குஜராத் மியூசியத்திலிருந்து மீட்கப்பட்ட தஞ்சை பெரிய கோயிலுக்குச் சொந்தமான மாமன்னர் ராஜராஜ சோழன் மற்றும் உலகமாதேவி சிலைகள் சென்னை வந்தடைந்தன.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
60 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட தஞ்சைப் பெரிய கோயிலுக்குச் சொந்தமான ராஜராஜ சோழன் மற்றும் அவரது பட்டத்து அரசியான உலகமாதேவியின் ஐம்பொன் சிலைகள், சமீபத்தில் கண்டறியப்பட்டன. கோயிலில் பணிபுரிந்த அதிகாரிகள் சிலர், தஞ்சையில் உள்ள சறுக்கைக் கிராமத்தைச் சேர்ந்த ராவ் பகதூர் சீனிவாச கோபாலாச்சாரி மூலமாக சென்னைக்குக் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், கௌதம் சாராபாய் என்பவருக்கு கோடிக்கணக்கான ரூபாய்க்கு இரு சிலைகளையும் விற்கப்பட்டது தெரியவந்தது.
இதை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்து விசாரணைசெய்துவந்தனர். அதன் அடிப்படையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சாராபாய் ஃபவுண்டேஷன் – காலிகோ அருங்காட்சியகத்தில், தமிழகச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர்கள் நேற்று நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, இரு சிலைகளும் அந்த அருங்காட்சியகத்திலிருந்தது உறுதியானது. அதைத் தொடர்ந்து, சிலைகளை அருங்காட்சியக அதிகாரிகள் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
அதில், இரண்டரை அடி உயரமுள்ள மாமன்னர் ராஜராஜன் சோழன் சிலையின் மதிப்பு 100 கோடி ரூபாயாகும். இரண்டடிக்கும் குறைவாக உள்ள பட்டத்து இளவரசி உலகமாதேவி சிலையின் மதிப்பு 50 கோடி ரூபாயாகும். அந்தச் சிலைகள் தற்போது ரயில் மூலம் சென்னை வந்தடைந்தது. அந்தச் சிலையை மீட்டுக் கொண்டுவந்த ஐ.ஜி பொன்மாணிக்கவேலுக்குத் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மாலை அணிவித்து வரவேற்றார். சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த சிலையை சிவனடியார்கள் இசைவாத்தியம் முழங்கியும், மேளதாளத்துடனும் உற்சாகமாக வரவேற்புக் கொடுத்தனர்.