தமிழ்ப் பாதையே ‘தினத்தந்தி’யின் பாதை!

தமிழ்ப் பாதையே ‘தினத்தந்தி’யின் பாதை!

தமிழ்ப் பாதையே ‘தினத்தந்தி’யின் பாதை!

தமிழ்ச் சமூகத்தை நாளிதழ் வாசிப்பை நோக்கி அலையலையாகத் திருப்பிய ‘தினத்தந்தி’ 75 ஆண்டுகளை நிறைவுசெய்திருக்கிறது. சி.பா.ஆதித்தனார், பா.சிவந்தி ஆதித்தன், அடுத்து சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் என்று மூன்றாவது தலைமுறையாகக் குடும்ப நிர்வாகத்தால் இயக்கப்படும் ‘தினத்தந்தி’ இன்று இந்தியாவிலேயே அதிகம் வாசிக்கப்படும் பத்திரிகைகளில் முதல் வரிசையில் உள்ள நாளிதழ். அச்சு ஊடகத்தைத் தாண்டி வானொலி, செய்தித் தொலைக்காட்சி என்று விரியும் ‘தினத்தந்தி குழும’த்தின்’ பயணம் குறித்து அதன் இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தனிடம் பேசினேன். அவருடைய முதல் பேட்டி இது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


உங்கள் தாத்தா சி.பா.ஆதித்தனார் ‘தினத்தந்தி’யைத் தொடங்கியபோது, வாசிப்பை ஒரு வெகுமக்கள் இயக்கமாக்குவதையே அதன் பிரதான இலக்காக்கினார். 75 வருஷங்களுக்குப் பின் இன்று ‘தினத்தந்தி’யின் பிரதான இலக்காக நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள்?

தாத்தா முன் 75 வருஷங்களுக்கு முன் இருந்த அதே சவால்தான் நாளை என் மகன் காலத்திலும் ‘தினத்தந்தி’ முன் நிற்கும்போல் இருக்கிறது. படித்தவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கலாம். வாசிப்பு அப்படி அதிகரிக்கவில்லையே! தமிழ்ச் சமூகத்தைத் தொடர்ந்து வாசிக்க வைக்கிற அதே சவாலைத்தான் பிரதான இலக்காகக் கொண்டிருக்கிறோம்.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அச்சு ஊடகங்கள் வெகுவாக அடிவாங்கியிருக்கின்றன. மாறாக, ஆசியாவிலும் லத்தின் அமெரிக்க நாடுகளிலும் வளர்ச்சி யைப் பார்க்கிறோம். அதேசமயம், செல்பேசி புரட்சியும் சமூக வலைதளங்களின் வருகையும் அச்சு ஊடகங்களின் தன்மையைப் பெரியளவில் மாற்றியிருக்கிறது. எதிர்காலம் எப்படியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

மேற்கத்திய நாடுகளில் அச்சு ஊடகங்களுக்கு உருவான அதே சூழல், இங்கும் வரும் என்றே நினைக் கிறேன். அதேசமயம், கால மாற்றத்துக்கு முகங்கொடுக்க தயாராக இருப்பவர்களால் நீடித்திருக்க முடியும் என்றும் நம்புகிறேன். மேற்கத்திய நாடுகளிலுமேகூட நேரடியாகப் பத்திரிகை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், புதிய தொழில்நுட்பத்தை வரித்துக்கொண்டவர்கள் இணையத்தில் கோலோச்சுகிறார்களே!

செய்தித் தொலைக்காட்சிகளின் ஆதிக்கம், இணையத்தின் பரவலாக்கம் இவற்றுக்குப் பிறகு நாளிதழ்கள் வெறும் செய்தியை மட்டுமே தந்து தாக்குப் பிடிக்க முடியாது; செய்தி விமர்சனம் முக்கியம் என்ற சூழல் உருவாகியிருக்கிறது. இதுவரை ‘தினத்தந்தி’ செய்திகளை மட்டுமே தரும் பாரம்பரியத்தில் வந்துவிட்டது. இனியும் அப்படியே தொடர முடியும் என்று நினைக்கிறீர்களா?

தன்னுடைய பாரம்பரியத்திலிருந்து ‘தினத்தந்தி’ விலகாது. ‘செய்திகளை உடனுக்குடன் செல்பேசி வழியா கப் பார்த்துவிடும் சாத்தியமுள்ள இந்நாட்களில், மறுநாள் காலை பத்திரிகையில் அதே செய்தியைப் பார்க்க ஒரு வாசகருக்கு என்ன ஆர்வம் இருக்கும்?’ என்ற உங்கள் கேள்வி சரியானதுதான். ஆனால், தொலைக்காட்சிகளோ இணையமோ ஒரு செய்தியின் எல்லாக் கோணங்களையும் பின்கதைகளையும் முழுப் பரிமாணத்தையும் தருவதில்லை. அவற்றையெல்லாம் பத்திரிகைகள்தான் தர முடியும். ‘இணையத்தில் வராத செய்திகளில் கவனம் செலுத்துங்கள்’ என்பதுதான் ஆசிரியர் இலாகாவினருக்கு நான் அடிக்கடி சொல்லும் ஆலோசனை. இன்னொரு முக்கியமான விஷயம், போலிச் செய்திகள் (fake news). நம் காலகட்டத்தின் மிகப் பெரிய சவால் இது. செய்திகள் மழைபோலக் கொட்டும் இந்நாட்களில்தான் உண்மையான செய்தியைப் போலவே புகைப்படம், காணொலிகளுடன் தயாரிக்கப்படும் ‘போலிச் செய்தி’களும் கொட்டுகின்றன. உண்மையில் வாசகர்கள் குழம்பிப்போகிறார்கள். ‘எங்கே உண்மையான செய்தி கிடைக்கும்?’ என்று தேடுகிறார்கள். போலிகளிடமிருந்து பிரித்து யார் உண்மையான செய்திகளைக் கொடுக்க முடியும்? பாரம்பரிய ஊடகங்களுக்கு மட்டுமே அது சாத்தியம். அதேபோல, யாரையும் இருட்டடிப்பு செய்யாமல், எல்லாத் தரப்புகளின் செய்திகளுக்கும் அவரவருக்கு உரிய இடம் அளிக்கும் ஜனநாயகம் எல்லா இடங்களிலும் இல்லையே! ‘தினத்தந்தி’ மீது பொதுமக்கள் கொண்டிருக்கும் மிகப் பெரிய மதிப்பு, அதன் ஜனநாயகம் மற்றும் நம்பகத்தன்மையை அடிப்படையாகக் கொண்டது. அவற்றை உறுதிசெய்வதன் வாயிலாகவும் முழுப் பரிமா ணத்தோடு செய்திகளைக் கொடுப்பதன் வாயிலாகவும் களத்தில் தொடர்ந்து நிற்க முடியும் என்று நம்புகிறோம்.

பத்திரிகையைப் போல உங்களுடைய ‘தந்தி டிவி’ வெறுமனே செய்திகளோடு முடித்துக்கொள்வதில்லை. நிறைய விவாதங்களை நடத்துகிறது. பல கருத்துகள், கோணங்கள் பேசப்படுகின்றன. தொலைக்காட்சிக்கு ஒரு அணுகுமுறை, பத்திரிகைக்கு ஒரு அணுகுமுறை என்று இதைப் பார்க்கலாமா?

ஆமாம், அச்சு ஊடகத்தின் இயல்பு வேறு, காட்சி ஊடகத்தின் இயல்பு வேறு இல்லையா? ஆனால், தொலைக்காட்சியிலும்கூட நீங்கள் கவனித்துப் பார்த்தால் ஒரு விஷயம் புரியும், எங்களுடைய கருத்து என்று ஒன்று வராது. ஒரு விஷயத்தைப் பல்வேறு தரப்பினரும் விவாதிப்பார்கள். கருத்துச் சொல்வார்கள். நாங்கள் கருத்துச் சொல்ல மாட்டோம்.

நான்காவது தலைமுறையாக உங்கள் மகன் சிவந்தி ஆதித்தனும் நிறுவனத்துக்குள் வந்துவிட்ட நிலையில், தொடரும் ‘தினத்தந்தி’ குழுமத்தின் வெற்றிக்கான முக்கியமான ஆதாரமாக எதைக் கருதுகிறீர்கள்?

எங்கள் ஊழியர்கள். கடுமையான உழைப்பாளிகள். “நீங்கள் ‘தந்தி’யைப் பார்த்துக்கொள்ளுங்கள். உங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்பதுதான் திரும்பத் திரும்ப நாங்கள் ஊழியர்களிடம் சொல்வது. ஊழியர் நலனில் பெரிய கவனம் செலுத்துகிறோம். காலையில் பத்திரிகையைக் கொண்டுசெல்லும் ஒரு பேப்பர் பையனின் நலனும் எனக்கு முக்கியம். வேலை அவரிடம்தான் பூர்த்தியாகிறது!

நூற்றாண்டை நோக்கிய திட்டங்கள் என்ன?

நான் 1990-ல் பத்திரிகைத் துறைக்கு வந்தேன். சின்ன வயதிலிருந்தே அதுதான் கனவு. அமெரிக்காவில் அச்சுத் தொழில்நுட்பம் படித்துவிட்டு வந்தபோது, “ஒரு வருடம் பத்திரிகையின் எல்லாப் பிரிவுகளிலும் போய் வேலை பார். அதுதான் பயிற்சி” என்றார் அப்பா. அப்புறம் ‘மாலைமலர்’ நிர்வாகத்தைக் கொடுத்தார். மாலைப் பத்திரிகைகள் அடிவாங்கியிருந்த காலம் அது. ‘காலைப் பத்திரிகையில் வராத செய்திகள்தான் மாலைப் பத்திரிகையில் வர வேண்டும்’ என்ற சூழலை உருவாக்கித் தூக்கி நிறுத்தினோம். 1992-ல் ‘தினத்தந்தி’ பொன் விழா கொண்டாடியபோது, தமிழ்நாட்டில் தனியார் தொலைக்காட்சிகள் கிடையாது, இணையம் கிடையாது, பண்பலை வானொலி கிடையாது. இன்றைக்கு வானொலியில், தொலைக்காட்சியில், இணையத்தில் நாங்கள் வருவோம் என்ற கற்பனையும் எங்களுக்குக் கிடையாது. ஆனால், ஒவ்வொரு காலகட்டம் மாறும்போதும், நாங்கள் அதைச் சரியாக எதிர்கொண்டிருக்கிறோம். அடுத்த 25 வருஷங்கள் கழித்து என்ன செய்யப்போகிறோம் என்பதற்கும் உண்மையாகவே எங்களிடம் எந்தத் திட்டமும் கிடையாது. ஆனால், கால மாற்றத்துக்கு என்றைக்கும் ‘தினத்தந்தி’ தயாராக இருக்கும். துணிச்சலாக அது காலத்துக்கு முகம் கொடுக்கும்!

ஆதித்தனார் காலத்திலிருந்து, ‘தமிழ், தமிழர் நலன்’ என்று தமிழர் உரிமை பேசும் பத்திரிகையாகவே ‘தினத்தந்தி’ நீண்ட காலம் இருந்துவந்திருக்கிறது. இன்றைக்கு அதன் போக்கில் மாறுதல் தென்படுவதுபோல் இருக்கிறது. மாநிலங்களின் உரிமையைப் பறித்து மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தை உருவாக்கும் தேசியவாத அலையில் ‘தினத்தந்தி’யும் செல்கிறதா?

தமிழ்தான் சோறு போடுகிறது. தமிழ் வீழ்ந்தால், தமிழர் வீழ்ந்தால், ‘தினத்தந்தி’யும் வீழ்ந்துபோகும். அப்படியிருக்க எப்படி நாங்கள் பாதை மாற முடியும்? இந்தியா அதன் பன்மைத்துவத்தால் இயங்குவது. மாநிலங்கள் உரிமை அதன் மையச் சரடு. அது பறிபோவதை ஒருநாளும் நாம் அனுமதிக்க முடியாது. தமிழ், தமிழர் நலன், தமிழர் உரிமையை ஓங்கி ஒலிப்பதில் என்றும் ‘தினத்தந்தி’ தளராது. தமிழ்ப் பாதையே ‘தினத்தந்தி’யின் பாதை!

– சமஸ்,

  • நன்றி
    தி இந்து
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: