டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுகள்: அமைச்சர் வழங்கினார்

செங்கல்பட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நேற்று பள்ளிக் கல்வித்துறை சார்பில், டாக்டர்  ராதா கிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுகளை மாவட்ட ஆட்சி தலைவர் .ஆ.ர.ராகுல்நாத், தலைமையில், காஞ்சிபுரம், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் மற்றும் செங்கல்பட்டு, சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் முன்னிலையில், ஊரக தொழிற்துறை அமைச்சர் .தா.மோ.அன்பரசன்  ஆசிரியர்களுக்கு வழங்கினார்.

பின்னர், ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: ‘‘மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற பொன்மொழிக்கு ஏற்ப ஆசிரியர்கள் சிறப்பாக பணிபுரிகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், புதியதாய் உதயமாகி நடைபெறும் இரண்டாவது ஆசிரியர் தினவிழா. செங்கல்பட்டு மாவட்டத்தில் 2021-22ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 2,08,041 மாணவர்களும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1,34,402 மாணவர்களும், தனியார் பள்ளிகளில் 2,80,403 மாணவர்களும் பயில்கின்றனர். இந்த பெருந்தொற்று காலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மற்றும் இணையதள வகுப்புகள் மூலம் பாடங்களை பயிற்றுவித்து, அவர்களின் முன்னேற்றத்திற்கு ஆசிரியர்கள் வழிவகை செய்துள்ளனர். 2021-22ஆம் கல்வியாண்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த பத்து ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்கள் மென்மேலும் உயர்ந்து மாணவச் செல்வங்களை உயர்த்த வேண்டும் என மனதார பாராட்டுகிறேன்.’’ என, தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கா.ரோஸ் நிர்மலா, மாவட்டக் கல்வி அலுவலர் அ.நாராயணன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: