ரூ.563 கோடியில் மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டு திட்டம் – சட்டப்பேரவை உரையில் ஆளுநர் அறிவிப்பு!

ரூ.563 கோடியில் மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டு திட்டம் – சட்டப்பேரவை உரையில் ஆளுநர் அறிவிப்பு!

கடந்த 2011 முதல் ஆளுநர் உரைகளில் அறிவிக்கப்பட்ட 105 அறிவிப்புகளில் 73 அறிவிப்புகள் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டு மீதமுள்ளவை பல்வேறு நிலைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2017 பிப்ரவரி முதல் சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் வெளியான 453 அறிவிப்புகளில் 114 அறிவிப்புகள் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளன. 303 அறிவிப்புகளுக்கு தேவையான ஒப்புதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இவையும் விரைவில் நிறைவு செய்யப்படும்.

நல் ஆளுமைக் குறியீட்டின் ஒரு பகுதியான நீதித்துறை, பொதுப் பாதுகாப்பில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. காஞ்சிபுரம் அத்திவரதர் விழா, திருவண்ணாமலை கார்த்திகை தீபம், தேவர் ஜெயந்தி போன்ற பல பெரிய நிகழ்வுகள் அனைத்தும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு சிறப்பாக நடைபெற்றன.சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட தடுப்பு மற்றும் தீர்வுநடவடிக்கைகளால் தமிழகம்அமைதியாகவும் அசம்பாவிதங்கள் இன்றியும் பாதுகாக்கப்படுகிறது.

கடந்த 2019 அக்டோபர் 11, 12 தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்தித்தனர். உள்ளூர் மக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி சந்திப்பு சுமூகமாக நடைபெற மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் பரவலான பாராட்டுகளைப் பெற்றன.

மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டுக்கு உதவ பிரதமர் மோடி உறுதி அளித்துள்ள நிலையில் ரூ.563 கோடியே 50 லட்சத்தில் அதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும். சீனாவின் பியூஜியன் மாநிலத்தோடும் குவான்சூவோ நகரத்தோடும் தொடர்புகளை ஏற்படுத்த மோடி – ஜி ஜின்பிங் சந்திப்பின்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக சீனாவில் இருந்து ஒரு உயர்மட்டக் குழு சமீபத்தில் சென்னை வந்தது. இவ்வாறு ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: