மாமல்லபுரம் கடற்கரைக் கோவில், பழங்கால கிணற்றில், கடல் மட்ட நீர் ஊற்றை கண்டு, பயணியர் வியக்கின்றனர்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.
தமிழக சங்க கால கோவில்கள் செங்கல், மரத்தால் அமைக்கப்பட்டன. கி.பி., 7ம் நுாற்றாண்டின் பல்லவர்கள், முதன் முதலாக பாறை வெட்டு கற்களில் கோவில்கள் அமைத்தனர். இத்தகைய கோவில்களில், மாமல்லபுரம் கடற்கரைக் கோவில் குறிப்பிடத்தக்கது. கோவில் அமைக்கும் போது, அதன் கட்டுமான தேவைக்கும், சுவாமி அபிஷேக தீர்த்தத்திற்காகவும், கோவில் அருகில் கிணறு அமைக்கப்படும்.
இக்கோவில் வளாகத்திலும், அத்தகைய கிணறு, பல்லவ காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பல நுாற்றாண்டுகளுக்கு முன், கோவிலை மணல் சூழ்ந்து மேடிட்டு, நில மட்டம் உயர்ந்து, கோவில் புதையுண்டிருந்தது. அகழாய்வில் கோவில் கண்டறியப்பட்டு, பாதுகாக்கப்படுகிறது. அப்போது, பழங்கால கிணறு அறியப்படவில்லை. வழிபாடு அற்ற கோவில் என்பதால், கிணற்று அவசியம் இன்றி கவனத்தில் கொள்ளவும் இல்லை. கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், கோவிலின் வட பகுதி தரையை பராமரிக்க முயன்ற போது, நில மட்டத்தின் கீழ், பாறை கற்களாலான அகல தொட்டி காணப்பட்டது.
அகழாய்வில், 6 அடி ஆழத்தில், தரை மட்ட கிணறு, சுற்றிலும் படிகளுடன் தொட்டி அமைப்பு, வராக சிற்பத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பல்லவர் கால நிலமட்டம், தற்கால நிலமட்டத்தின் கீழ், 6 அடி ஆழத்தில் இருந்ததும், அதன் கீழ், 6 அடி ஆழ கிணறு அமைந்திருப்பதும் தெரிந்தது.
இக்கிணற்றின் நீர்மட்டம், பொதுவாக குறைவாகவே இருக்கும். கடல் மட்டம், கிணற்றின் மேல்மட்ட பரப்பிற்கு இணையாக அமைந்தால், கிணற்றிலும் நீரூற்று அதிகரித்து, அதன் மேற்பரப்பு வரை நீர்மட்டம் மேலேழுந்து பரவும். தற்போதும், அவ்வாறு நீர் பெருக்கெடுக்கிறது. இதை காணும் பயணியர் வியக்கின்றனர்.
கிணற்றை வைத்தே, பழங்கால தரைமட்டத்தை அறிய முடிகிறது; சிலரே, இது தெரிந்து ஆச்சரியப்படுகின்றனர்; அனைவரும் அறிய, அகழாய்வு , கிணறு பற்றி தகவல் பலகை அமைக்க வேண்டும் என்று சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.