மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் அசத்திய அரசுப் பள்ளி மாணவி!

மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் அசத்திய அரசுப் பள்ளி மாணவி!

மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் அசத்திய அரசுப் பள்ளி மாணவி!

மாவட்ட அளவில் நடந்த 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் கோத்ராபட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஜெயராணி, முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர், அந்த ஊரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துவருகிறார்.

தேசிய அளவில் திறமையான தடகள வீரர்களைக் கண்டறியும் திட்டத்தின் கீழ், 2017-18 -ம் ஆண்டுக்கான மண்டல அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள், திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் (25.03.2018) நடந்தது. இதை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தியது. இப்போட்டியில், கல்வி மாவட்ட அளவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தவர்கள் கலந்துகொண்டனர். பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில்தான் வெற்றி வாகை சூடியிருக்கிறார் ஜெயராணி.

இதுகுறித்து அவர், “எனது அப்பா பெயர் ராமசாமி. அம்மா தனலெட்சுமி இருவரும் கூலி வேலை செய்றாங்க. எனக்கு சின்ன வயசிலேயே விளையாட்டில் ஆர்வம் உண்டு. ஓட்டப்பந்தயம்னா எனக்கு உயிர். ஒன்பதாவது படிக்கும் என்னோட அக்கா செல்வராணியோடு எனது வீட்டின் அருகே உள்ள வயல் காட்டில் ஓடி பயிற்சி எடுப்பேன். முதன் முதலாக மேட்டுச்சாலையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கான தடகளப்போட்டியில் கலந்துகொண்டு 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்தேன். எல்லோரும் என்னைப் பாராட்டினாங்க. என்னோட அப்பா, அம்மா, அக்கா ரொம்ப சந்தோஷப்பட்டாங்க.

அடுத்து, புதுக்கோட்டை கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு இரண்டாமிடம் பிடித்தேன். முதலிடம் பிடிக்கவில்லை என்ற வருத்தம் இருந்தது. அதன் பிறகு, திருச்சியில் நடைபெறும் மண்டல அளவிலான போட்டியில் கலந்து கொள்ள அழைப்புக் கடிதம் வந்தது. கடிதம் வந்த நாளிலிருந்து எனது பள்ளி ஆசிரியர்கள் எனக்கு தினமும் 3 மணி நேரத்துக்கு மேல் ஓட்டப் பயிற்சி அளித்தனர். திருச்சியில் உள்ள விளையாட்டு மைதானத்தைப் பார்த்தவுடன் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நான் ஏற்கெனவே ஓடிய புதுக்கோட்டை மைதானத்தைவிட, இந்த மைதானம் நன்றாக இருந்தது. ஆனால், என்னுடன் ஓடுவதற்குத் தயாராக இருந்தவர்களைப் பார்த்தவுடன் பயம் வந்துவிட்டது.

அவர்கள் எல்லாம் என்னைவிட உயரமானவர்களாகவும், யூனிபார்மோடும், காலில் ஷூ அணிந்தும் இருந்தாங்க. இந்த முறை நான் போட்டியில் ஓடுவதைப் பார்க்கிறதுக்காக, என் அப்பா, அம்மா ஆசிரியர்கள் உடன் வந்ததால், எனக்குள் வெற்றிபெற வேண்டும் என்ற வெறி மட்டுமே இருந்தது. ஆரம்பத்தில், பத்தாவது ஆளாக ஓடிய நான், எனது அப்பாவுக்கு சந்தோசத்தைக் கொடுக்க வேண்டும் என நினைத்து, வேகமாக ஓடி முதலிடத்தைப் பிடித்தேன். என் அம்மா அப்பா மிகவும் சந்தோஷப்பட்டார்கள். எனக்கு பதக்கமும், ஆறாயிரம் பரிசும் சான்றிதழும் கொடுத்தார்கள். எனது ஆசையெல்லாம் விளையாட்டிலும் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும்; பெரிய பிள்ளையா ஆனதும் ஒலிம்பிக்கில் இடம்பெற வேண்டும்” என்பதுதான்.

இதுகுறித்து வகுப்பாசிரியர் ரவிச்சந்திரன் கூறும்போது, “திருச்சியில் கலந்துகொள்ள அழைப்புக் கடிதம் வந்தவுடனேயே அருகில் புதர் மண்டிக்கிடந்த இடத்தை சீர்செய்து ஜெயராணிக்கு பயிற்சி அளித்தோம். விளையாட்டில் சிறப்பாகச் செயல்படும் மாணவர்களுக்கு எப்போதுமே நாங்கள் தனிக்கவனம் செலுத்துவோம். எங்கள் பள்ளியில் மொத்தம் 290 மாணவ மாணவியர் படித்துவருகிறார்கள். அவர்களிடம் விளையாட்டுத் திறமை உள்ளது. ஆனால்,சரியான அளவில் மைதான வசதிகள் இல்லை. இருந்தால், இன்னும் திறமையான மாணவர்களை உருவாக்க முடியும். அரசுப் பள்ளியை அலட்சியப்படுத்தக் கூடாது. தனியார் பள்ளிக்கு மேலாக படிப்பிலும் விளையாட்டிலும் அரசுப் பள்ளியின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என நினைத்து செயல்படுகிறோம். ஜெயராணி, எங்கள் பள்ளிக்குப் பெருமைசேர்த்துள்ளார்” என்றார்.

  • விகடன்
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: