ஸ்டெர்லைட் ஆலை : மக்கள் போராடுவது ஏன்? – 5 முக்கிய கேள்விகள்!

ஸ்டெர்லைட் ஆலை : மக்கள் போராடுவது ஏன்? - 5 முக்கிய கேள்விகள்!

ஸ்டெர்லைட் ஆலை : மக்கள் போராடுவது ஏன்? – 5 முக்கிய கேள்விகள்!

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்து தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமையன்று ஊர் மக்கள் போராட்டம் நடத்தினர். இதில் ஏறத்தாழ 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதாக போராட்டக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

சரி… ஸ்டெர்லைட் தூத்துக்குடியில் என்ன செய்து கொண்டிருக்கிறது. அந்த ஆலை எப்போது தொடங்கப்பட்டது உள்ளிட்ட 5 கேள்விகளும் அதற்கான பதில்களும்.

ஸ்டெர்லைட் என்றால் என்ன?

`வேதாந்தா` உலகின் மிகப்பெரிய உலோகம் மற்றும் சுரங்கத் தொழில் நிறுவனம். அதன் உரிமையாளர் அனில் அகர்வால். பாட்னாவில் பிறந்த இவர், பள்ளிப்படிப்பை முடித்ததும், 1972 ஆம் ஆண்டு தந்தையுடன் அலுமினிய தொழிலில் ஈடுப்பட்டார். பின் மும்பைக்கு சென்றவர், வேதாந்தா நிறுவனத்தை தொடங்கினார். லண்டன் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் இந்திய நிறுவனம் இது.

வேதாந்தாவின் துணை நிறுவனம்தான் ஸ்டர்லைட், இது குஜராத்தின் சில்வஸா மற்றும் தமிழ்நாட்டின் தூத்துக்குடி ஆகிய இரு பகுதிகளில் இயங்குகிறது. தூத்துக்குடியில் உள்ள ஆலை ஓர் ஆண்டுக்கு 4 லட்சம் மெட்ரிக் டன் தாமிரத்தை உற்பத்தி செய்கிறது. 2017 ஆம் நிதியாண்டில் அதன் வர்த்தகம் 11.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

எப்போது தூத்துக்குடியில் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது?

மஹாராஷ்ட்ரா தொழில் வளர்ச்சி நிறுவனம், முதலில் 1992 ஆம் ஆண்டு, ஸ்டர்லைட் நிறுவனத்துக்கு கடலோர பகுதியான ரத்னகிரியில் 500 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது. ஆனால், உள்ளூர் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்ததை அடுத்து, மஹாராஷ்ட்ர ஆரசு இதற்கான ஒரு ஆய்வு குழுவை அமைத்தது. அவர்கள் அளித்த பரிந்துரையின்படி, 1993 ஆம் ஆண்டு கட்டுமான பணிகளை நிறுத்தும்படி ஆட்சியர் ஸ்டர்லைட் நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பினார். இதற்கு பின்தான், அந்நிறுவனம் தமிழகத்திற்கு வந்தது.

இது குறித்து பேசும் சூழலியலாளர் நித்தியானந்த் ஜெயராமன், “1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாசுகட்டுபாடு வாரியம் இந்நிறுவனத்துக்கு தடையில்லா சான்றிதழ் அளித்தது. அந்நிறுவனத்தை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்ய கோரியது. சூழலியல் மாசை கருத்தில் கொண்டு மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கி.மீ தொலைவில்தான் இந்நிறுவனம் அமைக்கப்பட வேண்டும் என்றது. இதற்காக, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அந்நிறுவனம் செய்ய வேண்டும். ஆனால், இந்நிறுவனம் மன்னார் வளைகுடாவிலிருந்து 14 கி.மீ தொலைவிலேயே அமைக்கப்பட்டது.”என்கிறார்.

ஸ்டர்லைட் நிறுவனம் சூழலியல் மாசை உண்டாக்குவதாக குற்றஞ்சாட்டி, நேஷனல் ட்ரஸ்ட் ஆஃப் க்ளீன் என்விரான்மென்ட், வைகோ, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட தரப்பிலிருந்து வழக்குகள் பதியப்பட்டன.

1997-2012 ஆம் ஆண்டு காலத்தில் சில ஆண்டுகள் முறையான அரசு ஒப்புதல்களை புதுப்பிக்காமலும் ஆலையை நடத்தியதுதான் இந்த நிறுவனத்தின் மீதான பிரதான குற்றச்சாட்டு.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், 2010 ஆம் ஆண்டு நிறுவனத்தை மூடக்கோரியது. உச்சநீதிமன்ற மேல் முறையீட்டில், நூறு கோடி அபராதம் அளித்து நிறுவனம் தொடர்ந்து செயல்பட அனுமதி அளித்தது.

ஏன் இந்த திடீர் போராட்டம்?

இது திடீர் போராட்டம் எல்லாம் இல்லை. அந்த நிறுவனம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து சட்டத்துக்கு உட்பட்ட அனைத்து வழிகளிலும் போராடி வருகிறோம். சனிக்கிழமையன்று நடந்த போராட்டம் அந்நிறுவனத்தின் விரிவாக்கத்தை எதிர்த்து நடந்தது. அந்நிறுவனத்தின் தற்போதைய உற்பத்தி திறன் ஆண்டிற்கு 4 லட்சம் டன். இதுவே மோசமான சூழலியல் விளைவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில். மேலும் ஆண்டிற்கு 4 லட்சம் டன் தாமிர உற்பத்தி செய்யும் அளவுக்கு விரிவாக்குவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார்கள் அந்நிறுவனத்துக்கு எதிராக போராடி வரும் போராட்டக் குழுவினர்.

“நாங்கள் ஸ்டர்லைட் நிறுவனத்தை எதிர்க்கிறோம் என்று குறுக்கி பார்க்காதீர்கள். குடியிருப்பு பகுதியில் தாமிர உருக்காலை இருப்பதைதான் எதிர்க்கிறோம். அந்நிறுவனத்தின் சூழலியல் தவறுகளை சரியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்காத, மக்கள் பாதுகாப்பின் மீது அக்கறை கொள்ளாத அரசைதான் எதிர்க்கிறோம்.” என்கிறார் நித்தியானந்த் ஜெயராமன்.

ஏற்கெனவே அந்த ஆலையால், காற்று, நீர், நிலம் மாசடைந்து வருகிறது. இதை நீதிமன்றமும் ஒப்புக் கொண்டுள்ளது. இப்படியான சூழ்நிலையில், மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதியில் ஆலையை விரிவாக்கப்படுகிறது. இது எப்படி சரியாக இருக்கும்? என்று கேள்வி எழுப்புகிறார் நித்தியானந்த்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போரட்டக்குழுவைச் சேர்ந்த செயற்பாட்டாளர் பாத்திமா பாபு தற்போது இயங்கிவரும் ஆலை, நீர், காற்று என இயற்கையை மாசுபடுத்தி, சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த ஆலையை மேலும் விரிவாக்கம் செய்வதை அனுமதிக்கக்கூடாது என்கிறார்.

நிறுவனம் என்ன சொல்கிறது?

தூத்துக்குடி மக்கள் பலர் ஒன்று சேர்ந்து நடத்திய போராட்டத்தில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ள மக்கள் தொடர்பு அதிகாரி எம். இசக்கியப்பன், ஆலையின் விரிவாக்கத்திற்கு தேவையான எல்லா அனுமதிகளையும் அரசாங்கத்திடம் பெற்றுள்ளதாக தனது அறிக்கையில் கூறுகிறார்.

”ஆலையின் கழிவுகள் எந்த விதத்திலும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் நீடித்த பயன்பாட்டிற்கு எடுத்துச்செல்கிறோம். ஆலைக் கழிவுகளை தீவிரமாகக் கண்காணித்து நிலம், நீர், காற்று என சுற்றுப்புறத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கிறோம்.” என்கிறது அந்நிறுவனம்.

சுத்திகரிக்கப்பட்ட கடல் நீர் மற்றும் மாநகர கழிவு நீர் மட்டுமே புதிய ஆலையில் பயன்படுத்தப்படும். ஆலையின் அனைத்து திரவக்கழிவுகளும் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது. ஆலையிலிருந்து எந்த கழிவு நீரும் வெளியேற்றப்படுவதில்லை என்று விளக்கும் அந்நிறுவனம், ”இந்த ஆலையை இயக்குவது என்பதோடு, அந்த பகுதியில் உள்ள மக்களின் நலனையும் கணக்கில்கொண்டு அவர்களின் வளர்ச்சியிலும் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தின் மூலம் நேரடியாக 2,000 வேலைகளும், மறைமுகமாக 20 ஆயிரம் வேலைகள் அளிக்கப்படும்,” என்கிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: