முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு இல்லையென்ற போதும், இந்த நோய் அண்டை மாநிலங்களிலிருந்து பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். தடுப்பு நடவடிக்கைகளுக்கான நிதி உடனடியாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வருகிற 31-ந்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், தியேட்டர்கள், விளையாட்டு அரங்குகள் ஆகியவற்றை மூடி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகளை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய நான்கு விமான நிலையங்களிலும் வெளிநாட்டிலிருந்து பயணிகள் வருகின்றனர். மத்திய அரசு சில வெளிநாட்டுப் பயணிகள் வருகையை தடை செய்துள்ளது. இருப்பினும், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இங்கு திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டால், தேவைக்கேற்ப அவர்களை உலக சுகாதார நிறுவனத்தின் வழிமுறைகளின் படி, 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க தேவையான வசதிகளை இயன்றவரை அந்தந்த விமான நிலையங்களின் அருகிலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எல்லையோர மாவட்டங்களில் உள்ள கண்காணிப்பு சோதனை சாவடிகளில், நோய் கண்காணிப்புப் பணிகள் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வருவாய்த்துறை, காவல்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, மாநில பேரிடர் நிதியிலிருந்து சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறைக்கு ரூ.30 கோடி, போக்குவரத்துத் துறைக்கு ரூ.5 கோடி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ரூ.4 கோடி, நகராட்சி நிர்வாகத்திற்கு ரூ.6 கோடி, ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.5 கோடி, பேரூராட்சி இயக்குநரகத்துக்கு ரூ.2 கோடி, இந்து சமய அறநிலையத் துறைக்கு ரூ.3 கோடி, பள்ளிக் கல்வி மற்றும் உயர்க்கல்வித் துறைக்கு ரூ.2 கோடி, அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.0.5 கோடி மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு ரூ.2.5 கோடி ஆக மொத்தம் ரூ.60 கோடி உடனடியாக வழங்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் குறிப்பாக, கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களுக்கு வரும் மக்களுக்கு நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு எற்படுத்தவும், சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்களைக் கண்டறியவேண்டும் என இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
டாஸ்மாக் பார்களில் குடிமகன்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதால் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் பார்களை மட்டும் மூடவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளை 31-ந்தேதி வரை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதால் 15 நாட்கள் வரையில் மாணவர்களுக்கு விடுமுறை கிடைத்துள்ளது.
இதனை பயன்படுத்தி பெற்றோர்கள் சுற்றுலா தலங்களில் அதிக எண்ணிக்கையில் குவிந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு அதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் சுற்றுலா செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் இதனை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களுக்கு செல்வதையும் மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தர்மபுரி அருகே அதியமான் கோட்டை காலபைரவர் கோவிலுக்கு வந்த கர்நாடகம் மற்றும் ஆந்திர பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். உள்ளூர் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேனி மாவட்டத்தில் 1958-ம் ஆண்டு கட்டப்பட்ட வைகை அணை 62 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக மூடப்பட்டுள்ளது. ஆண்டிப்பட்டி அருகே உள்ள சின்னசுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் பழமை வாய்ந்த அசெம்பிளி தியேட்டர் உள்ளிட்ட 2 தியேட்டர்களும் மூடப்பட்டன. கொரோனா வைரஸ் பீதியால் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்து காணப்பட்டது.
தாவரவியல் பூங்கா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளிலும் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் குறைவாக இருந்தது.
பெங்களூருவில் இருந்து ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய ஊர்களுக்கு இயக்கப்படும் கர்நாடக அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் பெரும்பாலானவை ரத்து செய்யப்பட்டன.
தமிழக-கேரள எல்லையான வாளையாரில் தீவிர பொது சுகாதாரத்துறை சார்பாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 13 இடங்களில் இந்த கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினிகள் தெளிக்கப்படுகிறது.
பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்குப் பயணிப்பதையும், பொது இடங்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதையும் அடுத்த 15 நாட்களுக்குத் தவிர்க்கவும், கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்கு வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்த நபர்கள் பயணம் செய்வதைத் தவிர்க்கவும்.
அதே செய்திக்குறிப்பில், பொது மக்கள் சுகாதரமாக இருக்கவேண்டிய அவசியத்தையும் குறிப்பிட்டுள்ளார். பொது மக்கள் அடிக்கடி கைகளை கழுவி சுகாதாரமாக இருக்க வேண்டும் என்றும், குழந்தைகளின் சுகாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். நோய்க்கான அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுகவும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.