‘கீழடியில், மூன்றாம் கட்ட அகழாய்வு தொடர அனுமதிக்க வேண்டும்’ என, தி.மு.க., – எம்.பி., கனிமொழி மற்றும் மார்க்.கம்யூ., – எம்.பி., டி.கே.ரங்கராஜன் ஆகியோர், மத்திய கலாசார துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
மதுரையில் இருந்து, 12 கி.மீ., தொலைவில், வைகை நதியின் வலது கரையில் உள்ளது கீழடி. இங்கு, சங்க கால தொல்லியல் பொருட்கள், பல ஆண்டுகளாக கிடைத்து வந்தன. அதனால், 2014ல், இந்திய தொல்லியல் துறையின், பெங்களூரு கிளை, இப்பகுதியில் அகழாய்வு நடத்தியது.
அப்போது, உறை கிணறு உள்ளிட்ட, சங்க காலத்தைச் சேர்ந்த, பல தொல்லியல் சான்றுகள் கிடைத்தன. தொடர்ந்து, 2015 – 16லும், அகழாய்வு நடந்தது. அப்போது, காவிரி நதிநீர் பிரச்னையால், தொல்லியல் பொருட்களை, பெங்களூரு அகழாய்வு மையத்திற்கு எடுத்துச் செல்ல தடை கோரி, பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
‘வழக்கு விசாரணை நடந்த போதே, கீழடி தொல்லியல் பொருட்களை, அங்கேயே, கள அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க வேண்டும்’ என்ற கோரிக்கை எழுந்தது. இந்த சூழ்நிலையில், அடுத்தகட்ட அகழாய்வுக்கான அனுமதி மறுக்கப்பட்டது.
அதிர்ச்சி அடைந்த தொல்லியல் துறையினர், ‘கீழடி அகழாய்வு தொடர, பார்லிமென்டில், தமிழக, எம்.பி.,க்கள் குரல் கொடுக்க வேண்டும்’ என, வலியுறுத்தினர்.
இந்நிலையில், தி.மு.க., – எம்.பி., கனிமொழி மற்றும் மார்க்.கம்யூ., – எம்.பி., டி.கே.ரங்கராஜன் ஆகியோர், மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அவற்றில் கூறியிருப்பதாவது:
கீழடியில், மூன்றாம் கட்ட அகழாய்வுக்கான அனுமதியை, மத்திய தொல்லியல் துறை, காரணம் கூறாமல் நிறுத்தி வைத்துள்ளது. ஏற்கனவே, ஆந்திர மாநிலம், நாகார்ஜுன கொண்டா, ராஜஸ்தான் மாநிலம், காளிபங்கன் போன்ற இடங்களில், பலகட்ட ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது.
அதே போல, கீழடியிலும் அடுத்தடுத்த அகழாய்வுக்கு, அனுமதி அளிக்க வேண்டும். அதன் மூலம், பழமையான தமிழக வரலாற்றை, அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்ல முடியும் என்று கடிதத்தில் கூறியுள்ளனர்.