தமிழ்நாட்டில் அருகிவரும் தோல்பாவைக் கூத்தை மீட்கும் முயற்சி: நிழல் வடிவுக்கு ஒளியூட்டும் தன்னார்வலர் குழு…!!


தமிழ்நாட்டில் அருகிவரும் நிலையிலுள்ள பாரம்பரிய தோல்பாவைக் கூத்துக் கலையை காலத்திற்கேற்ப நவீனப்படுத்தி கலையையும், கலைஞர்களின் வாழ்வையும் மீட்டு எடுக்கும் புதிய முயற்சி தன்னார்வலர்களால் ஈரோட்டில் தொடங்கப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்கள் முதல் திருக்குறள் வரை பல்வேறு நூல்களில் சுட்டிக் காட்டப்படும் பாவைக்கூத்தின் ஒரு அங்கம் தான் தோல்பாவைக் கூத்து. நாடகத்தின் நிழல் வடிவமான தோல்பாவைக் கூத்துக்காக பதப்படுத்தப்பட்ட ஆட்டுத்தோலில் கதை மாந்தர்களின் வண்ணச் சித்திரங்கள் தீட்டப்படும்.

அவற்றின் மூலம் வெண்திரைக்குப் பின்னால் விளக்கொளியில் பாவை ஆட்டியின் திறமையான இயக்கத்தால் பார்வையாளர்களுக்கு கதையோடத்தை கடத்துவதே தோல்பாவைக் கூத்தாகும். திரைப்படங்கள், நாடகங்களுக்கு முன்னோடியாக அரிச்சந்திரன், நல்லதங்காள், ராமாயணம் போன்ற கதைகளை உயிர்ப்புடன் மக்களிடையே கொண்டு சேர்த்தது தோல்பாவைக் கூத்து தான். தலைமுறைகள் கடந்து வழிவழியாய் உயிர்ப்புடன் விளங்கிய இந்த கலை டிஜிட்டல் யுகத்தின் ஆதிக்கத்தால் ஒளியிழந்து வருகிறது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பாவையாட்டிகள் மாற்று தொழில்களுக்கு சென்றதால் பாரம்பரியக் கலை அருகிவருகிறது.

காலத்தின் சூழலுக்கு ஏற்ப பரிணாம வளர்ச்சி பெறாததும், இளம் தலைமுறையினரிடம் இதன் மீதான ஈர்ப்பும் இல்லாததும் தோல்பாவைக் கூத்து வீழ்ச்சிக்கு முக்கியகாரணமாக கூறப்படுகிறது. அழிந்து வரும்  தோல்பாவைக் கூத்தை மீட்டெடுக்க திட்டமிட்ட ஈரோட்டைச் சேர்ந்த தன்னார்வலர்கள் நெல்லையிலிருந்து கலைஞர்களை அழைத்து வந்து சிறார்களுக்கு திரையிட்டு விழிப்புணர்வை தொடங்கியுள்ளனர். காட்டூன்களிலும், செல்போன்களிலும் மூழ்கி கிடைக்கும் குழந்தைகளின் ஆர்வத்தை பெருக்க காட்டூன் கதாப்பாத்திரங்களை வடிவமைத்து அதற்கேற்ற கதைகளை திரையிடவும் திட்டமிட்டுள்ளனர்.

இதன் மூலம்  தோல்பாவைக் கூத்து புத்துணர்ச்சி பெறுவதுடன் கலைஞர்களின் வாழ்வும் மேம்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மக்களுக்கு தேவையான கருத்துப் பரவலுக்கு சிறந்த ஊடகமாக விளங்கும் இந்த கலையை பள்ளிகளிலும், அரசு நிகழ்ச்சிகளிலும் இடம் பெறச்செய்வதன் மூலம் மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என நம்பிக்கை தெரிவிக்கும் கலைஞர்கள் சங்கம் தொட்டு செழுமையாய் திகழும் இந்த கலை தங்களுக்கு பின்னரும் தொடர வேண்டும் என்பதையே விருப்பமாக தெரிவிக்கின்றனர்.       

நன்றி : தினகரன்               

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>