மொழியுரிமை போராட்டம்! தமிழ்நாட்டு முயலும் பிறமாநில ஆமைகளும்!

மொழியுரிமை போராட்டம்? தமிழ்நாட்டு முயலும் பிறமாநில ஆமைகளும்!

மொழியுரிமை போராட்டம்? தமிழ்நாட்டு முயலும் பிறமாநில ஆமைகளும்!

தெலங்கானாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும், முதல் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்புவரை தெலுங்கு மொழியை ஒரு பாட மொழியாகக் கட்டாயம் படிக்க வேண்டும் என்று சில நாள்களுக்கு முன்பு முதல்வர் சந்திரசேகர் ராவ் அதிரடியாக அறிவித்தார். தங்களுடைய மாநிலத்தில் தங்கள் மொழியைக் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்று அறிவிக்கும் அரசுகளின் வரிசையில் கடைசியாக சேர்ந்திருக்கிறது தெலங்கானா. ‘தெலுங்கை ஒரு பாடமாக நடத்தாத பள்ளிகளின் அங்கீகாரத்தையே ரத்து செய்வோம்’ என்றும் அறிவித்திருக்கிறார் ராவ்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இந்தித் திணிப்புக்கு எதிரான ஒரு வியூகமாக, தங்கள் மொழிக்குச் சட்டபூர்வ பாதுகாப்பு அளிக்கும் நடவடிக்கைகளில், இந்தி பேசாத பல மாநிலங்களின் அரசுகள் இறங்கிவிட்டன.

இந்தியாவில் மொழிப் பிரச்னையில் இந்தி பேசாத பல மாநிலங்கள் தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டிருந்தாலும், ஆந்திரப்பிரதேசமும், தெலங்கானாவும் நீண்ட காலமாக மெளனம் சாதித்து வந்தன. இத்தனைக்கும் அதிகாரபூர்வ மக்கள் தொகைக் கணக்குப்படி, இந்தியாவில் இந்திக்கு அடுத்து இரண்டாவது பெரிய மொழி தெலுங்குதான். ஆனால், மொழியுரிமைக் களத்தில் தெலுங்கு மாநிலங்கள் பெரும்பாலும் தலைகாட்டியதில்லை.

தங்கள் மொழிகளைக் கட்டாயப் பாடங்களாக ஆக்கவேண்டும் என்று 2016 , 2017 -ம் ஆண்டுகளில் கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம், ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்ட்ரா, கோவா, டெல்லி ஆகிய மாநில அரசுகள் முயற்சி எடுத்துள்ளன. ஏற்கெனவே, இத்தகைய முன் முயற்சிகளை எடுத்த பஞ்சாப், கோவா போன்ற மாநிலங்களிலும் குரல்கள் ஓயாமலிருக்கின்றன. திடீரென்று ஏன் எல்லோரும் இப்படி? என்ன ஆயிற்று?

2016 மார்ச் மாதம் மகாராஷ்ட்ரத்தில், மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா உள்ளிட்ட பல அமைப்புகள் நடத்திய போராட்டத்தின் விளைவாக, மாநிலப் பள்ளிகளிலும், சி.பி.எஸ்.இ பள்ளிகளிலும், ஐ.சி.எஸ்.இ மற்றும் ஐ.பி போன்ற சர்வதேசப் பள்ளிகளிலும் குறைந்தபட்சம் ஏழாம் வகுப்புவரை மராத்திய மொழியைக் கட்டாயமாகக் கற்பிக்க வேண்டும் என்று பி.ஜே.பி அரசே சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது.

தற்போது மொழிப் போராட்டத்தில் மிகத் தீவிரமாக இருக்கும் கர்நாடகத்தில், இந்த ஆண்டு மே 29-ல் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஒரு சுற்றறிக்கையை அனைத்துப் பள்ளிகளுக்கும் (சி.பி.எஸ்.இ., தனியார், மொழிச் சிறுபான்மையினர் உள்பட) அனுப்பியது. அது, ‘கன்னட மொழியை முதல் வகுப்பிலிருந்து ஒரு பாடமாகக் கட்டாயமாகக் கற்பிக்க வேண்டும்’ என வலியுறுத்தியது. மீறும் பள்ளிகளுக்குத் தடையில்லா சான்று (என்.ஓ.சி) மறுக்கப்படும் என்றும் அரசு கடுமை காட்டியது. நாடகீதே (நாட்டுக் கீதம்) என்கிற கன்னட நாட்டு வாழ்த்துப் பாடலையும் பள்ளிகளில் கட்டாயம் பாடவேண்டும் என்று சித்தராமையா அரசு உத்தரவிட்டது.

அதே நேரத்தில், மேற்கு வங்க அரசும் அவர்களது மாநிலத்தில் வங்க மொழியை சி.பி.எஸ்.இ பள்ளிகள் உள்பட அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயப் பாடமாகச் சேர்க்க வேண்டும் என அறிவித்தது. மம்தா பானர்ஜி அரசின் இந்த முடிவுக்கு மேற்கு வங்கத்தில் பரவலான வரவேற்பு இருந்தது. ஆனால், கூர்க்காலாந்தில் நேபாளி மொழி பேசுபவர்கள் இதுவும் ஒரு மொழித் திணிப்புதான் என்று போராடினார்கள். அதைத் தொடர்ந்து ‘கூர்க்காலாந்தில் வங்க மொழி கட்டாயமில்லை’ என மம்தா அறிவித்தார். நேபாளி, உருது, சந்தாலி போன்ற மொழிகளையும் கற்பிக்கும் நடவடிக்கை எடுத்திருக்கிற மம்தா அரசின் நோக்கம், இந்தியைப் படித்துவிட்டு வங்க மொழியைப் படிக்கத் தவறும் ஒரு தலைமுறை உருவாகிவிடக் கூடாதே என்பதுதான்.

அடுத்து கேரளம். பத்தாம் வகுப்பு வரை கட்டாயம் மலையாள மொழியைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கூறி, கேரளத்தில் பினராயி விஜயன் அரசு ஓர் அவசரச் சட்டத்தையே கொண்டு வந்தது. சி.பி.எஸ்.இ மற்றும் ஐ.சி.எஸ்.இ ஆகிய பள்ளிகளுக்கும் இது பொருந்தும் என்றார் விஜயன். மலையாளத்தைக் கற்றுக் கொடுக்காவிட்டால் பள்ளிகளுக்குத் தடையில்லா சான்று (என்.ஓ.சி) இல்லை என்று கேரள அரசு அறிவித்தது.

இதற்கிடையில், டெல்லியில் அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி, உருது, சமஸ்கிருத மொழிகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டார் ஆம் ஆத்மி கட்சி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால். அவர் சமஸ்கிருதத்தைச் சேர்த்திருந்தது ஒரு சிலரைச் சமாதானப்படுத்தும் முயற்சியே என்றும், அடிப்படையில் இது பஞ்சாபிகளின் வாக்குகளைக் கவரும் முயற்சிதான் என்றும் பிற கட்சிகள் குற்றம்சாட்டின.

2016 ஜனவரியில், கோவாவில் உள்ள பள்ளிகளில், கொங்கணியையும் மராத்தியையும் கட்டாயப் பாடங்களாக ஆக்க அந்த மாநில அரசு முயன்றபோது, அதை பாரதிய பாஷா சுரக்ஷா மஞ்ச் (இந்திய மொழிகள் பாதுகாப்பு அமைப்பு என்று அர்த்தம்!) எதிர்த்தது. கோவாவில் எல்லாப் பள்ளிகளும் அடிப்படையில் ஆங்கில மொழிப் பள்ளிகள். அதில், இரண்டாவது கட்டாய மொழியாக இந்தி இருந்து வந்தது. ஆனால், கோவாவில் பெரும்பான்மையினராக உள்ள கொங்கணிகளும் அடுத்த நிலையில் உள்ள மராத்தியரும் தங்களுடைய மொழிக்கு இடம் வேண்டும் என்று போராடினார்கள். ஆனால், டெல்லி தனது உள்ளூர் ஏஜென்ட்களைத் தூண்டிவிட்டு கொங்கணிக்கு எதிராக கொடிப் பிடித்தது. ஏற்கெனவே எழுத்து வடிவ உரிமை உள்பட பல விஷயங்களில் இந்தித் திணிப்பாளர்கள் மீது கோபமாக இருந்த கொங்கணி மொழியினர், கடந்த மாதம் மங்களூரில் ஒரு இந்தித் திணிப்பு எதிர்ப்பு கருத்தரங்கையே நடத்தினார்கள்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் காஷ்மீரியும், ஜம்முவில் தோக்ரியும், லடாக்கில் போதியும் பேசப்படுகின்றன. ஆனால், மாநிலத்தில் ஆட்சிமொழியாக இந்தியின் இன்னொரு வடிவமான உருது இருக்கிறது. காஷ்மீரி உள்ளிட்ட மாநில மொழிகளையே மாநிலத்தின் கல்வி மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் இருக்கவேண்டும் என்று அங்கேயும் மொழியுரிமையாளர்கள் கோரிவந்தார்கள். கடந்த ஜூன் மாதம் சில கோரிக்கைகளை ஏற்று அதற்கான உத்தரவை மெஹ்பூபா அரசு பிறப்பித்தது.

இந்தப் பட்டியலில் கடைசியாக வரப்போகிறவர் அநேகமாக ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவாக இருக்கலாம். பிற மாநிலங்களில் நடந்துவரும் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனிப்பதாகவும், தெலுங்கை அனைத்துத் துறைகளிலும் நிலைநாட்ட தெலுங்கு மொழி மேம்பாட்டு அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான சட்ட முன்வரைவைத் தயாரித்துக் கொண்டிருக்கிறோம் என்றும் ஊடகங்களிடம் அவரது அரசு தெரிவித்தது. இந்த இரு தெலுங்கு முதல்வர்களுக்கும் சாவி கொடுத்தது யார் தெரியுமா? மற்ற இடங்களிலெல்லாம் இந்திக்காகக் குரல்கொடுத்துவந்த மோடி அரசின் பிரதான இந்தித் தூதுவராக இருந்துவந்த இன்றைய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடுதான். ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தில் இரு மாநில முதல்வர்களையும் சந்தித்த வெங்கய்ய நாயுடு, ‘எங்கும் தெலுங்கு எதிலும் தெலுங்கு என்று கொண்டுவருவதில் என்ன சுணக்கம்’ என்று கேட்டிருக்கிறார். தெலுங்கு அவருடைய தாய்மொழி அல்லவா!

இன்றைய பிரச்னை இரண்டு விதமானது. ஒன்று, சி.பி.எஸ்.இ பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்கப்பட்டு மாநில மொழிகள் புறக்கணிக்கப்படுகிறபோது, மாநில அரசுகள் இப்படிப்பட்ட கட்டாயச் சட்டங்களை இயற்றிதான் தங்கள் மொழிகளுக்குப் பாதுகாப்புத் தேடவேண்டியுள்ளது. இரண்டாவது, பல தென் மாநிலங்களிலும் மகாராஷ்ட்ரத்திலும் இந்தி பேசுவோர் பெரிய அளவுக்கு இடப்பெயர்ச்சி செய்வதால் எழுந்திருக்கிற அச்சமும் இதற்குப் பின்னால் இருக்கிறது. “இந்தி மட்டுமே” என்றால், அது “இந்திக்காரர்களுக்கு மட்டுமே” என்று மாறிவிடுவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

மொழியுரிமைப் போராட்டங்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்த தமிழ்நாட்டில் என்ன நிலை? பல ஆண்டுகாலம் போராடி, அதன் விளைவாக தி.மு.க அரசால் 2006-ல் கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு தமிழ் கற்பதற்கான சட்டம் 2006, இன்று என்ன நிலையில் இருக்கிறது? ஒப்பீட்டளவில் அது நிலைமையை மேம்படுத்தியிருக்கிறது என்றாலும்கூட, சாராம்சத்தில் தமிழகப் பள்ளிகளிலிருந்து தமிழ் வெளியேறிக்கொண்டிருக்கிறது.

இறுதியில், தமிழ்நாட்டின் மொழிக் கொள்கையை ஒரேயடியாகக் கொன்று புதைத்திட வருகின்றன நவோதயா பள்ளிகள். நவோதயா பள்ளிகளை ராஜீவ்காந்தி அறிமுகப்படுத்திய காலத்தில், அது இந்தியைத் திணிக்கும் பள்ளிகள் என்று கூறி தமிழகம் தவிர்த்துவந்தது. நவோதயா பள்ளிகளின் சிறப்பம்சங்கள் என்று கூறப்பட்டவை எல்லாம், ஒன்று தமிழகத்துக்குப் பொருந்தாதவை அல்லது இப்போதைக்கு அர்த்தமற்றவை. தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை ஒழித்துக்கட்டுவதற்கு மட்டுமே நவோதயா பயன்படப்போகிறது என்ற விமர்சனத்தைப் புறக்கணிக்க இயலாது.

இன்று எல்லா மாநிலங்களும் தங்கள் மாநிலத்தில் இந்தியின் ஆதிக்கத்தைக் குறைக்க அல்லது நீக்க முயற்சியெடுக்கும் ஒரு நேரத்தில், நாமோ போராடிப் பெற்ற உரிமையை ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருக்கிறோம். மொழி அதிகாரம் என்கிற ஓட்டப் பந்தயத்தில், தமிழக முயல் முதலில் பாய்ந்து முன்னேறியது. பின்பு படுத்துத் தூங்கிவிட்டது. இன்னமும் விழிப்படையவில்லை. ஆனால், முதலில் போட்டியிலேயே கலந்துகொள்ளாத சில ஆமைகள், காலதாமதமாகப் புரிந்து கொண்டு அதில் பங்குபெற்று மெல்ல இடைவிடாமல் நகர்ந்து நம்மைக் கடந்து செல்கின்றனவோ என்கிற உணர்வு நமக்கு ஏற்படுகிறது. இது நம்மைப் பீடிக்கும் ஒரு சுயமரியாதையற்ற உணர்வுதான் என்ற போதிலும் அதைத் தவிர்க்க இயலவில்லை.

  • ஆழி செந்தில்நாதன்
Tags: 
Subscribe to Comments RSS Feed in this post

1 Responses

  1. Pingback: Hari Prasad

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: