திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்துள்ள வெம்பாக்கம் வட்டத்திலுள்ள புன்னை புதுப்பாளையம் கிராமத்தில் 172 அரிய பழந்தமிழ் நூல்களுடன், 102 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது இலவச பொது நல நூலகம்.
இந்தக் கிராமத்தைச் சேர்ந்த புலவர் பு.ப.மாசிலாமணி முதலியாரின் நன்முயற்சியாலும், கிராமப் பெரியவர்களான ம.க.நடேச முதலியார், சோ.தங்கவேலு முதலியார், க.பரசுராம முதலியார், க.நடராஜ முதலியார், ம.ரங்கசாமி முதலியார், அ.வேதாசல முதலியார், க.குப்புசாமி முதலியார், தி.முனிசாமி முதலியார், க.ஆதிமூல முதலியார் ஆகியோரின் ஒத்துழைப்பாலும் கடந்த 27.11.1914 அன்று சிறிய வாடகைக் கட்டடத்தில் தரும திராவிடக் கலாசாலை என்ற பெயரில் சங்கம் முதலில் தொடங்கப்பட்டது.
இந்தச் சங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா சென்னையில் ஸ்ரீமான் கோ.வடிவேலு செட்டியார் தலைமையில் நடைபெற்ற போது, புன்னை புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவரும், சென்னையில் வசித்து வந்தவருமான பிரம்மஸ்ரீ ந.சுப்பிரமணிய ஐயர் அவர்களால் இந்தச் சங்கத்துக்கு சமரச சன்மார்க்க சங்கம் என்று பெயர் சூட்டப்பட்டது. அந்தக் காலத்தில் வெளிவந்த சுதேசமித்ரன், ஆனந்தபோதினி, பாலவினோதினி, குடியரசு, தேசபந்து உள்ளிட்ட 17-க்கும் மேற்பட்ட பத்திரிகைகளில் பல கட்டுரைகள் இந்தச் சங்கத்தைச் சேர்ந்தவர்களால் எழுதப்பட்டு, பிரசுரிக்கப்பட்டுள்ளன. மேலும், பிரசங்கம் மூலமாகவும், புத்தக வெளியீட்டின் மூலமாகவும், துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும், சமய வளர்ச்சிக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் இவர்கள் பாடுபட்டிருக்கிறார்கள்.
அரிய வகை நூல்கள் :
சமரச சன்மார்க்க சங்கத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த இலவச பொதுநல நூலகத்தில் அரிய வகை நூல்களான
1862-ஆம் ஆண்டு வெளிவந்த சபாபதி முதலியாரின் மதுரை 64 திருவிளையாடல் சற்குரு மாலை,
1889-ஆம் ஆண்டு வெளிவந்த சூரிய நாராயண சாஸ்திரியாரின் தமிழ்மொழி வரலாறு,
1894-ஆம் ஆண்டு வெளிவந்த மாத்ரு பூதையரின் நந்த மண்டல சதகம் (தொல்காப்பியத்தை ஒப்பிட்டு ஸ்ரீகிருஷ்ணரின் கதை),
1897-ஆம் ஆண்டு வெளிவந்த திருப்பதி திருமலையான் குறித்த வடவேங்கட நாராயண சதகம்,
1899-ஆம் ஆண்டு வெளிவந்த சபாபதி நாவலர்,
1905-ஆம் ஆண்டு வெளிவந்த திருஞானசம்பந்தரின் சரித்திரம் குறித்த ஓரடி சிந்து,
1911-ஆம் ஆண்டு வெளிவந்த அத்வைதம் தமிழ்மொழி பெயர்ப்பு நூலான தத்துவாநூ,
1914-ஆம் ஆண்டு வெளிவந்த ஆனந்தபோதினி இதழ் (ஆங்கில மோகம் குறித்தும், அதனால் தமிழ் வளர்ச்சிக்கு ஏற்பட்டுள்ள தடைகள் குறித்தும் 100 ஆண்டுகளுக்கு முன்பே வெளிவந்த இதழ்),
1916-ஆம் ஆண்டு வெளியான தொண்டை மண்டல சரித்திரம் உள்ளிட்ட 177-க்கும் மேற்பட்ட அரிய வகை நூல்கள் மற்றும் 150 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த நூல்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு :
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் விஜயராகவன் தலைமையில், ஆராய்ச்சி நிறுவனத்தின் நூலகர் பெருமாள்சாமி, ஆராய்ச்சி மாணவர்கள் பத்மபிரியா, அருட்பாமணி, மூத்த தமிழ் அறிஞர்கள் என பலர் புன்னை புதுப்பாளையத்தில் சமரச சன்மார்க்க சங்க நூலகத்தை கடந்த 2015-ஆம் ஆண்டில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர். மேலும், இந்த நூலகத்தில் எங்கும் கிடைக்காமல் பாதுகாக்கப்பட்டு வந்த பழைமையான 177 நூல்களை மறு பிரசுரத்துக்கு அனுப்பி, அவற்றில் சில நூல்களை புதுப்பித்து, புதிய புத்தகங்களாக இந்த நூலகத்துக்கு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தினர் வழங்கி, பெருமை சேர்த்துள்ளனர்.
சமரச சன்மார்க்க சங்கத்தால் நடத்தப்பட்டு வரும் இந்த நூலகம் வட ஆற்காடு மாவட்டத்தில் தோற்றுவிக்கப்பட்ட நூலகங்களில் முதல் நூலகம் என்ற பெருமை பெற்றதாகும். சிறிய கிராமமான புன்னை புதுப்பாளையத்தில் சமரச சன்மார்க்க சங்கத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இலவச பொதுநல நூலகம் மேலும் வளர வேண்டும். வானும், மண்ணும் உள்ளளவும் அதன் பணி தொடர வேண்டும். முன்னோர்கள் செய்த பணியை சிறப்பாக தொடந்து செயல்படுத்துவோம் என நூலகத்தை நிர்வகித்து வரும் க.சிவகுமார் தலைமையிலான 40 பேர் குழுவினர் முழுமனதுடன் நூலகத்தை நடத்தி வருவது பாராட்டுக்குரியதாகும்.