தஞ்சாவூர் பெரிய கோயிலில் சதய விழா கோலாகலம்; மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மரியாதை!

தஞ்சாவூர் பெரிய கோயிலில் சதய விழா கோலாகலம்; மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மரியாதை!

தஞ்சாவூரில் ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு, அவரது சிலைக்கு 52 அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பெருவுடையாருக்கு 48 திரவியங்களால் பெரும் அபிஷேகம் நடைபெற்றது.

தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,034-வது ஆண்டு சதய விழாவையொட்டிய 2 நாள் நிகழ்ச்சிகள் தஞ்சாவூரில் தொடங்கின. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை, பெரிய கோயிலில் உள்ள பெருவுடையார், பெரியநாயகி அம்பாளுக்கு 42-வது ஆண்டாக திருவேற்காடு கருமாரி பட்டர் அய்யப்ப சுவாமிகள் தலைமையில் 48 திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, தீப வழிபாடு நடைபெற்றது. இதற்கிடையே, மங்கள வாத்தியங்கள் முழங்க யானை மீது தேவாரம், திருவாசகம் அடங்கிய திருமுறைகள் வைக்கப்பட்டு நான்கு ராஜ வீதிகளிலும் வீதியுலா நடைபெற்றது.

ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த ஏற்கெனவே காவல் துறையிடம் பல்வேறு அரசியல் கட்சியினர், தமிழ் அமைப்புகள் என 52 அமைப்புகள் அனுமதி கேட்டிருந்தன. இதையடுத்து ஒவ்வொரு அமைப்புக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி காவல் துறை அனுமதி வழங்கியது.

சதய விழாவின்போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க பெரிய கோயில் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் பெரிய கோயில் பகுதியில் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

பின்னர், பிற்பகல் 3.30 மணிக்கு மங்கள இசையுடன் மேடை நிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெற்றன. இதேபோல, கும்பகோணம் அருகே உடையாளூரில் ராஜராஜ சோழனின் சமாதி உள்ளதாகக் கூறப்படும் இடத்திலும் பலர் மாலை அணிவித்து வழிபட்டனர்.

மேலும், கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் உள்ள ராஜராஜ சோழனின் மனைவி பஞ்சவன் மாதேவிக்காக எழுப்பப்பட்ட பள்ளிப்படை கோயிலில் முதன்முறையாக நேற்று ராஜராஜ சோழனின் சதய விழா நடைபெற்றது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: