சென்னைப் புழல் சிறையில் கொடுமைக்கு உள்ளாகிய இலங்கை சிறைவாசி!

சென்னைப் புழல் சிறையில் கொடுமைக்கு உள்ளாகிய இலங்கை சிறைவாசி!

சென்னைப் புழல் சிறையில் கொடுமைக்கு உள்ளாகிய இலங்கை சிறைவாசி!

சென்னைப் புழல் சிறையில் உள்ள இலங்கை சிறைவாசி ஒருவர், நீதிமன்றத்துக்கு எழுதிய கடிதம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னைப் புழல் சிறையில் முதல் வகுப்பு கைதியாக அடைக்கப்பட்டிருக்கிறார் இலங்கையைச் சேர்ந்த அசோக்குமார். புழல் சிறையில் நடந்து வரும் கொடுமைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்ய இருக்கிறார். அந்த மனுவில் இடம்பெற்றுள்ள விவரங்கள் பின்வருமாறு:

`நேற்று மாலை திடீரென என்னை `ஏ’ வகுப்பில் இருந்து செல்லுலார் பிளாக் (Cellulor block) – தனியறைக்கு மாற்றம் செய்துவிட்டனர். காரணம் ஏதும் கூறவில்லை. `கண்காணிப்பாளர் கூறினார்’ என்று மாற்றம் செய்துவிட்டனர். தனியறையில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறைவாசிகள், சிறைக் குற்றம் புரிந்த சிறைவாசிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அந்தத் தொகுதியில் `ஏ’ வகுப்பு சிறைவாசியை அடைக்க வேண்டிய அவசியம் இல்லை. இது துன்புறுத்தும் நடவடிக்கையாகும். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் கண்காணிப்பாளர் செந்தில்குமார் என்னிடம், `இலங்கை சிறைவாசிதானே நீ, எதாவது செல்போனில் பேசுகிறாயா?’ என்றார். ` இல்லை அய்யா…நான் இன்னும் 3 மாதங்களில் விடுதலையாக உள்ளேன். வாரம் இரண்டு முறை என் மனைவியை நேர்காணலில் சந்திக்கிறேன். நான் சிறையில் எந்தத் தவறான செயலிலும் ஈடுபடவில்லை’ என்று கூறினேன். இருப்பினும், திடீரெனப் பழிவாங்கும் விதமாக மனநலம் பாதிக்கப்பட்ட சிறைவாசிகள் அறையில் அடைக்கப்பட்டுள்ளேன்.

சந்தேகம் என்ற பெயரில், இலங்கை நாட்டைச் சேர்ந்த சிறைவாசி என்றாலும் சந்தேகப்படுவதும், கேவலமாக நடத்துவதும் மனவருத்தத்தைத் தருகிறது. மேலும் இந்தச் சிறையிலிருந்து வேறு மாவட்டங்களில் உள்ள சிறைக்கு மாற்றம் செய்யவும் அவருக்கு (கண்காணிப்பாளர்) அதிகாரம் உள்ளது. ஆதலால், மன நிம்மதியின்றி, பாதுகாப்பற்ற சூழலில் உள்ளேன். தாங்கள் ஆணையின்படி, தங்கள் மேற்பார்வையில்தான் சிறையில் உள்ளேன். கடந்த மாதம் திருவள்ளூர் மாவட்ட நீதிபதி சிறைக்கு வந்து திடீரெனப் பார்வையிட்டபோது, அனைத்துச் சிறைவாசிகளையும் சந்தித்தார். அப்போது இதுபோன்ற செயல்கள் குறித்து சிறைவாசிகள் அவரிடம் கூறியபோது, `அப்படி எல்லாம் இவர்கள் செய்ய முடியாது. உங்கள் பிரச்னைகளைப் பற்றி நீதிமன்றத்தில் பதிவு செய்துவிடுங்கள். நீங்கள் தாக்கப்பட்டாலோ, துன்புறுத்தப்பட்டாலோ உங்களைக் கட்டாயப்படுத்தி எதாவது கேட்டாலோ அதைத் தயங்காமல் நீதிபதியிடம் தெரிவித்துவிடுங்கள்’ என்றார்.

அய்யா… எனக்குப் பெரிய அளவில் யாரும் இல்லை. உங்களை மட்டும்தான் மலை போல நம்பியுள்ளேன். நான் தாக்கப்பட்டாலோ அல்லது வேறு சிறைக்கு மாற்றப்பட்டாலோ அதற்கு கண்காணிப்பாளர் செந்தில்குமார்தான் பொறுப்பு. அவர் மேல் இதுவரையில் முப்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சரியான முறையில் வழக்கை நிரூபிக்காததால் மிஸ்டேக் ஆஃப் ஃபேக்ட் என்ற அடிப்படையில் பல வழக்குகள் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது. சிறைக்குள் நான்கு சுவர்களுக்குள் அவர் மீது புகார் அளிப்பதும், அதை நிரூபிப்பதும் சாத்தியமில்லாத ஒன்று. ஆதலால், நீதிமன்றத்தில் எனக்குக் கிடைத்த வாய்ப்பில் பதிவு செய்கிறேன். எனக்கு உடல்ரீதியான எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாமலும் ஏன் தொகுதி மாற்றம் செய்தீர்கள் என்ற விளக்கத்தையும் என் மீது குற்றம் ஏதும் இல்லை என்றால் `ஏ’ வகுப்பு தொகுதியில் அடைக்கும்படியும் ஆணை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: