மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் களமிறங்கும் கனிமொழி, ராஜேஷ்குமார்: மாநிலங்களவைக்கு திமுக பலம் 10 ஆக உயர்கிறது!!

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் இருந்த கே.பி. முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதையடுத்து கடந்த மே 7-ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இந்தச் சூழலில் தமிழகம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் ,மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் வருகிற 4ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், இரு மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலுக்கு திமுக வேட்பாளர்களாக நாமக்கல் மாவட்ட திமுக பொறுப்பாளராக இருக்கும் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் மற்றும் தி.நகர் தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி சோமு ஆகியோர் போட்டியிடுவார்கள் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (செப். 14) வெளியிட்ட அறிவிப்பில், ‘2021 அக்.4 அன்று, நடைபெறவிருக்கும் மாநிலங்களவை இரண்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களாக கனிமொழி என்.வி.என்.சோமு, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்படுகிறது’ என தெரிவித்துள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கனிமொழி முன்னாள் திமுக எம்பி என்விஎன் சோமு அவர்களின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளதால் மாநிலங்களவைக்கு திமுக பலம் 10 ஆக உயர்கிறது.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>