வேலைக்காக காத்திருப்போர் 70.30 லட்சமாக உயர்வு!

தமிழகத்தில், அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்களில், வேலைக்காக பதிவு செய்திருப்போர் எண்ணிக்கை, 70 லட்சத்தை தாண்டியது. ஆண்களை விட, பெண்களே அதிகம் பேர் பதிவு செய்துள்ளனர்.தமிழகம் முழுதும், பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் முதல், முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை, வேலைக்காக, வேலைவாய்ப்பு அலுவலகங்களில், தங்கள் பெயர்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஜூலை 31ம் தேதி நிலவரப்படி 32.93 லட்சம்ஆண்கள்; 37.36 லட்சம்பெண்கள்; 257 திருநங்கையர் என, மொத்தம் 70.30 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில், தங்கள் பெயர்களை பதிவு செய்து உள்ளனர்.கடந்த பிப்., 28 வரை, 63.63 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். கடந்த கல்வியாண்டில், கொரோனா காரணமாக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில், அனைத்து மாணவ – மாணவியரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.அந்த மாணவர்கள், தங்கள் பெயர்களை வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இரண்டு மாதங்களில் பதிவு செய்ததால், வேலைக்காக பதிவு செய்தோர் எண்ணிக்கை 70.30 லட்சமாகி உள்ளது. ஐந்து மாதங்களில் 6.67 லட்சம் பேர் கூடுதலாக தங்கள் பெயர்களை,வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர்.

ஜூலை 31 நிலவரப்படி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைக்காக பதிவு செய்தோரில், 13.25 லட்சம் பேர் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள்; 17.88 லட்சம் பேர் 19 முதல் 23 வயது வரை உள்ள, பல தரப்பட்ட கல்லுாரி மாணவர்கள்; 26.27 லட்சம் பேர் 24 முதல் 35 வயது வரையுள்ள அரசுப் பணி வேண்டி காத்திருக்கும் வேலை நாடுனர்கள்.இதுதவிர 12.77 லட்சம் பேர் 36 வயது முதல் 57 வயது வரை உள்ள, முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள்; 11 ஆயிரத்து 213 பேர் 58 வயதிற்கும் மேற்பட்டவர்கள்.இவர்களில், முதுகலைசட்டம் படித்தவர்கள் 171; முதுகலை கால்நடை மருத்துவம் படித்தவர்கள் 160; முதுகலை வேளாண் பொறியியல் படித்தவர்கள் 16; முதுகலை வேளாண்மை படித்தவர்கள் 513.

முதுகலை மருத்துவம் படித்தவர்கள் 997 பேர்; முதுகலை ஆசிரியர் பட்டம் பெற்றவர்கள், 2.53 லட்சம்; முதுகலை பொறியியல் படித்தவர்கள் 2.39 லட்சம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது.அதேபோல், மாற்றுத் திறனாளிகள் 90 ஆயிரத்து, 907 ஆண்கள்; 46 ஆயிரத்து 170 பெண்கள் என, மொத்தம் 1.37 லட்சம் பேர் வேலைக்கு பதிவு செய்துள்ளனர். இவ்விபரங்களை, வேலைவாய்ப்புத் துறை வெளியிட்டுள்ளது.

நன்றி: தினமலர்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: