முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் ரவிச்சந்திரன் பிரதமர் மோடிக்குக் கடிதம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் ரவிச்சந்திரன் பிரதமர் மோடிக்குக் கடிதம்!

7 தமிழர்கள் விடுதலை குறித்த மாநில அரசின் முடிவை உடனடியாக கவனித்து விரைவில் தமிழக ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்க ஆவன செய்ய வேண்டும் என்று ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் ரவிச்சந்திரன் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 தமிழர்கள் 28 ஆண்டுகளாக சிறையில் ஆயுள் தண்டனை பெற்று வருகின்றனர். 7 தமிழர்களையும் விடுதலை செய்யப் பரிந்துரைக்கும் தீர்மானத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி தமிழக அமைச்சரவை நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், ஆளுநர் இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.

இந்நிலையில் சீக்கியப் போராளிகள் விடுதலை குறித்த மத்திய அரசின் அறிவிப்பை முன்வைத்து, ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவிச்சந்திரன் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், அண்மையில் விடுவிக்கப்பட்ட பல்வந்த் சிங் வழக்கை சுட்டிக்காட்டி அதே அளவுகோலின் அடிப்படையில் தங்கள் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ரவிச்சந்திரன் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தின் விவரம்:

”நான், ஆர்.பி.ரவிச்சந்திரன், தமிழகத்தில், மதுரை மத்திய சிறையில் இப்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவன். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 தமிழர்களில் நானும் ஒருவன். கடந்த 28 வருடங்களாக தண்டனை அனுபவித்து வரும் நாங்கள் என்றோ ஒருநாள் விடுதலை பெறுவோம் என்று காத்திருக்கிறோம்.

8 சீக்கியப் போராளிகளை மத்திய அரசு விடுதலை செய்ய முடிவெடுத்திருப்பது குறித்தும், பல்வந்த் சிங் ரஜோனாவின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது குறித்தும் கடந்த வாரம் எனக்குத் தெரியவந்தது. இது வரவேற்க வேண்டிய முடிவு. அதே நேரத்தில் இந்த அறிவிப்பு, மத்தியில் உங்கள் தலைமையிலான ஆட்சி சாதிக்கப் பாடுபடும் ஒரே தேசம் ஒரே சட்டம் என்ற தேசத்தின் தர்க்கத்துக்கு முரணாக உள்ளது.

கடந்த வருடம் குடியரசுத் தலைவரின் பெயரில் மத்திய அரசு எடுத்த முடிவை நினைவுகூர விரும்புகிறேன். 7 தமிழர்கள் விடுதலை குறித்த தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து, 18.04.2018 அன்று தமிழகத்துக்கு கடிதம் எழுதப்பட்டது. இதற்கு முரணாக, பல்வேறு தீவிரவாத, தேசத்துரோக குற்றச்சாட்டில், பல்வேறு மாநிலங்களில் ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் 8 காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் விடுதலையைப் பற்றிய பஞ்சாப் அரசின் கோரிக்கையை மத்திய அரசு உடனடியாக ஏற்றது.

மேலும், பஞ்சாப் முதல்வரைக் கொன்ற பல்வந்த் சிங் ரஜோனாவின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படவுள்ளது. பஞ்சாபின் அரசியல் சூழலுக்கு ஏற்ப விரைவில், அடுத்த கட்டமாக மேலும் 8 சீக்கியப் போராளிகள் விடுதலையின் போது ரஜோனாவும் விடுவிக்கப்படுவார் என்று கேள்விப்படுகிறோம்.

ஏற்கெனவே உங்கள் ஆட்சியில், 2016 மற்றும் 2017-ம் ஆண்டு, இந்தியாவின் வடக்கு, வடகிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிரிவினைவாதப் போராளிகளை விடுதலை செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது. ஆனால், தமிழ்நாடு போன்ற அமைதியான தென்னக மாநிலங்கள் அதேபோன்ற கோரிக்கையை மத்தியில் வைக்கும்போது அது ஒழுங்காகப் பரிசீலிக்கப்படாமலேயே உடனடியாக நிராகரிக்கப்படுகிறது.

தமிழகத்தில் மட்டும் 400க்கும் அதிகமான, தீவிரவாதிகள் அல்லது பிரிவினைவாதிகள் அல்லாத ஆயுள் தண்டனைக் கைதிகள் இன்னும் சிறையில் உள்ளனர். இவர்களின் தண்டனைக் காலம் 3 மாதங்களிலிருந்து 2 வருடங்கள் வரைதான். ஆனால் 20 வருடங்கள், சிலர் 25 வருடங்கள் கூட வழக்கு விசாரணை காலத்தில் சிறையில் இருந்து வருகிறார்கள்.

உதாரணத்துக்கு எங்கள் 7 பேரின் சட்டத்துக்கு உட்பட்ட, ஜனநாயக ரீதியிலான விடுதலை குறித்து தமிழக அரசின் முடிவு நியாயமற்ற முறையில் ஏதோ ஒரு வகையில் மத்திய அரசால் முடக்கப்படுகிறது. இத்தனைக்கும், மதிப்புக்குரிய உச்ச நீதிமன்றம், எங்கள் மீது இருக்கும் தடா குற்றச்சாட்டை நீக்கி, ஐபிசி பிரிவு 120 பி-ன் கீழ்தான் எங்களுக்கு தண்டனை வழங்கியுள்ளது.

For example, we the 7 Tamils whose lawful and democratic release decision of the state of Tamilnadu is unfairly being blocked by the centre one manner or other are not serving any central laws, let alone any terrorist or sedition acts. In fact the Hontle Supreme Court, absolved us of all TADA charges and convicted only under the section 120B of IPC r/w 302.

சமீபத்தில், தமிழகத்திலிருந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் 7 தமிழர்கள் விடுதலை குறித்த விவாதத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பினார்கள். தமிழகத்தின் ஆளுநர், மாநிலத்தின் முடிவை ஏற்க பரிந்துரைக்கும்படி உங்களையும், உள்துறை அமைச்சரையும் தனிப்பட்ட முறையில் சந்தித்தும் முறையிட்டுள்ளார்கள்.

அரசியலமைப்பின் 161-வது பிரிவின் கீழ் இந்தப் பிரச்சினையில் இப்போதைக்கு மத்திய அரசுக்கு பங்கில்லை என்றாலும், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படாத, மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர், மாநில அரசின் பரிந்துரையை ஏற்க உங்கள் உத்தரவுக்காக காத்திருக்கிறார் என்பதே தமிழகத்தில் இருக்கும் பொதுவான அபிப்ராயம்.

தமிழ் – தென்னிந்தியா திராவிட இன மக்களுக்கும், கங்கைக் கரையோர – வட இந்தியாவின் ஆர்யவர்த்த மக்களுக்கும் இடையே ஏற்கெனவே வரலாறு, கலாச்சாரம் மற்றும் இன ரீதியான பிரிவினையும், வேற்றுமைகளும் உள்ளன. இந்தக் காயத்தை ஆற்றி, பிளவுக்குப் பாலம் அமைக்க இதுவே சரியான நேரம்.

ஆனால் பஞ்சாப் – தமிழக அரசியல் கைதிகள் விடுதலை குறித்த மத்திய அரசின் இரட்டை தர நிலை சரிசெய்யப்படவில்லை என்றால், அது, இந்த வடக்கு – தெற்குப் பிரிவினையை இன்னும் பெரிதாக்கவே உதவும்.

இதையும் தாண்டி, நாங்கள் 7 தமிழர்களும் ஏற்கெனவே 28 வருடங்கள் சிறையில் கழித்துவிட்டோம், இன்னும் கழித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே இந்த விஷயத்தில் நீங்கள் தலையிட்டு 7 தமிழர்கள் விடுதலை குறித்த மாநில அரசின் முடிவை உடனடியாக கவனித்து விரைவில் தமிழக ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்க ஆவன செய்து, இந்தியா முழுவதும் இருக்கும் கைதிகளுக்கு சமமான நீதி வழங்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்”. இவ்வாறு ரவிச்சந்திரன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: