தமிழகப் பள்ளிகளில் இப்படியொரு அசத்தல்; மகிழ்ச்சியில் மாணவர்கள்!

நாடு முழுவதும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் முறை அமலில் இருக்கிறது. தமிழகத்திலும் கடந்த 10 ஆண்டுகளாக இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு கல்வியாண்டிற்கான (2021-22) RTE மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை 5ஆம் தேதி தொடங்கியது.

இதையடுத்து ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 984 இடங்கள் இருக்கின்றன. அதில் சேர்வதற்கு 82 ஆயிரத்து 766 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். ஒரே பள்ளியில் விண்ணப்பங்கள் அதிக அளவில் பெறப்பட்டால் அங்கு குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று குலுக்கல் முறை நடைபெற்றது. பெற்றோர்கள் முன்னிலை இந்த இடங்களுக்கு குலுக்கல் நடந்தது. அதில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளில் சேர்ந்து கொள்ளலாம். சென்னை மாவட்டத்தில் மொத்தம் 438 பள்ளிகளில் இருக்கும் 25 சதவீத இடஒதுக்கீட்டு இடங்கள் 4,891 ஆகும். இந்த இடங்களில் சேர்வதற்கு 6,925 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.

குறிப்பாக 42 பள்ளிகளில் உள்ள 394 இடங்களுக்கு 241 விண்ணப்பங்கள் மட்டுமே வந்திருந்தன. இதனால் அவர்கள் குலுக்கல் இன்றி தேர்வு செய்யப்பட்டனர். எஞ்சியுள்ள 396 பள்ளிகளில் இருக்கும் 4,497 இடங்களுக்கு குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த மாணவர்கள் விரைவாக பள்ளியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி:சமயம்

 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: