நன்றி – விகடன்

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>