தமிழர் என்ற உணர்வு! – தமிழர்கள் ஒன்றாக, ஒற்றுமையோடு நிற்க வேண்டும்!

தமிழர்கள் ஒன்றாக, ஒற்றுமையோடு நிற்க வேண்டும்!

தமிழர்கள் ஒன்றாக, ஒற்றுமையோடு நிற்க வேண்டும்!

எல்லா மாநிலங்களிலும், அவரவர் மாநிலநலன், அவரவர் மொழியின்நலன், அவரவர் மக்களின்நலன் என்று வரும்பொழுது, எல்லா கட்சி மாச்சர்யங்களையும் விட்டுவிட்டு ஒன்றாக நிற்கிறார்கள். போராடுகிறார்கள், வாதாடுகிறார்கள், வலியுறுத்துகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு ஒற்றுமை உணர்வு, தமிழ்நாட்டில் என்று வருமோ? பாரதிதாசன் பாடியது போல,

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு!

என்ற சங்கநாதம் நிஜமாகும் வகையில், ‘நாம் அனைவருமே தமிழர்’ என்ற ஒற்றுமை உணர்வு தமிழருக்கு என்று வருமோ? என்ற ஒரு பேராவல் அனைத்து தமிழர்களின் உள்ளங்களிலும் நிறைந்திருந்தது.

இந்த உணர்வை சென்னையில் நடந்த ‘தமிழர் தந்தை’ சி.பா. ஆதித்தனார் 112–வது பிறந்தநாள் இலக்கியப் பரிசளிப்பு விழாவில், மூத்த தமிழறிஞர் விருதுபெற்ற முனைவர் அருகோ தட்டியெழுப்பிவிட்டார். சி.பா. ஆதித்தனார் இந்த உணர்வில்தான் 1958–ம் ஆண்டு ‘நாம்தமிழர் இயக்கம்’ என்ற ஒரு இயக்கத்தை தொடங்கினார். அவர் இந்த இயக்கத்தை தொடங்குவதற்கு முக்கிய காரணம், நாம் அனைவரும் ஐரீஷ்காரர்கள் என்ற உணர்வை தட்டியெழுப்ப, இமேன் டிவேலரா என்ற தத்துவமேதை நாம் ஐரீஷ் என்றவகையில் ‘சின்பீன்’ என்னும் இயக்கத்தை தொடங்கினார். அந்தஉணர்வு தமிழர்களுக்கும், ‘நாம் அனைவரும் தமிழர்’ என்ற வகையில், பொங்கி வழியவேண்டும் என்ற தணியாத ஆசையில்தான் ‘நாம் தமிழர்’ இயக்கத்தை தொடங்கினார். ஆனால், தமிழ்நாட்டில் இப்போது கட்சிவேறுபாடு, சாதிவேறுபாடு, மதவேறுபாடு, இனவேறுபாடு, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று நிலவும் பலவேறுபாடுகள் அந்த உணர்வை மழுங்கடித்துவிட்டன.

காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தவுடன், கர்நாடகத்தில் ஒரேகுரலில் எதிர்ப்புகள் கிளம்பிவிட்டன. கையில் கன்னடர்கள் கொடியை மட்டுமே ஏந்திக்கொண்டு மற்றவித்தியாசம் எதையும் பார்க்காமல், கர்நாடக மக்கள் ஒரேஅணியில் நின்று போராடினார்கள். அதே உணர்வு தமிழர்களுக்கும் வரவேண்டும் என்ற பிரகடனத்தை அருகோ அந்தவிழாவில் முழங்கினார். நிச்சயமாக இந்த கருத்து வரவேற்கத்தக்கதாகும். விசால ஆந்திரா அமைய ஆந்திரா மகாசபை, சம்யுக்த கர்நாடகம் அமைய கர்நாடக சபா, ஐக்கியகேரளம் அமைய கேரள சமாஜம் என்று அந்தந்த மாநிலத்திற்கென்று, தனியாக ஒரு பொதுஅரங்கு அமைக்கப்பட்டதுபோல, தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த தமிழர்களுக்கென்று ஒரு பொதுஅரங்கு, பொதுத்தளம் இல்லாமல் இருப்பது மிகவும் வருத்தத்திற்குரியதாகும்.

தமிழர் நலனில் அக்கறையுள்ள அனைவரும் ஒன்றுசேர்ந்து, ‘நாம் அனைவரும் தமிழர்’ என்ற உணர்வை ஏற்படுத்த தனியாக ஒரு பொதுஅரங்கு, பொதுத்தளம் அமைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்ஆர்வலர்கள் தமிழர்களுக்கென ஒருகொடியை வடிவமைக்கவேண்டும். 1937–ம் ஆண்டு மறைமலை அடிகள், ஈழத்து அடிகள், ஞானியார் அடிகள் மூவரும் கூடி இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தொடங்கியபோது, அவர்கள் ஏந்திப்பிடித்தது மூவேந்தர் சின்னங்கள் அடங்கிய தமிழ்க்கொடியேயாகும். அதுபோல, தமிழ்நாட்டிற்கென ஒரு பொதுபிரச்சினை உருவாகும்பொழுது, மற்ற வேறுபாடுகளையெல்லாம் மறந்து, நமக்கு இருப்பது ஒரு தமிழ்க்கொடி, ஒரு தமிழ்அரங்கு என்ற உணர்வுடன் ஒட்டுமொத்தமாக போராடினால், வாதாடினால், எந்தப் பிரச்சினையிலும், தமிழ்நாட்டிற்கு வெற்றி கிடைக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. கர்நாடகாவில் மட்டுமல்லாமல், கேரளாவில்கூட அனைத்துக்கட்சி எம்.பி.க்களும் ஒன்றாக சேர்ந்துசென்று, ரெயில்வே பொதுமேலாளரை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்துகிறார்கள். அதுபோல, தங்கள் மாநிலப்பிரச்சினை என்று வரும்பொழுது அனைத்துக்கட்சி எம்.பி.க்களும் ஒன்றாகசேர்ந்து பிரதமரை போய் சந்திக்கிறார்கள். எந்தவொரு முயற்சியிலும் ஒற்றுமையோடு போராடினால் அதற்கு நிச்சயமாக வலிமை அதிகம். எனவே, சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாளில் தூண்டிவிட்ட இந்த உணர்வு அப்படியே பட்டுப்போய் விடாமல் செழித்து வளரும் வகையில் பிரச்சினைகள் வரும்போது, இங்குள்ள தமிழர்கள் ஒன்றாக, ஒற்றுமையோடு நிற்க வேண்டும்.

– தினத்தந்தி

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: