நெல்லை பள்ளி கட்டட விபத்து!: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 3 மாணவரின் குடும்பத்தினரை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். திருநெல்வேலி மாநகரில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில், கடந்த 17ம் தேதி காலை 10.50 மணியளவில், பள்ளியில் உள்ள கழிவறைத் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி டி. விஸ்வரஞ்சன், கே.அன்பழகன் மற்றும் ஆர். சுதீஷ் ஆகிய மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சுவர் இடிந்து விழுந்ததில் கழிவறைக்கு சென்ற 5 மாணவர்கள் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த சாஃப்டர் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் ஆய்வு செய்தார்.

விபத்து குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.
இதையடுத்து பழுவூர், நரசிங்கநல்லூர், தட்சநல்லூர் பகுதிகளில் உள்ள உயிரிழந்த மாணவர்களின் வீடுகளுக்கே சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் வண்ணாரப்பேட்டை  மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆபத்தான கட்டிடங்கள் இடிக்கப்படுவதையும் அவர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் எந்தெந்த பள்ளி கட்டிடம் இடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது என்பதை மாவட்ட கல்வி முதன்மை அலுவலர்களிடம் அறிக்கை பெறப்படுவதாக தெரிவித்தார்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>