தமிழ்நாடு தினம் – நவம்பர் 1, சென்னையில் கொண்டாடப்பட்டது!

இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் அமைந்து, 64 ஆண்டுகள் முடிந்து, பல எல்லைப் போராட்ட மறவர்களின் தியாகங்களில் பிறந்ததுதான் நவம்பர், 1 தமிழ்நாடு  தினம்.

இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் எளிமையாக அமைந்துவிடவில்லை என்பதை வரலாறு சொல்லிக் கொண்டிருக்கிறது. மொழி வழி மாநிலங்கள் அமைந்தால்தான், இந்தியா என்ற ஒரு நாடு ஒன்றாக இருக்கும் என்பதை 1925-களிலேயே உணர்ந்திருந்தார், இந்தியாவின் தேச தந்தை திரு. காந்தி. ஆதனால்தான், பின்னர் அவர் தலைமை வகித்து வந்த இந்திய தேசிய காங்கிரசை, மொழி வழி அமைப்பாக மாற்றியமைத்தார்.  ஆனாலும்,1947-ல் சுதந்திர இந்தியா பிறந்த பின்பும், உடனடியாக மொழி வழி மாநிலங்கள் அமைப்பு குறித்து ஆட்சியாளர்கள் சிந்திக்கவே இல்லை.  

இந்நிலையில் தான் சென்னையில் வாழ்ந்து வந்த இந்திய சுதந்திர போராட்ட வீரரும், தெலுங்கு மொழியை தாய் மொழியாகக் கொண்ட பொட்டி சிறீராமுலு (Potti Sreeramulu), தெலுங்கு மக்களின் நலன்களைப் பாதுகாக்க சென்னையைத் தலைநகராகக் கொண்ட தனிமாநிலம் வேண்டும் என்ற கோரிக்கையோடு உயிர் துறக்கும் வரை உண்ணாநிலையை சென்னை லஸ் அருகில் உள்ள ஒரு நண்பர் வீட்டில் மேற்கொண்டு, 58ம் நாள் உயிர் நீத்தார். இதனால், கலவரம் மூண்டதால், அன்றைய பிரதமர் நேரு, மொழி வழி மாநிலங்கள் அமைக்க உத்தரவிட்டார்.

பொட்டி சிறீராமுலு-வுக்கு சென்னையில் சிலை :

மொழி வழி மாநிலம் அமைய உயிர் நீத்த பொட்டி சிறீராமுலு-வுக்கு ஆந்திர அரசு மிகுந்த மரியாதை செய்ய எண்ணி, அவர் உண்ணாநிலை மேற்கொண்ட சென்னையில் உள்ள “லஸ்” வீட்டை விலை கொடுத்து வாங்கிய பின்னர், அவருக்காக ஒரு சிலையையும் அங்கு நிறுவியுள்ளது என்பது பல தமிழர்களுக்கு தெரியாத செய்தி. அந்த வீட்டை பொதுமக்கள் பார்வைக்காக திறக்க எண்ணி, இதற்காக அந்திர அரசு குழுவை நியமித்து அதற்கான வேலைகளை கடந்த 3-4 ஆண்டுகளாக செய்து வருகிறது. விரைவில் அந்த வீடு திறக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

இது மட்டுமல்லாது, தெற்கு எல்லையான திருவாங்கூர் போராட்டம் என பல்வேறு தியாகங்களினால் தான் நவம்பர் 1 என்பது, தமிழ் நாடு தினமாக உருவானது. தமிழ் நாடும் நவம்பர் 1, 2019 அன்று அரசிதழில், தமிழ் நாடு தினமாக கொண்டாட ஒத்துக் கொண்டதை இப்போது நினைவு கூறுவோம். இந்நாளையே, தென் மாநிலங்களான கேரளா, கர்னாடகா மற்றும் ஆந்திரா ஆகியவை, தங்களது மொழி வழி மாநில தினமாக கருதி அரசு விழாவாகவும், மாநில விடுமுறை தினமென்றும், வெவ்வேறு பெயர்களை சொல்லி கொண்டாடி வருகின்றன.

இந்த மொழி வழி மாநில போராட்ட காலங்களில், திராவிட கட்சியினர் குரட்டைவிட்டு நிம்மதியாக தூங்கியதோடு மட்டுமல்லாது, அன்றைய ஒன்றைய அரசு மொழி வழி மாநிலங்கள் அமைக்க வேண்டி, ஏற்படுத்தப்பட்ட மத்திய அரசின் குழுவில் இடம் பெற்றிருந்த திரு. பணிக்கர் என்ற மலையாள உறுப்பினரிடம், திராவிட கட்சியின் அன்றைய தலைவரான தந்தை பெரியாரிடம் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இன்றைய இடுக்கி மாவட்டத்தை, கேரளாவோடு இணைத்துக் கொள்ள உதவினார் என்ற செய்தி நம்மையெல்லாம் கோபமடையவே செய்கிறது.

இப்படிபட்ட நிலையில், இப்போது தமிழகத்தில் திராவிட ஆட்சி செய்து வரும் தமிழக முதல்வராக உள்ள திரு. ஸ்டாலின்  அவர்களும் இரு தினங்களுக்கு முன், வேண்டாதவர் பேச்சைக் கேட்டு, நவம்பர் 1, தேதியை தமிழ் நாடு தினமாக கொண்டாட வேண்டாம் என்றும், மாறாக திராவிட கட்சியின் ஆட்சியில் திரு. அண்ணாதுரை, முதல்வராக இருந்தபோது, அவர்களால் “தமிழ்நாடு” என பெயர் சூட்டப்பட்ட நாளான ஜூலை 18ம் தேதிதான் தமிழ் நாடு தினமாக கடைபிடிக்கப்படும் என அறிவிப்பு செய்துள்ளது, தமிழ் தேசியம் பேசும் எம் போன்றோரை மன நிம்மதியில்லாமல் வருத்தமடைய செய்துள்ளது.

தமிழகத்தில் பலரும், பெயர் வைத்த நாளை, எப்படி பிறந்த நாளாக கொண்டாட முடியும் என சிறு பிள்ளைக்கு விளங்கும் வண்ணம் கேட்டதோடு, தமிழக முதல்வரின் இந்த திருத்தத்தை மறுபரிசிலணை செய்யப்பட வேண்டும் என கோரி வருகின்றனர்.

நமது உலகத் தமிழர் பேரவையும், இதே கோரிக்கையினை, தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களுக்கு, தமிழ் நாடு தினம் என்பது நவம்பர் 1-ம் தேதியை வைக்க வேண்டும் என்றும், பிற அனைத்து நிகழ்வுகளையும், அந்தந்த நிகழ்வுக்கு தக்கவாறு வேறு பெயர்களில் தனித் தனி விழா எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறது.

அக்னி சுப்ரமணியம்
தலைவர்
உலகத் தமிழர் பேரவை

https://worldtamilforum.com/

(புகைப்படம் : தமிழ் நாடு தினம் நவம்பர் 1, என்பதை குறிக்கும் வகையில், உலகத் தமிழர் பேரவை, தமிழர் தன்னுரிமை இயக்கம் மற்றும் மொழி வழி மாநில பிரச்சனையில் சென்னை-யை தாரை வார்க்க விடாமல் தடுத்து நிறுத்த காரணமாக இருந்தவர்களுள் முக்கியமானவரான ஐயா சிலம்பு செல்வர் ம.பொ.சி அவர்களின் பேரன் திரு. செந்தில் அவர்கள் முன்னிலையில் இன்று காலை, சென்னை தியாகராய நகரில் உள்ள  ஐயா சிலம்பு செல்வர் ம.பொ.சி அவர்களின்  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்ட போது எடுத்த படம்)

 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: