ஈழத்து அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள்; குடியுரிமை விவகாரத்தில் உணர்ச்சிப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது: ஐகோர்ட் கிளையில் ஒன்றிய அரசு பதில்..!

 

 

இலங்கை அகதிகள் விவகாரத்தில் சட்டத்திற்குட்பட்டே முடிவெடுக்க முடியும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் தனி முகாமில் உள்ள பலர், தங்களுக்கு இந்திய குடியுரிமை கேட்டு ஐகோர்ட் மதுரை கிளையில் ஏற்கனவே மனு செய்திருந்தனர். மனுவில், ‘‘நாங்கள் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் எங்களின் மூதாதையர்கள் பிழைப்புக்காக இலங்கையிலுள்ள தேயிலை தோட்டங்களுக்கு கூலி தொழிலாளர்களாக சென்றனர். கடந்த 1983ல் இலங்கையில் இனக்கலவரம் ஏற்பட்டது. உயிருக்கு பயந்து தமிழகம் வந்தோம்.


உரிய பயண ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக படகுகளில் வந்ததால் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டோம். இந்திய குடியுரிமை கேட்டு ஒன்றிய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து மனு அளித்து வருகிறோம். இருப்பினும் எங்களுக்கு இந்திய குடியுரிமை சான்று வழங்கவில்லை. எங்களை அகதிகளாக கருதாமல், தாயகம் திரும்பியவர்களாக கருதி இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும்’’ என கூறியிருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, ‘‘மனுதாரர்கள் தங்களுக்கு இந்திய குடியுரிமை கேட்டு புதிதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

கலெக்டர்கள் இந்த விண்ணப்பங்களை தாமதமின்றி மத்திய அரசுக்கு பரிந்துரைத்து அனுப்பி வைக்க வேண்டும். மத்திய அரசு அந்த விண்ணப்பங்கள் மீது 16 வாரத்தில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தொழில்நுட்ப காரணங்களைக் கூறி நிராகரிக்க நினைக்க கூடாது’’ என உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை செயலர், உள்துறை செயலர் மற்றும் இலங்கைக்கான இந்திய துணை கமிஷனர் ஆகியோர் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது.

அதில், ‘‘சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் வந்தவர்கள் குடியுரிமை கோருவது சட்டவிரோத குடியுரிமை விதிகளின்படி தடை செய்யப்பட்டுள்ளது. சிறிமாவோ – சாஸ்திரி ஒப்பந்தத்தின் அடிப்படையிலான பலனை பெற விரும்பவில்லை. தமிழகத்தில் உள்ள 107 அகதிகள் முகாமில் சுமார் 60 ஆயிரம் இலங்கை அகதிகள் உள்ளனர். முகாம் அல்லாத வெளிப்பகுதியில் சுமார் 35 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்பதை தனி நீதிபதி கவனிக்கவில்லை. குடியுரிமை சட்டம் 1955ன்படி சட்டரீதியான அந்தஸ்து ேகார முடியாது. சட்டவிரோதமாக வந்தவர்களால் குடியுரிமை கோர முடியாது’’ என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி டி.எஸ்.சிவஞானம் அமர்வில் கடந்த மாதம் 30-ம் தேதி விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுப்படி மனுக்களை பரிசீலித்து குடியுரிமை வழங்குவது அல்லது கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டிருக்கலாம். ஏன் அப்பீல் செய்யப்பட்டது என கேள்வி எழுப்பினர். பின்னர் மனுவிற்கு தமிழக அரசு மற்றும் ரிட் மனுதாரர்கள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இன்றைய  ஒத்திவைத்தனர். அதன் அடிப்படியில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில்; இலங்கை அகதிகள் விவகாரத்தில் சட்டத்திற்குட்பட்டே முடிவெடுக்க முடியும். இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், எனவே இவ்விவகாரத்தில் உணர்ச்சிப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது என தெரிவித்தது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு, எதிர் மனுதாரராக உள்ள இலங்கை அகதிகளுக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்பி பதில் மனு தாக்கல் செய்ய இருதரப்புக்கும் உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

நன்றி: தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>