ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி! – தமிழக அரசு அறிவிப்பு!

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி! - தமிழக அரசு அறிவிப்பு!

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி! – தமிழக அரசு அறிவிப்பு!

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி நிறுவப்படும் என்று துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

நாட்டின் தென்கோடி தீவுப்பகுதியாக உள்ள ராமேஸ்வரம் இந்துக்களின் புனித தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் நிரந்தரமாக வசித்து வருகின்றனர். மீன்பிடித்தலையும், சுற்றுலாவையும் மட்டுமே வருமானத்திற்காக நம்பி வாழ்ந்து வரும் இப்பகுதி மக்கள் தங்கள் பிள்ளைகளை உயர் கல்வி படிக்க வைக்கப் பல மைல் தொலைவில் உள்ள கல்லூரிகளையே நம்பியுள்ளனர். இதனால் தீவுப் பகுதியில் அரசு கல்லூரி அமைக்க வேண்டும் எனப் பல தரப்பிலும் கோரிக்கை விடப்பட்டு வந்தன.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் தேவஸ்தான நிர்வாகத்தினால் ராமேஸ்வரத்தில் சமஸ்கிருத கல்லூரி இயங்கி வந்தது. அதில் இளங்கலை பட்டப்படிப்புகளும் நடத்தப்பட்டன. என்ன காரணத்தினாலோ அந்த கல்லூரி மூடப்பட்டது. இந்நிலையில் ராமேஸ்வரம் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம், ராமேஸ்வரம் தீவு செய்தியாளர் மன்றத்தின் சார்பில் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியரிடம் கல்லூரி துவக்க கோரிக்கை விடப்பட்டது. இதனை ஏற்ற அவர் ராமேஸ்வரத்தில் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி கல்வி மையத்தைத் துவக்கினார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அந்த கல்லூரியும் மூடப்பட்டது. இதனால் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த ஏழை எளிய மாணவர்கள் கல்லூரி படிப்பை எட்ட முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து ராமேஸ்வரம் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம், தீவு செய்தியாளர் மன்றம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ராமேஸ்வரத்தில் கல்லூரி துவங்கத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. அப்துல் கலாமின் பெயர் நாடு முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்குச் சூட்டப்பட்ட நிலையில் அவர் பிறந்த ஊரும், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட நினைவிடம் அமைந்துள்ள இடமுமான ராமேஸ்வரத்தில் கலாமின் பெயரில் எந்த நிறுவனமும் அமைக்கப்படவில்லை. எனவே மறைந்த அப்துல்கலாம் பெயரில் இங்குக் கல்லூரி தொடங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக அமைச்சர் மணிகண்டனும் ராமேஸ்வரத்தில் கல்லூரி துவங்கப்படும் எனக் கூறி வந்தார்.

இந்நிலையில் இன்று வெளியான நிதி நிலை அறிக்கையில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் பெயரில் அரசு கலை அறிவியல் கல்லூரி ராமேஸ்வரத்தில் திறக்கப்படும் எனத் துணை முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தீவு மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறியுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு ராமேஸ்வரம் தீவு பகுதியைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன. மேலும் அப்துல்கலாம் பெயரில் கல்லூரி அமைக்க அறிவிப்பு செய்துள்ளதற்கு கலாம் குடும்பத்தினர் மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்துள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: