சென்னை-விமானங்களில் அவசர கால முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை, பிராந்திய மொழிகளில் அறிவிக்கக் கோரும் மனுவை, எட்டு வாரங்களில் பரிசீலித்து பதில் அளிக்கும்படி, மத்திய விமான போக்குவரத்துத் துறை செயலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனு:விமானம் புறப்படும் போது, அவசர காலத்தில் பயணியர் எப்படி செயல்பட வேண்டும் என பணிப்பெண் அறிவுறுத்துவார். மூச்சுத் திணறல் ஏற்பட்டால், ஆக்சிஜன் பயன்படுத்தும் முறை; சீட் பெல்ட் அணியும் முறை என செய்முறை விளக்கங்களை அளிப்பார். இவை எல்லாம் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே வழங்கப்படுகின்றன.
பயணியர் அனைவருக்கும் ஆங்கிலம், ஹிந்தி தெரியும் எனக்கூற முடியாது. அவசர காலத்துக்கான விளக்கங்கள், மக்களுக்கு புரிகிற மொழியில் இருக்க வேண்டும். அதனால், அரசியலமைப்பு சட்டம் அட்டவணை, 8ல் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 23 மொழிகளிலும் இருக்க வேண்டும்.இந்திய நிறுவனங்களால் நடத்தப்படும் விமானங்களில், இதை அமல்படுத்த வேண்டும். விமானம் புறப்படும் மாநிலம், சேரும் மாநிலத்தின் ஆட்சி மொழியில் அறிவிப்புகள் வெளியிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.சங்கர் ஆஜரானார். மனுவை விசாரித்த முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:மத்திய அரசுக்கு மனுதாரர் தரப்பில் கடிதம் அனுப்பலாம். அதுகுறித்து, தேவையான உத்தரவுகளை பிறப்பிப்பது உகந்தது தானா என்பதை, சம்பந்தப்பட்ட துறை தான் பரிசீலிக்க வேண்டும். எனவே, நான்கு வாரங்களில் புதிதாக சம்பந்தப்பட்ட துறை செயலருக்கு மனு அனுப்பலாம். அதற்கு எட்டு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும்.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.
நன்றி : தினமலர்