ஒலிம்பிக் கனவுகளுடன் தமிழகத்தில் உருவாகும் நம்பிக்கை கீற்று ‘கோலேசியா’!

ஒலிம்பிக் கனவுகளுடன் தமிழகத்தில் உருவாகும் நம்பிக்கை கீற்று 'கோலேசியா'!

ஒலிம்பிக் கனவுகளுடன் தமிழகத்தில் உருவாகும் நம்பிக்கை கீற்று ‘கோலேசியா’!

தந்தையை இழந்து மிக எளிய பின்னணியில் தாய் மற்றும் தம்பியுடன் வாழ்ந்து வரும் 10-ஆம் வகுப்பு பள்ளி மாணவியான கோலேசியாவுக்கு 2024 பாரீஸ் ஒலிம்பிக்ஸ் மட்டும்தான் கனவு. தனது கனவை அடைய அவர் செய்த தியாகங்கள் என்ன?

கோலேசியாவின் ஒருநாள் வாழ்க்கை எப்படி?


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


அதிகாலை 5 மணிக்கு எழுந்து, ஏறக்குறைய 3 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பள்ளிக்கு சென்று விளையாட்டு மைதானத்தில் சரியாக 6 மணிக்கு இருக்க வேண்டும்.

பின்னர், காலை 8 மணி வரை விளையாட்டுப் பயிற்சி. பின்னர் அங்கேயே வகுப்புக்கு தயாராக வேண்டும். பள்ளிக்கூட நேரம் முடிந்தவுடன் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மீண்டும் விளையாட்டு மைதானத்தில் பயிற்சி எடுக்க வேண்டும்.

வீட்டிற்கு சென்று பாடங்களை படித்தல். இரவில் தூக்கம். காலை மீண்டும் இதே ஒழுங்குமுறையை தொடர வேண்டும். இதுதான் அவரின் அன்றாட வாழ்க்கை.

இந்தியாவின் தெற்கிலிருந்து நம்பிக்கை நட்சத்திரமாய் விளையாட்டு துறையில் உருவாகி வரும் தடகள வீராங்கனை இவர்.

சமீபத்தில் நடைபெற்ற முதலாவது கேலோ இந்தியா பள்ளி மாணவ மாணவியருக்கான விளையாட்டுப் போட்டிகளில் டிரிபிள் ஜம்ப் எனப்படும் மும்முறை தாண்டுதல் போட்டியில் கோலேசியா தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இதன் மூலம், இந்திய அரசின் உதவித் தொகை பெற்று தன்னுடைய திறமையை மேம்படுத்தி ஒலிம்பிக்ஸ் வீராங்கனையாக செல்லும் வாய்ப்பையும் இது வழங்கலாம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் சிறுநகரமாக விளங்கும் வடக்கன் குளத்தில் அமைந்துள்ளது புனித தெரசா மேல்நிலை பள்ளி.

1932ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில் இருந்துதான் இந்தியாவின் ஒலிம்பிக் கனவு நாயகியாக உருவாக தொடங்கியிருக்கிறார் மாணவி கோலேசியா.

கோலேசியாவின் தந்தை ஜெபசீலன் மாரடைப்பால் மரணமடைந்தார். மூன்று குழந்தைகளுக்கு தாயான புஸ்பம், பீடி சுற்றுதல், தோட்ட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். கோலேசியாவின் மூத்த சகோதரிக்கு திருமணமாகிவிட்டது.

தொடக்கல்வியை புதியம்புத்தூர் என்கிற சொந்த கிராமத்தில் முடித்த கோலேசியா, 6ம் வகுப்பு படிக்க புனித தெரசா மேனிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

மகளுக்கு ஊக்கமூட்டுவதைத் தவிர தன்னால் கூடுதலாக ஒன்றும் செய்ய முடியவில்லை என்கிறார் புஸ்பம்.

புனித தெரசா மேல் நிலைப் பள்ளியில் படிப்பை தொடங்கிய பின்னர், கோலேசியாவின் கவனம் படிப்பில் மட்டுமல்ல. விளையாட்டிலும் சென்றது.

ஆறாம் வகுப்பில் ‘வேல்டு வித் டெஸ்ட் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாவது இடம் பெற்ற கோலேசியா, அதன் பின்னர் ஏராளமான பதக்கங்களை வென்று சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

கோவையில் நடைபெற்ற போட்டியில் டிரயத்லான் (100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் நீளம் தாண்டுதல் போட்டிகளில் அவர் தங்கப்பதக்கம் பெற்றார்.

டெல்லியில் நடைபெற்ற கேலோ இந்தியா பள்ளி மாணவ மாணவருக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் டிரிபிள் ஜம்ப் எனப்படும் மும்முறை தாண்டுதல் போட்டியில் பெற்ற தங்கப் பதக்கம் வென்றார் கோலேசியா.

கேலோ இந்தியா சார்பில் டெல்லியில் நடைபெற்ற மும்முறை தாண்டுதல் போட்டியில் 12.29 மீட்டர் தாண்டி தங்கப்பதக்கம் பெற்றுள்ளதால், எட்டு ஆண்டுகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கு கோலேசியா தகுதிப்பெற்றுள்ளார்.

இந்த தொகையை வைத்துக்கொண்டு, தீவிரப் பயிற்சி பெற்று, இனிவரும் போட்டிகளில் தாண்டும் நீளத்தை அதிகரித்து காட்டினால், 2024ம் ஆண்டு பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் செல்லவும் வாய்ப்பு கிடைக்கலாம் என்று கோலேசியா தெரிவிக்கிறார்.

தான் படிக்கும் பள்ளியின் விளையாட்டு மைதானத்திலேயே பயிற்சி எடுத்துக் கொள்ளும் கோலேஷியாவுக்கு இந்தப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரான மரிய தேவசேகர் பயிற்சி அளித்து வருகிறார்.

“என்னுடைய திறமையை கண்டறிந்து, தட்டிக்கொடுத்து, பயிற்சி அளித்து வளர்த்தவர் என்னுடைய உடற்கல்வி ஆசிரியர்தான்” என்கிறார் கோலேஷியா.

கோலேஷியா எவ்வாறு பயிற்சி எடுத்துக்கொள்கிறார்? எவ்வாறு ஒத்துழைக்கிறார் என்று உடற்பயிற்சி ஆசிரியர் மரிய தேவசேகரிடம் கேட்டபோது, “நேர்மையான மாணவி. சரியாக காலம் தாமதிக்காமல் காலை 6 மணிக்கு பயிற்சிக்கு தயாராக வந்துவிடுபவர். பயிற்சியை சிரத்தையோடு செய்து முடிப்பவர்” என்று தெரிவித்தார்.

“போட்டி நடைபெறும்போது, அவர் முடித்துவிட்ட முயற்சியில் செய்த சிறு தவறை சுட்டிக்காட்டி விட்டால்போதும், அடுத்த முறை முயற்சிலேயே அதனை சரிசெய்து காட்டும் திறமையுடைவர்” என்று தேவசேகர் மேலும் கூறினார்.

நாங்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள குஜராத், போபால், டெல்லி என்று இந்தியா முழுவதும் செல்வதற்கு எங்களுக்கு எல்லா உதவியும் செய்வது இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் என்று கோலேஷியா தெரிவித்தார்.

இந்தப் பள்ளியில் இருந்து விளையாட்டு நட்சத்திரங்கள் உருவாகுவதற்கு முன்னாள் மாணவர்கள் பெரும் பங்காற்றி வருகின்றனர்.

இன்னும் ஏறக்குறைய 6 ஆண்டுகள் இருக்கின்ற பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய பிரதிநிதிக்குழுவில் இடம்பெறும் குறிக்கோளோடு பயிற்சியை தொடர்ந்து வருகிறார் கோலேஷியா.

முதலாவது கேலோ இந்திய பள்ளி மாணவ மாணவியர் போட்டிகளில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய கோலேஷியா இந்திய விளையாட்டு துறையில் நம்பிக்கை கீற்றாக உருவாகி வருகிறார்.

ஏழ்மை நிலையால் வீட்டில் முடங்கிவிடாமல், சாதனைகளை நோக்கி பயணிக்கிறார் கோலேசியா.

  • பிபிசி தமிழ்
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: