கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கைக் கடற்படையினர் இன்று அதிகாலை படகுகளுடன் சிறைப்பிடித்துச் சென்றனர்.
மீன்களின் இனப்பெருக்க காலத்திற்காகக் கடைப்பிடிக்கப்பட்ட 61 நாள் தடைக்காலம் முடிந்த நிலையில், கடந்த 15-ம் தேதி முதல் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர். இதனிடையே, மானிய விலையிலான டீசல் வழங்கப்படாததால், ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள், கடும் சிரமத்துக்கிடையே கூடுதல் விலை கொடுத்து டீசல் வாங்கிக்கொண்டு கடலுக்குச் சென்று வருகின்றனர்.
நேற்று, ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து சுமார் 500 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். நேற்றிரவு பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதிகளில் மீன்பிடித்துவிட்டு இன்று காலை கரை திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், 2 விசைப்படகுகளை சிறைப்பிடித்துச் சென்றனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தேவதாஸ், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப்படகுகளையும், அதில் சென்ற ரைந்தீஸ், சுதன், பாலு, கார்த்திக்ராஜா உள்ளிட்ட 12 மீனவர்களையும் சிறைப்பிடித்துச் சென்றனர். சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்கள், தலைமன்னார் கடற்படை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ராமேஸ்வரம் வந்திருந்த மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன் சிங், இலங்கைக் கடற்படையினர் பிடித்துச்சென்ற படகுகளை மீட்பதுகுறித்து விரைவில் நடக்க இருக்கும் இரு நாட்டு கூட்டுக்குழுக் கூட்டத்தின்போது வலியுறுத்தப்படும் என கூறிச் சென்றார். இந்நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் படகுகளுடன் இலங்கைக் கடற்படையினரால் மீண்டும் சிறைப்பிடிக்கப்பட்டிருப்பது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.