திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலை அருகே பாச்சலூர் மலைக்கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, அப்பகுதியிலுள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். 16-12-2021 அன்று காலை சிறுமி, அக்கா, தம்பியுடன் இப்பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளிக்கு சென்றார். மதிய உணவு இடைவேளையில் 3 பேரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது வழக்கம். ஆனால், அன்று உணவு இடைவேளைக்கு சிறுமி வரவில்லை.
இதையடுத்து, அக்கா மற்றும் தம்பி இருவரும் சேர்ந்து, சகோதரியை தேடினர். ஆசிரியர்கள், பெற்றோரிடமும் தகவல் தெரிவித்தனர். அதன்பிறகே மாணவியை உறவினர்களுடன் இணைந்து, பெற்றோரும் தேடி அலைந்தனர். அப்போது அந்த பள்ளிக்கு அருகில் உள்ள புதர் பகுதியில் நெருப்பு புகைவதைக் கண்டு ஓடிச் சென்று பார்த்தனர், அங்கு சிறுமி முகம் எரிந்த நிலையில், குற்றுயிராக உயிருக்கு போராடியபடி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
சிறுமி அருகே பெட்ரோல் கேனும், தீப்பெட்டியும் கிடந்தது. உடனே பெற்றோர் அலறியடித்து சிறுமியை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.சிறுமியின் மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.இந்த நிலையில் கொடைக்கானல் பாச்சலூரில் பள்ளி அருகே சிறுமி உடல்கருகி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.