திண்டுக்கல் பூட்டு, கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு!

திண்டுக்கல் பூட்டு, கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு!

ஆறாண்டு காலக் காத்திருப்புக்குப் பிறகு, திண்டுக்கல் பூட்டு மற்றும் கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் உற்பத்தி செய்யப்படும் அல்லது விளையும் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. ஏற்கெனவே தமிழகத்தில், காஞ்சிபுரம் பட்டு, மதுரை மல்லி ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. சமீபத்தில், கொடைக்கானல் மலைப்பூண்டு, பழனி பஞ்சாமிர்தம் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைத்தது. புவிசார் குறியீடு மூலம், குறிப்பிட்ட ஒரு பொருளை போலியாக விற்பனை செய்வதில் இருந்து தடுக்க முடியும்.

இந்நிலையில், புகழ்பெற்ற திண்டுக்கல் பூட்டுகளைத் தயாரிக்கும் நிறுவவனம் ஒன்று, திண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடு கோரி, அதனை வழங்கும் பதிவு அலுவலகத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் விண்ணப்பித்திருந்தது. அதேபோன்று, காரைக்குடியை ஆதாரமாகக் கொண்டு தயாரிக்கப்படும், புகழ்பெற்ற கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு கோரி, அமரர் ராஜீவ் காந்தி கைத்தறி நெசவாளர்கள் சங்கமும் கண்டாங்கி சேலை விற்பனை சங்கமும், கடந்த மே, 2013-ல் விண்ணப்பித்திருந்தது. பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு, சமீபத்தில் திண்டுக்கல் பூட்டுக்கும், கண்டாங்கி சேலைக்கும் புவிசார் குறியீடு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், அலிகர் மற்றும், மேற்கு வங்க மாநிலம் தாஸ் நகர் ஆகியவற்றில் தயாரிக்கப்படும் பிரத்யேக பூட்டுகளை விட திண்டுக்கல் பூட்டு தனித்துவம் மிக்கதாகும். இதில், 50-க்கும் அதிகமான வகைகளில் பூட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இது திண்டுக்கல்லில் 5 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்திற்குள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. நாகல்நகர், நல்லம்பட்டி, குடைபாறைப்பட்டி , யாகப்பன்பட்டி கிராமங்களில் மட்டும் 3,125 தொழிற்கூடங்கள் உள்ளன. இங்கு இரும்பு அதிகமாக கிடைப்பதால், பூட்டு உற்பத்தி பெரும்பான்மையாக நடக்கிறது. திண்டுக்கல்லில் சுமார் 3,000 குடும்பங்களுக்கு இத்தொழில் வாழ்வாதாரமாக இருக்கிறது. ஒரு நாளுக்கு 3-4 பூட்டுகளை ஒருவர் தயாரிக்கிறார் என, புவிசார் குறீயீடு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை ஆதாரமாகக் கொண்டு நெய்யப்படும் கண்டாங்கி சேலை, தடிமனான, பருத்தி மூலம் தரமாகத் தயாரிக்கப்படுகிறது. பாரம்பரியமான முறையில் கட்டங்கள், கோயில் வேலைப்பாடுகளுடன் கூடிய பெரிய பார்டர்கள் ஆகியவற்றுடன் கண்டாங்கி சேலை பார்ப்பவர்களைக் கவர்கிறது. அதன் பார்டர்கள் பெரும்பாலும் சேலையின் மூன்றில் இரண்டு பங்கு இடத்தை ஆக்கிரமிக்கிறது. குறிப்பாக, 5.10 முதல் 5.60 மி.மீ நீளம் கொண்டதாக பார்டர்கள் உள்ளன. திறன்மிக்க காரைக்குடி நெசவாளர்களால் கையால் நெய்யப்படுகிறது இந்த கண்டாங்கி சேலை. அந்த நெசவாளர்கள் ஒரு கண்டாங்கி சேலையை நெய்ய ஒரு வாரம் ஆகின்றது என, புவிசார் குறியீடு நிறுவனம் தெரிவிக்கின்றது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>