கழுமர வழிபாடு: ஆய்வில் அசத்திய ஒன்பதாம் வகுப்பு மாணவி!

கழுமர வழிபாடு: ஆய்வில் அசத்திய ஒன்பதாம் வகுப்பு மாணவி!

கழுமர வழிபாடு: ஆய்வில் அசத்திய ஒன்பதாம் வகுப்பு மாணவி!

மதுரை மாவட்டத்தில் உள்ள கழுமர வழிபாடு பற்றியும், ராமநாதபுரம் மாவட்டம், பள்ளபச்சேரி, கோவிந்தன் கோவிலில் உள்ள ஐந்து கழுமரங்கள் பற்றியும், ஒன்பதாம் வகுப்பு மாணவி ஆய்வு செய்து, ஆவணப்படுத்தி உள்ளார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற உறுப்பினரும், அப்பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவியுமான மு.அபிநயா, தொடர்ந்து வரலாற்று தேடலில் ஈடுபட்டு வருகிறார். அவர், திருப்புல்லாணியில் இருந்து கமுதி வழியாக, மதுரை செல்லும் வழியில், அதிக கழுமரங்கள் உள்ளதை கண்டுபிடித்துள்ளார்.

குறிப்பாக, மண்டல மாணிக்கம் அருகே கழுவன் பொட்டலில், அதிகமாக கழுவேற்றம் நடந்ததற்கான தடயங்களை கண்டறிந்துள்ளார். மேலும், திருப்புவனம், உத்தரகோசமங்கை அருகில் உள்ள கண்ணன்குடி, கோவிந்தனேந்தல்; கமுதி அருகில் உள்ள மண்டலமாணிக்கம் ஆகிய ஊர் கோவில்களில், தலா, மூன்று கழுமரங்கள் உள்ளதையும், களரியில், கழுமரம் கருவறை தெய்வமாக வணங்கப்படுவதையும் கண்டறிந்துள்ளார்.

கழுமரங்கள் பற்றி யும், அதன் வழிபாடு பற்றியும், திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற பொறுப்பாளர், வே.ராஜகுரு கூறியதாவது:

பழங்காலத்தில், ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் கழுமரங்கள் அமைக்கப்பட்டன. அரசை எதிர்ப்போர் மற்றும் திருடர்களுக்கு கழுவேற்றி, தண்டனை வழங்கப்பட்டது. பொதுவாக, கழுவேற்ற வேண்டியவரை நிர்வாணமாக்கி, மரம் அல்லது இரும்பால் செய்யப்பட்ட கூர்முனையில், அவரின் ஆசனவாயை சொருகி விடுவர். இவ்வாறு கழுவேற்றப்பட்டவர், பல நாட்கள் கதறி துடிதுடித்து, உயிர் விடுவார். இறந்த உடலை, நாய், நரி, கழுகு, பருந்து போன்றவை உண்ணும்.

மக்களுக்காக போராடிய வீரர்கள் கழுவேற்றப்பட்டால், அவர்களின் உயிர், அந்த கழுமரங்களில் உறைந்து, தெய்வத் தன்மை அடைந்து விடும் என, மக்கள் நம்பினர். அதனால், வீரர்களின் கழுமரங்களை, காலங்காலமாக வழிபட்டு வருகின்றனர்.

பொங்கலுடன் ஆட்டு ரத்தத்தை கலந்து, உருண்டையாக உருட்டி, புது மண்சட்டியில் இட்டு, அதிகாலையில் கருடனுக்குப் படைக்கின்றனர். இது கழுவேற்றப்பட்டோர், கழுகுக்கு இரையாக்கப்பட்டதன் நினைவேந்தலாக உள்ளது.

கழுமரங்கள், மரம் மற்றும் இரும்பால் செய்யப்பட்டிருக்கலாம். அவை காலத்தால் அழிந்த பின், கல்லால் ஆன கழுமரங்கள் செய்யப்பட்டிருக்கலாம். அவ்வாறு செய்த கழுமரங்களில், உயிர்விட்டவரின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. அதிக கழுமரங்கள் ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகில் உள்ள பள்ளபச்சேரி, கோவிந்தன் கோவிலில் தான், ஐந்து கழுமரங்கள் காணப்படுகின்றன. அக்கழுமரங்களில் தெற்கத்தி முனியசாமி, கோவிந்தன், ஊர்வலசாமி, கருப்பணன், நொண்டி கருப்பணன் ஆகியோரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

கழுமரம்

கழுமரம் என்பது ஒரு கொலைக்கருவி. கூர்மையாகச் சீவப்பட்ட கழுமுனையில் நிறைய எண்ணெய் தடவி குற்றாவளியை பிடித்து நிர்வாணமாக்கி, அவன் கால்களை நெஞ்சோடு சேர்த்து மடக்கி குண்டுகட்டாகத் தூக்கி ஆசனவாயை கழு முனையில் வைத்து அப்படியே செருகி விடுவார்கள். உடலின் எடையாலும், கழுவின் கூர்மையாலும், எண்ணெயின் வழுக்கலாலும் உடல் மெதுவாகக் கீழே இறங்கும். கழு மெதுவாக மேலே துளைத்துக் கொண்டு ஏறும்.

அவன் கொஞ்சம் கொஞ்சமாக மரம் உடலினுள்ளேறி வலி தாங்காமல் அவன் இரவெல்லாம் கூப்பாடு போடுட்டு செத்து போவான். இறந்த உடலை பறவைகள் கொத்தி உண்ணும். இது போன்ற தண்டனை முறை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்திருக்கிறது.

இந்த கொலைக்கருவியால் தமிழ்நாட்டில் எட்டாயிரம் சமணர்கள் கழுவில் ஏற்றி கொல்லப்பட்டார்கள் என்கிறது சரித்திர குறிப்புகள். கி.ராஜநாராயணன் தனது கதையில் கழுமரத்தை பற்றி மிக விரிவாக எழுதியிருக்கிறார். தமிழகத்தில் 800 வருடங்கள் பழமை வாய்ந்த கழுமரம் ஈரோட்டில் காளியங்கராயன் கால்வாயின் அருகில் வளையல்கார தெருவில் உள்ள அய்யனாராப்பன் கோவிலில் உள்ளது, இது பனைமரத்தால் ஆனது.

இச்சிற்பங்களின் இரு கைகளிலும், ஆயுதங்கள் ஏந்தி காட்சியளிப்பதால், இவர்கள் போர் வீரர்களாக இருந்திருக்கலாம் என, யூகிக்க முடிகிறது. மதுரையில், சமணர்களை கழுவேற்றியதாக, பெரிய புராணம் கூறுகிறது. இந்நிலையில், இப்பகுதிகளில் கழுமர வழிபாடு, பல நுாற்றாண்டுகளாக தொடர்வது வியப்பாக உள்ளது. கழுமர வழிபாட்டிற்கு, ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு காரணம் கூறப்படுவது, ஆய்வுக்கு உரியதாகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: