மாநில அரசு விண்ணப்பிக்கும் மொழியில் பதில்: மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!

‛‛மாநில அரசு, எந்த மொழியில் விண்ணப்பம் செய்கிறதோ, அந்த மொழியிலேயே மத்திய அரசுபதிலளிக்க வேண்டும்,” என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.

மதுரை எம்.பி., வெங்கடேசன் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மத்திய ரிசர்வ் போலீஸ் படை(சி.ஆர்.பி.எப்.,) பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு டிச., 20 ல் நடத்த அறிவிப்பு வெளியானது. தேர்வு மையங்கள் வட மாநிலங்களில் 5, தென்மாநிலங்களில் 2, மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தலா 1 இடமும்அமைந்துள்ளன. தமிழகம், புதுச்சேரியில் மையம் இல்லை. தமிழகம், புதுச்சேரியின் நலன் கருதி ஒரு மையம் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம், சி.ஆர்.பி.எப்.,பொது இயக்குனருக்கு கடிதம் எழுதினேன். மத்திய உள்துறை இணையமைச்சரிடம் இருந்து வந்த பதில் கடிதம் ஹிந்தியில் இருந்ததால், அதன் உள்ளடக்கத்தை அறிய இயலவில்லை. இதன் மூலம் சட்டம் மற்றும் நடைமுறைகள் மீறப்பட்டுள்ளது.

இது பற்றி உள்துறை இணை அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்திற்கு பதில் இல்லை. ஹிந்தி கடிதத்தை திரும்பப் பெறவோ, அப்பதிலின் ஆங்கில வடிவத்தை அனுப்பவோ நடவடிக்கை இல்லை.

தமிழக எம்.பி.,க்களுக்கு ஹிந்தியில் மட்டுமே பதில் அளிக்கும் நடைமுறை தொடர்கிறது. இது, அரசியல் சாசன உரிமைகள், அலுவல் மொழிச் சட்டத்திற்கு முரணானது. தமிழக எம்.பி.,க்களுக்கு மத்திய அரசு அனுப்பும் கடிதங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும். நடைமுறைகளை மீறும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு வெங்கடேசன் குறிப்பிட்டார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: ஒரு மாநில அரசு எந்த மொழியில் மத்திய அரசுக்கு விண்ணப்பம் அனுப்புகிறதோ, அந்த மொழியிலேயே மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். இந்திய அலுவலக மொழி சட்டமும் இதனை உறுதி செய்கிறது. ஆனால், இந்த விவகாரத்தில் மனுதாரருக்கு ஹிந்தி மொழியில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. விதியை மீறும் எண்ணமில்லை என மத்திய அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் மத்திய அரசு மற்றும் அதன் அலுவலர்கள் இந்திய அலுவல் மொழிச் சட்டத்தை முறையாக பின்பற்ற உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

நன்றி: தினமலர்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: