தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சென்னை ஐஐடி!

சென்னை ஐ ஐ டி யின் 58வது பட்டமளிப்பு விழா இணையம் வாயிலாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மொத்தம்1,962 மாணவர்களுக்கு இணையம் வழியாக பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்த கல்வியாண்டில் அதிகபட்சமாக 392 பேர் பிஎச்டி பட்டம் பெற்றனர்.

இதனிடையே, விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பேட்மிண்டன் வீராங்கனை சிந்து பேசும்போது, பட்டம் பெற்றுள்ள மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். பட்டம் பெறுவதோடு உங்கள் பணி முடிந்து விடவில்லை. மாணவர்கள் தொடர்ந்து, பல்வேறு விஷயங்களை கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். வெற்றிக்கு கடின உழைப்பு மிக அவசியம், வாழ்வில் எதைச் செய்தாலும் அதை ஆர்வத்துடன் செய்ய வேண்டும். வெற்றி தோல்விகள் பற்றி கவலைப் படக்கூடாது என்று கூறினார்.

இதனிடையே, பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதாக மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. வழக்கமாக தமிழ்நாட்டில் நடைபெறும் மத்திய அரசு நிகழ்ச்சிகளில், தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறும். ஆனால், ஐஐடி-யில் நேற்று வந்தே மாதரத்துடன் துவங்கிய நிகழ்ச்சி தேசிய கீதத்துடன் முடிந்துள்ளது. தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து புக்கணிக்கப்பட்டதுடன், மாணவர்கள் ஆங்கிலத்தில் உறுதிமொழி ஏற்றபின் சமஸ்கிருதத்தில் மந்திரத்தை சொல்லி முடித்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை ஐஐடி நிகழ்ச்சிகளில் தமிழ்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படுவது இது முதல்முறை அல்ல என்றும் தமிழ் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>