இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்க தமிழக மீனவர்கள் கோரிக்கை!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்க தமிழக மீனவர்கள் கோரிக்கை!

இலங்கை கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகள், படகு மூலம் மீன்பிடிக்கும் உள்நாட்டு மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவதுபோல, இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கும் வெளிநாட்டுப் படகுகளுக்கும் தண்டனை மற்றும் அபராதம் விதிப்பதற்கான புதிய சட்டம் இலங்கை மீன்வளத் துறையின் மூலம் கடந்த ஜனவரி 24, 2018 அன்று இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்ட மசோதாவிலுள்ள ஷரத்துகளின்படி மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 15 மீட்டர் நீளமுடைய படகுக்கு இலங்கை மதிப்பு ரூ.50 லட்சம் (இந்திய மதிப்பு ரூ.21 லட்சத்து 18,853 ), 15 முதல் 24 மீட்டர் நீளமுள்ள படகுக்கு ரூ.2 கோடி (இந்திய மதிப்பு ரூ.84 லட்சத்து 75,415), 24 மீட்டர் முதல் 45 மீட்டர் நீளமுள்ள படகுக்கு ரூ. 10 கோடி (இந்திய மதிப்பு ரூ.4 கோடியே 23 லட்சத்து 77,075), 45 முதல் 75 மீட்டர் நீளமுள்ள படகுக்கு ரூ. 15 கோடி (இந்திய மதிப்பு ரூ.6 கோடியே 633 லட்சத்து 56,561), 75 மீட்டருக்கும் அதிகமுள்ள படகுக்கு ரூ. 17.5 கோடி வரையிலும் (இந்திய மதிப்பு ரூ.7 கோடியே 41 லட்சத்து 59,882) அபராதம் விதிக்க முடியும்.

இதன் அடிப்படையில் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக இலங்கை எல்லைக்குள் சிறைப்பிடிக்கப்படும் தமிழக படகுகளுக்கு இந்த புதிய சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு அந்நாட்டு நீதிமன்றங்களிலில் வழக்கு பதிவு செய்யப்பபடுகிறது.

முதல் முறையாக சிறைபிடிக்கப்படும் மீனவர்களுக்கு நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்படுகிறார்கள். படகினை விடுவிப்பதற்கு அதன் உரிமையாளர்கள் ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜரானால் படகுகளும் விடுவிக்கப்படுகின்றன. ஆனால் படகின் உரிமையாளர்கள் ஆஜராகவில்லை என்றால் படகினை நாட்டுடமையாக்கப்படுகிறது.

இந்நிலையில் இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றள்ள கோத்தபய ராஜபக்ச டெல்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நடத்திய பேச்சுவார்தைக்குயில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களின் அனைத்துப் படகுகளும் விடுவிக்கப்படும் என அறிவித்தார்.

கடந்த ஜனவரி 2015-ம் ஆண்டு முதல் ஜனவரி 2018-ம் ஆண்டு வரையிலும், இலங்கை கடற்படையினரால் 185 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 34 படகுகள் மட்டுமே மீட்க முடிந்தது. மற்ற படகுகள் அனைத்தும் முறையாக இலங்கை அரசால் பராமரிக்கப்படாததால் சேதமடைந்தன.

கடந்த ஜனவரி 24, 2018 அன்று நிறைவேற்றப்பட்ட இலங்கை கடல் பகுதியில் எல்லை தாண்டி நுழைந்து மீன்பிடிக்கும் வெளிநாட்டுப் படகுகளுக்கு அபராதம் மற்றும் தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தின் கீழ் இதுவரையிலும் 41 தமிழக மீனவர்களின் படகுகள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 28 படகுகள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளது.

7 படகுகள் குறித்து வழக்குகள் நிலுவையில் உள்ளது. 6 படகுகளை நீதிமன்றம் விடுவிக்க உத்திரவிட்டும் படகுகளை விடுவிக்கப்படவில்லை. மேலும் இந்த சட்டத்தின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ராவுத்தர் என்ற மீனவர் இரண்டு ஆண்டு சிறை தண்டனையை தற்போது கொழும்பு சிறைச்சாலையில் அனுபவித்தும் வருகிறார்.

தற்போது இலங்கையில் மன்னார், யாழ்ப்பாணம், கிளிநோச்சி ஆகிய மாவட்ட கடற்பகுதிகளில் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. படகுகள் முற்றிலும் சேதம் அடைவதற்குள் அனைத்தையும் விடுவிக்க இரு நாட்டு அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>