வீரதீர செயலுக்காக காவல், தீயணைப்பு, சிறைத்துறை உள்ளிட்ட சீருடை பணியாளர்கள் 134 பேருக்கு அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு!!

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 134 தமிழக காவல்துறை  மற்றும் சீருடை அலுவலர்கள்/ பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணைஇட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும்  மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை,   விரல்ரேகைப்  பிரிவு  மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும்,  பணியில்  ஈடுபாடு  மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர்  15-ம் நாள் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு,   வழங்கப்பட்டு  வருகின்றன.
          
இந்த ஆண்டு, காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 100 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் தீயணைப்பு வீரர்  முதல் மாவட்ட அலுவலர் நிலை வரையிலான 8 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், சிறைத்துறையில் முதல்நிலை சிறைக்காவலர் முதல் சிறை கண்காணிப்பாளர்  வரையிலான 10 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும்,  ஊர்க்காவல் படையில்  உதவி படை தளபதி முதல் வட்டார தளபதி வரையிலான 5 ஊர்க்காவல் படை அலுவலர்களுக்கும்,  விரல்ரேகைப்  பிரிவில்  2  கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும்  மற்றும் தடய அறிவியல் துறை பிரிவில் இளநிலை அறிவியல் அலுவலர் மற்றும் துணை இயக்குநர் ஆகியோருக்கும், அவர்களின் மெச்சத்தகுந்த பணியினை அங்கீகரிக்கும் வகையில் “மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள்” வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

மேலும், தமிழக முதலமைச்சரின் வீரதீர செயலுக்கான தீயணைப்புத்துறை பதக்கம் மற்றும் தலா ரூ.5 இலட்சம் பண வெகுமதி,  14.11.2020 அன்று  மதுரையில் உள்ள சஞ்சய் டெக்ஸ்டைல் என்ற நிறுவனத்தில், நிகழ்ந்த தீ விபத்தில் இருந்து பல மனித உயிர்களையும்,  சொத்துக்களையும் காப்பாற்றிய நிலையில் கட்டிட இடிபாடுகளுக் கிடையே சிக்கி பலத்த காயங்களுடன் தங்கள் உயிரைத் தியாகம் செய்த தீயணைப்பு வீரர்கள் திரு.கு.சிவராஜன் மற்றும் திரு.பெ.கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவர்  உட்பட 7 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை வீரர்களுக்கு அவர்கள் ஆற்றிய வீர தீர செயல்களுக்காக வழங்கப்படுகிறது.மேற்கண்ட பதக்கங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும்,’எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>