தமிழக கண் மருத்துவர் கோவிந்தப்பா வெங்கடசாமியை கெளரவப்படுத்திய கூகுள்!

தமிழக கண் மருத்துவர் கோவிந்தப்பா வெங்கடசாமியை கெளரவப்படுத்திய கூகுள்!

தமிழக கண் மருத்துவர் கோவிந்தப்பா வெங்கடசாமியை கெளரவப்படுத்திய கூகுள்!

இன்று மூத்த கண் மருத்துவரும், அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனருமான கோவிந்தப்பா வெங்கடசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு, கூகுள் நிறுவனம் ‘டூடுல்’ வெளியிட்டு பெருமைப்படுத்தியிருக்கிறது.

கூகுள் நிறுவனம், ‘கூகுள் டூடுல்’ என்ற பெயரில் உலகின் பிரபலமான நபர்களின் பிறந்த நாள், இறந்த நாளின்போது கெளரவம் அளிப்பது வழக்கம். அதன்படி, கோவிந்தப்பா வெங்கடசாமியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு டூடுல் உருவாக்கி கௌரவப்படுத்தியுள்ளது.

கோவிந்தப்பா வெங்கடசாமி (அக்டோபர் 1, 1918 – ஜூலை 7, 2006) என்பவர் அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனரும், பிரபல கண் மருத்துவரும் ஆவார். 1918-ம் ஆண்டு எட்டயபுரம் அருகில் உள்ள அயன்வடமலாபுரம் ஊரில் பிறந்தவர்.

எட்டையபுரத்தில் ஆறாம் வகுப்பில் தேர்ச்சியடைந்த பின் கோவில்பட்டியில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை வேதியியல் பட்டம் பெற்றார். பின் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். மருத்துவப் படிப்பு முடித்தவுடன் பிரித்தானியா இந்திய ராணுவத்தில் ராணுவ மருத்துவராக சேர்ந்து போரில் காயம்பட்ட வீரர்களுக்கு சிகிச்சை அளித்தார்.

கண் மருத்துவத்தில் முதுகலை பட்டயப் பட்டமும், கண் அறுவை சிகிச்சை மருத்துவத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். அதைத் தொடர்ந்து 1956-ம் ஆண்டு மதுரை அரசு மருத்துவமனையில், புதிதாகத் தொடங்கப்பட்ட கண் மருத்துவத்துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் மருத்துவராகப் பணியாற்றியவர்.

இவர், முதன்முதலில் மதுரையில் அரவிந்த் கண் மருத்துவமனை என்ற பெயரில் 11 படுக்கைகளுடன் ஒரு மருத்துவமனை தொடங்கினார். இன்றைக்குத் திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் மருத்துவமனைகள் செயல்படுகின்றன. பல மருத்துவ முகாம்களை நடத்தி பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார். மருத்துவப் பிரிவில் பல விருதுகளைப் பெற்றுள்ள வெங்கடசாமி, கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி காலமானார்.

தனது லோகோவை முக்கியமான நபர்களின் நினைவாக, தினமும் மாற்றும் கூகுள் நிறுவனம், இன்றைக்கு கோவிந்தப்பா வெங்கடசாமி பிறந்தநாளுக்காக, டூடுல் உருவாக்கி அவரைக் கௌரவப்படுத்தியுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: