கீழடி 5-ம் கட்ட அகழாய்வு ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, விரைவில் அடுத்தக்கட்ட அகழாய்வு தொடங்கப்படும்: தொல்லியல் துறை ஆணையர்!

கீழடி 5-ம் கட்ட அகழாய்வு ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, விரைவில் அடுத்தக்கட்ட அகழாய்வு தொடங்கப்படும்: தொல்லியல் துறை ஆணையர்!

கீழடி 5-ம் கட்ட அகழாய்வுப் பணி ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும் என தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கீழடியில் நடைபெற்று வரும் 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகளை நேற்று உதயசந்திரன் ஆய்வு செய்தார். அவரிடம் இதுவரை கண்டறிந்த தொல்பொருட்களை அதிகாரிகள் காட்டி விளக்கமளித்தனர். மிக நுட்பமாக அரிய பொருட்களை கண்டறிந்த தொல்லியல் துறை அதிகாரிகளையும், ஆய்வாளர்களையும் உதயசந்திரன் பாராட்டினார்.

”கீழடி அகழாய்வில் ஏராளமான அரிய தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. அதேபோல் சுவர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அகழாய்வு மூலம் சங்க காலத் தொன்மையைப் பற்றி அரிய செய்திகள் கிடைத்துள்ளன. 5-ம் கட்ட அகழாய்வுப் பணி ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும்.

முன்பு நடந்த அகழாய்வில் கண்டறிந்த தொல்பொருட்கள் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டு முடிவுகள் பெறப்பட்டு வருகின்றன. முழு ஆய்வறிக்கை வந்ததும் முடிவுகள் வெளியிடப்படும். அனைத்துப் பொருட்களும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முறையில் ஆய்வுகள் செய்யப்பட்ட பின்பே முடிவுகள் வெளியிடப்படும். இதே பகுதியில் கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் அடுத்தகட்ட அகழாய்வு நடத்த மத்திய தொல்லியல் துறைக்கு முன்மொழிவு அனுப்பியுள்ளோம். விரைவில் அடுத்தக்கட்ட அகழாய்வு தொடங்கப்படும்”. இவ்வாறு தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன் தெரிவித்தார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: