தமிழகத்தில் முதன்முறையாக மதுரை உலகனேரி அரசுப் பள்ளியில் அசத்தல் மாணவியருக்கு ‘பாரம்பரிய விளையாட்டு திடல்’

மதுரை உலகனேரியில் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை தமிழ், ஆங்கில வழியில் பாடம் கற்பிக்கப்படுகிறது. 2,364 மாணவியர் படித்து வருகின்றனர். மூன்றே முக்கால் ஏக்கர் பரப்பளவில் மரங்கள் சூழ்ந்த இயற்கை எழிலுடன் தனியார் பள்ளிக்கு ஈடாக வசதிகள் உள்ளன. இந்நிலையில், தமிழகத்திலேயே முதன்முறையாக இப்பள்ளியில் மாணவிகளுக்கு ‘பாரம்பரிய விளையாட்டுத் திடல்’ அமைக்கப்பட்டுள்ளது.

வட்ட வடிவிலான இத்திடலில், மரநிழலின் கீழே மாணவிகள் அமர்ந்து பல்லாங்குழி, பரமபதம், சொட்டாங்கல், தாயம், நேர்கோடு ஆகிய பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடுகின்றனர். இதில், சதுரங்கமும்  இடம்பெற்றுள்ளது. இது குறித்து பள்ளி தலைமையாசிரியை சசித்ரா கூறும்போது,  ‘‘1980ம் ஆண்டுகளில் அதிகமாக விளையாடப்பட்ட இப்பாரம்பரிய விளையாட்டுகளை இன்றைய தலைமுறையும் அறியும் வகையில் இந்த விளையாட்டுத் திடல் அமைக்கப்பட்டுள்ளது.

சிமெண்ட் தளத்தில் பல்லாங்குழிக்கான குழிகளுடனும், ஒவ்வொரு விளையாட்டுக்கான களமும் பெயிண்ட்டால் வரையப்பட்டுள்ளது. கொரோனாவால் ஒன்றரை ஆண்டுகளாக வீடுகளுக்குள் மாணவிகள் முடங்கினர். ஆன்லைன் வகுப்புகளால் செல்போன்களில் சிக்கியவர்களின் அயர்ச்சியைப் போக்க, மரத்தடி நிழலில் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடுவதற்கு திடல் அமைக்கப்பட்டுள்ளது.

பழைய விளையாட்டுக்கள் மூளைக்கு வேலை தருபவை. பொறுமையை போதித்து, மனதிற்கு உற்சாகம் தரும், அச்சம் போக்கி தைரியம் தரும். எடுத்துக்காட்டாக பாம்பும், ஏணியும் கொண்டு விளையாடும் ‘பரமபதம்’ விளையாட்டு, சரிவுகளைக் கண்டு கலங்காமல் தொடர்ந்து முயன்றால் உயரம் தொடலாம் என்பதை உணர்த்தி, தன்னம்பிக்கையை வளர்க்கும். இதேபோல சொட்டாங்கல், தாயம், நேர்கோடு ஆகியவை வாழ்வில் வென்றெடுப்பதற்கான வழிமுறைகளைச் சொல்லித் தரும். ஓய்வு நேரங்களில் இந்த திடலில் மாணவிகள் வெகு ஆர்வத்துடன் விளையாடுவது மகிழ்வளிக்கிறது. இந்த பாரம்பரிய விளையாட்டினை தமிழகத்தின் பள்ளிகளில் அறிமுகப்படுத்தி, திடல் ஏற்படுத்திட வேண்டும்’’ என்றார்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>