உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாதிக்கும் தமிழ்பெண்கள்!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாதிக்கும் தமிழ்பெண்கள்!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாதிக்கும் தமிழ்பெண்கள்!

ரஷ்யாவில் தற்போது நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு முன்னதாக சர்வதேச அளவில் நடத்தப்பட்ட தெருவோர குழந்தைகளுக்கான கால்பந்து போட்டியில் இந்தியாவின் சார்பாக விளையாடிய பெண் குழந்தைகள் அணிக்கு தலைமை வகித்தவர் சங்கீதா.

”தெருவோரத்தில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த பெண் நான். படிப்பதற்கு ஏற்ற சூழல் இல்லை என்பதைவிட வாழ்வதற்கே தினமும் போராட்டம்தான். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு இருந்தேன். கருணாலாயா தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்னைப் போன்ற தெருவோரத்தில் உள்ள குழந்தைகளுக்கு கால்பந்து விளையாட உதவுவதாக சொன்னார்கள். விளையாட்டை கற்றுகொள்ளச் சென்றேன். தற்போது என்னுடைய வாழ்க்கையே மாறிவிட்டது,” என்கிறார் சங்கீதா.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

கால்பந்து மைதானத்தில் நுழைந்தவுடன் அடுத்த இலக்கு பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும், நமக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் எப்படி பயன்படுத்திக்கொள்ளவேண்டும், குழுவினருடன் ஒற்றுமையாக இருக்கவேண்டும், வெற்றி பெற வேண்டும் என படிப்படியாக கால்பந்து விளையாட்டின் இலக்கண விதிகளை பின்பற்ற தொடங்கியதால் வாழ்க்கையின் பக்கங்களும் சீராகின சங்கீதாவுக்கு.

”ரஷ்யாவுக்கு செல்வதற்கான வாய்ப்பு எனக்கு உள்ளது என்ற செய்தியை முதலில் நம்பமுடியவில்லை. தெருவோரக் குழந்தைகளுக்காக பல தொண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த போட்டியை நடத்துகிறார்கள். அதில் இந்திய அணி சார்பாக முதல்முறையாக நானும், என் தோழிகளும் கலந்துகொள்ளப் போகிறோம், நான்தான் அணியை வழிநடத்தும் கேப்டன் என்பது கூடுதல் மகிழ்ச்சியையும், பொறுப்பையும் எனக்கு கொடுத்தது. கால்பந்து விளையாட்டு எனக்கு தலைமைப்பண்பு, நேர்மை போன்றவற்றை கற்றுக்கொடுத்தது,” என்கிறார் சங்கீதா.

குடும்ப வறுமை காரணமாக தன்னைவிட வயதில் மூத்தவரை கட்டாயமாக திருமணம் செய்துகொள்ள வேண்டிய சந்தர்ப்பத்தில் இருந்து தன்னை காத்துக்கொள்ள 14 வயதில் வீட்டைவிட்டு வெளியேறியவர் ஷாலினி. தனது குடும்ப உறவுகளை நம்ப முடியாத நிலையில் தெருவோர சிறுமியாக மாறினார்.

”வீட்டில் இருந்து வெளியே வந்தபின், செல்வதற்கு இடம்இல்லை என்று நினைத்தேன். இப்போது உலகமே என் வீடு. கருணாலாயா தொண்டுநிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்னை மீட்டு அரசுவிதிகளின் படி மீண்டும் பள்ளிக்கு அனுப்பினார்கள். என்னை ஊக்குவிக்க கால்பந்து விளையாட்டில் ஈடுபடுத்தினார்கள். மனமாற்றம் ஏற்பட்டது, நம்பிக்கை பிறந்தது. கால்பந்து விளையாட்டை கற்றுக்கொண்டால் கவலை இல்லை என்பதை உணர்ந்துவிட்டேன்,” என மனச்சுமையில் இருந்து மீண்ட கதையை சொல்கிறார் ஷாலினி.

கால்பந்து வெறும் விளையாட்டு அல்ல என்றும் தனது மனகாயங்களுக்கு மருந்தாக அமைந்தது என்கிறார் ஷாலினி. ”முதலில் கால்பந்து விளையாட்டிற்கான உடையை அணிந்துகொள்ள எனக்கு கூச்சமாக இருந்தது . சார்ட்ஸ், முட்டி வரை சாக்ஸ் எனக்கு பழக்கமற்றவை. நண்பர்களின் உதவியுடன் சிக்கல்களை கடந்துவந்தேன். எல்லா பிரச்சனைகளையும் கடந்துவர முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது,” என்கிறார் ஷாலினி.

தொண்டு நிறுவன அலுவலகத்தில் உள்ள மைதானம் மட்டும்தான் பயிற்சிபெற ஒரே இடம் என்று இருந்த நிலையில், சமூக ஆர்வலர்கள் சிலர் முன்வந்து தனியார் மைதானத்தில் விளையாட இலவச அனுமதி தந்தனர். தேர்ந்த பயிற்சியார்கள் இலவசமாக பயிற்சி அளித்தனர்.

இரண்டு ஆண்டுகளாக மட்டுமே கால்பந்து விளையாட்டில் ஈடுபட்டுள்ள ஷாலினி, இந்த பயிற்சியுடன் ரஷ்யாவில் விளையாடினார்.

”முதல் முறை விளையாடியபோது, மெக்சிகோ அணியை தோற்கடித்தோம். அடுத்தடுத்த போட்டிகளில், எதிர் அணியினர் எங்களைவிட தேர்ந்தவர்களாக இருந்தனர் என்பதை உணர்ந்திருந்தாலும், கடுமையாக போட்டியிட்டோம் என்பது உண்மை. எங்களின் பலம், பலவீனம் என்ன என்று அறிந்து கொண்டோம்,” என்கிறார் சங்கீதா.

ரஷ்யாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தெருவோரம் வசிக்கும் குடும்பத்தில் இருந்து வந்திருந்த குழந்தைகளிடம் உரையாடியபோது, தங்களைப் போலவே பல குழந்தைகளும் பிரச்சனைகளைக் கடந்து வந்துள்ளனர் என்பதை அறிந்து கொண்டதாகக் கூறினார் சங்கீதா.

”எங்களுக்கு தமிழ் மட்டும்தான் தெரியும். ஆங்கிலம் புரிந்துகொள்வோம். ஆனால் எங்களுடன் போட்டியிட்ட ஒவ்வொரு அணியினரும் ஒவ்வொரு மொழியில் பேசினார்கள். அவர்களின் கலாசாரம் பற்றி பேசினார்கள். புதிய அனுபவமாக இருந்தது,” என ரஷ்யா பயணத்தில் கிடைத்த அனுபவம் பற்றி உணர்ச்சி பொங்க பேசினார் சங்கீதா.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: