நதிக்கரை நாகரீகத்தை மீட்க கதையாடல் நிகழ்ச்சி-குழந்தைகள் உற்சாகம்

நெல்லை :  நெல்லையில் நதிக்கரை நாகரீகத்தை மீட்போம் என்னும் தலைப்பில் குழந்தைகளிடம் கதையாடல் நிகழ்வு குறுக்குத்துறை கல் மண்டபத்தில் நடந்தது. இதில் குழந்தைகள் உற்சாகமாக பங்கேற்றனர்.நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளப்படுத்தும் தாமிரபரணி நதியானது, நெல்லையின் பாரம்பரிய அடையாளமாகும். தாமிரபரணி நதி மற்றும் அதன் படித்துறைகள், கல் மண்டபங்கள், அதைச் சுற்றியுள்ள நாகரிகத்தை மீட்கும் வகையில் குழந்தைகளுக்கான படித்துறை கதையாடல் நிகழ்வு குறுக்குத்துறை கல் மண்டபத்தில் நடந்தது. ஊஞ்சல் முற்றம், குருத்து குழந்தைகள் அமைப்பு, நல்லதை பகிர்வது நம் கடமை, கலை பண்பாட்டு மன்றம் உள்ளிட்டவை இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தின.

கதைசொல்லி மதியழகன் குழந்தைகள் மத்தியில் கோமாளி வேஷம் போட்டு கதைகள் கூறினார். குழந்தைகள் ஆவலோடு கேட்டு ரசித்தனர். குழந்தைகளும் தங்கள் பங்கிற்கு தங்களுக்கு தெரிந்த கதைகளை தெரிவித்தனர். எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன், மயன் ரமேஷ், வெங்கட், ராஜேஷ், கதிர், காஞ்சனை மணி, கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் இயற்கையின் அழகையும், ஆற்றங்கரையில் முகாமிடும் பறவைகளையும் கண்டு ரசித்தனர். தாமிரபரணி நதிக்கரையில் குறுக்குத்துறை பகுதியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பல்வேறு கல் மண்டபங்கள் உள்ளன. தற்போது மக்களுடைய பயன்பாட்டில் இருந்தாலும் அவை மிகவும் சேதமடைந்து காணப்படுகின்றன. அவற்றை சீரமைப்பதோடு, தாமிரபரணி நாகரிகத்தை குறுக்குத்துறை மூலம் மீட்டெடுக்க முன்வர வேண்டும். இதற்கு உதவ முன்வந்துள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தாமிரபரணி நதி பாதுகாப்பு, கல் மண்டபங்கள் பராமரிப்பு, மரம் வளர்த்து இயற்கையை பாதுகாப்பது உள்ளிட்ட விழிப்புணர்வு குழந்தைகளுக்கு ஊட்டப்பட்டது.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: