பண்பிலும் மாணிக்கமாகவே திகழ்ந்தார்!: மறைந்த பாடகர் மாணிக்க விநாயகம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!!

மறைந்த பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். முன்னதாக முதலமைச்சர் வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், பிரபல திரைப்பட பாடகர் வழுவூர் மாணிக்க விநாயகம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். மாணிக்க விநாயகம் பெயரை போலவே பண்பிலும் மாணிக்கமாகவே திகழ்ந்தார் என புகழாரம் சூட்டியிருந்தார். மேலும், தலைவர் கலைஞர் மீதும், என் மீதும் அளவற்ற அன்பை பொழிந்தவர் என குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து, மாணிக்க விநாயகம் உடலுக்கு திரைத்துறையினரும், கலைத்துறையினரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதன்படி இன்று காலையில் திருவான்மியூரில் வைக்கப்பட்டிருக்கும் மாணிக்க விநாயகம் உடலுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அவருடன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இருந்தார். பிரபல பின்னணி பாடகரும், குணச்சித்தர நடிகருமான மாணிக்க விநாயகம் (78) உடல்நலக்குறைவால் காலமானார். அண்மையில் இதயக்கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில் நேற்று மாலை மாரடைப்பால் காலமானார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில், 800க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். திருடா திருடி, வேட்டைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்தர வேடங்களில் நடித்துள்ளார். பிரபல பரதநாட்டிய ஆசிரியரான வழுவூர் ராமய்யா பிள்ளையின் மகனான பாடகர் மாணிக்க விநாயகம், ஏராளமான பக்தி பாடல்களை பாடி இசையமைத்துள்ளார். மாணிக்க விநாயகம் உடலுக்கு இன்று மாலை இறுதி சடங்குகள் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
 
நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: