டெல்லி: 2018 -2019ம் ஆண்டுகளில் அப்போதைய அதிமுக அரசின் காலதாமதம் உள்ளிட்ட அலட்சிய நடவடிக்கைகளால் ஒன்றிய அரசு வழங்க வேண்டிய பல கோடி ரூபாய் மானியத்தை பெற முடியாத நிலை ஏற்பட்டது சி.ஏ.ஜி அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. வருவாய் மற்றும் பொருளாதார பிரிவு தொடர்பான 2019 மார்ச் உடன் முடிவடைந்த நிதி ஆண்டுக்கான சி.ஏ.ஜி எனப்படும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை அதிகாரியின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தேசிய உணவு பதப்படுத்துதல் திட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்பட்ட கால தாமதத்தால் ஒன்றிய அரசின் மானியம் 16 கோடியே 26 லட்சம் ரூபாய் விடுவிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல நிறைவுபெற்ற ரயில்வே பால பணிகளுக்கான அறிக்கையை சமர்பிப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தால் 120 கோடி ரூபாய் நிலுவை தொகை பெறப்படவில்லை என்றும் சி.ஏ.ஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய பால்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் உபகரணங்கள் கொள்முதல் செய்வது மற்றும் நிறுவுவதில் உரிய வகையில் நிதியை பயன்படுத்தாததால் ஒன்றிய அரசின் மானியம் 11 கோடியே 52 லட்சம் ரூபாய் பெற முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் சி.ஏ.ஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் ஒழுங்குமுறையை பொதுப்பணித்துறை கள அலுவலர்கள் போதுமான அளவு செயல்படுத்தாததால் அரசுக்கு ஆண்டுக்கு 71 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் சேவைக்கட்டண இழப்பு ஏற்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2016 – 2017ம் நிதியாண்டில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு அங்கீகாரம் பெறுவதில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக 9 கோடியே 10 லட்சம் ரூபாய் மானிய தொகையை பெற இயலவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நன்றி : தினகரன்